பேராவூரணி கழக ஆர்ப்பாட்டத்தில் ‘எவிடென்ஸ்’ கதிர் பேச்சு

ஜாதி ஆணவ படுகொலை வழக்குகளில் குற்றவாளிகளைக் காப்பாற்றும் காவல்துறை

ஜாதி மறுப்பு திருமணம் செய்த சங்கர் உடுமலைப்பேட்டையில் ஜாதிய வெறியர்களால் ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பேராவூரணி அண்ணா சிலை அருகில் திராவிடர் விடுதலைக் கழக தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமையில் மார்ச் 25ம் தேதி மாலை 5 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் பங்கேற்று கண்டன உரையாற்றினார். அவர் தனது உரையில் –

தமிழகத்தில் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் மீது அவர்களை ஒடுக்கு வதற்காக, அவர்களின் குரல்களை நசுக்கு வதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தை போராளிகள் மீது அரசு பாய்ச்சுகிறது. நியாயப்படி ஜாதியின் பெயரால் ஆணவ படு கொலை செய்பவர்களையும், கொலையை தூண்டுபவர்களையும் தான் அந்த சட்டத் தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும்.

ஆணவ கொலையாளிகள் மீது குற்றவியல் நடைமுறை சட்டம் 174 பிரிவு சந்தேக மரணம் என்றும், 202 பிரிவின் படி காவல்துறைக்கு முன் தகவல் கொடுக்காமல் உடலை எரித்துவிட்டார்கள் என்ற பிரிவுகள் மட்டும் போட்டு ஆணவ படுகொலை செய்யும், குற்றவாளிகளுக்கு சாதகமாகவே வழக்கு நடத்தப்படுகிறது.

ஜாதி ஆணவ கவுரவ கொலைகளை செய்வது பெரும்பாலும் அப்பா, அண்ணன், மாமன் என குடும்ப உறுப் பினர்களே என்பதால், கொலை வழக்கை யார் நடத்துவது? குடும்ப உறுப்பினர்கள் அக்கறை செலுத்தாதபோது வழக்கை நடத்தும் காவல்துறையும் அக்கறையின்றி வழக்கை முடித்தால் போதும் என, வழக்கு நீர்த்துப் போகும் வகையில் செயல்படு வதால் குற்றவாளிகள் தண்டனை ஏது மின்றி எளிதில் தப்பி விடுகின்றனர். எனவே ஆணவ படுகொலைகளை தடுக்கத் தவறிய தமிழக அரசும் ஒரு குற்றவாளிதான். ஜாதிய ஆணவப் படு கொலையில் பெரும்பாலும் பாதிக்கப்படு வது தாழ்த்தப்பட்ட தலித் இனத்து பெண் கள்தான். ஆனால் தலித் இளைஞர்கள் ஏமாற்றுவதாக சில  ஜாதி கட்சி அமைப்புகள் உண்மைக்கு புறம்பாக பேசி வருகின்றனர். திமுக, அதிமுக கட்சியினர் சாதிய ஆணவ படுகொலைகளை கண்டிப்ப தில்லை. ஏனென்றால் இரண்டு கட்சியி லுமே சாதிய வெறியர்கள் உள்ளனர் என்பதே உண்மை.

தென்மாவட்டங்களில் இளங் காதலர்கள் ஜாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டதால் ஆதிக்க சாதியினரால் கொத்துக் கொத்தாக ஆணவ படுகொலை செய்யப்படுகின்றனர். புள்ளிவிவர கணக் கெடுப்பின்படி ஆண்டுக்கு 1000 பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்றால் அதில் 12 சதவீதம் காதல் சம்பந்தப்பட்ட படுகொலைகளாக உள்ளன. ஆண்டிற்கு 1000 தற்கொலைகள் என்றால் 20 சதவீதம் காதல் சம்பந்தப்பட்ட பிரச்சினை தான் காரணம் என அறிக்கை தெரிவிக்கிறது. தமிழகத்தில் நடக்கும் சாதிய ஆணவ படுகொலைகளை கண்டிக்காத, தடுத்து நிறுத்த அக்கறையில்லாத, தமிழக அரசையும் குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும். சாதிய ஆணவ படுகொலை களுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் வலுவாக குரல் எழுப்ப வேண்டும்” என்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக மக்கள் புரட்சிக் கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆறு. நீலகண்டன், திராவிடர் விடுதலைக் கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, இசிஐ திருச்சபை ஆயர் த.ஜேம்ஸ், மெய்சுடர் ஆசிரியர் நா.வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ராஜமாணிக்கம், மமக மாவட்ட செயலாளர் கப்பார், பெரியார் பெருந்தொண்டன் தஞ்சை பெரியார் சித்தன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பூபதி கார்த்திகேயன், எழுத்தாளர் துரைகுணா, பெரியார் அம்பேத்கர் மக்கள் கழக அமைப்பாளர் ஆசிரியர் செல்வம், திராவிடர் விடுதுலைக்கழக பேராவூரணி ஒன்றிய அமைப்பாளர் அ.கோவிந்தன், சேது ஒன்றிய அமைப்பாளர் சுப.ஜெயந்திரன், நீடா ஒன்றிய செயலாளர் செந்தமிழன், கோட்டூர் ஒன்றிய செயலாளர் தென்பரை பன்னீர்செல்வம், பேராவூரணி அ.நீல கண்டன் உட்பட ஏராளமான திவிக பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்.

செய்தி: மன்னை இரா.காளிதாசு

பெரியார் முழக்கம் 31032016 இதழ்

You may also like...