கழகம் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் பெரியார் சிலைகளை மூடமாட்டோம்
“தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதுமுள்ள பெரியார் சிலைகளை மூடும் எண்ணம் இல்லை; சிலையில் பதிக்கப்பட்டுள்ள பெரியார் கருத்துகளும் மூடப்படாது” என்று உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து திராவிடர் விடுதலை கழகத்தின் அமைப்பு செயலாளர் இரத்தினசாமி உயர்நீதிமன்றத்தில் கழக சார்பில் மனுதாக்கல் செய்திருந்தார்.
”மூடநம்பிக்கை சமுதாயத்தில் உள்ள சாதி வேற்றுமையை ஒழித்து, பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர் தந்தை பெரியார். பெரியாரின் கொள்கையை எங்கள் அமைப்பு மக்களுக்கு எடுத்துக்கூறி வருகிறது. இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. கோவையில் உள்ள தேர்தல் அதிகாரிகள், எங்கள் அமைப்பின் நிர்வாகிகளிடம் வந்து தந்தை பெரியாரின் சிலையை துணிகளை கட்டி மூடவேண்டும். திராவிடர் விடுதலை கழகத்தின் கொடிகளை பறக்க விடக்கூடாது என்று கடந்த 5-ந்தேதி உத்தரவிட்டுள்ளனர்.
எங்களது இயக்கம், தேர்தல் அரசியலில் பங்கேற்காத சமுதாய மாற்றத்துக்கான இயக்கம். அரசியல் கட்சி கிடையாது. தேர்தலிலும் போட்டியிடவில்லை. அதே போல, தந்தை பெரியார் அரசியல் கடசியின் தலைவர் இல்லை. அவர் சமூக மாற்றத் துக்காகப் போராடிய தலைவர். பெரியாரின் சிலையை மறைக்க தேவையில்லை என்று ஏற்கெனவே தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு விவரங் களை, கோவை தேர்தல் அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியும், அவர்கள் பெரியாரின் சிலையை துணியால் கட்டி மறைத்துவிட்டனர். எனவே, “தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள பெரியார் சிலையை மறைக்க கூடாது; சிலைக்குக் கீழே உள்ள கருத்துகளையும் மறைக்கக் கூடாது” என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.விமலா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கழக சார்பில் வழக்கறிஞர் துரை. அருண், தேர்தல் ஆணையத்தின் சார்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ஆகியோர் வாதிட்டனர். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
“தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பெரியாரின் சிலையை மறைக்கும் எண்ணம் தேர்தல் ஆணையத்திடம் இல்லை” என்றார். இதற்கு என்ன அர்த்தம் என்றால், மாநிலம் முழுவதுமுள்ள பெரியாரின் சிலைகள் மறைக்கப்படாது என்பதாகும். மேலும், “கொடியை பொருத்தவரை, தேர்தல் ஆணையத்திடம் மனுதாரர் கோரிக்கை மனு கொடுக்கவேண்டும். அந்த மனுவை தேர்தல் ஆணையம் விரைவாக பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இந்த மனுவை முடித்து வைக்கிறோம்” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
பெரியார் முழக்கம் 17032016 இதழ்