சூத்திரனுக்கு சட்டப்படி திருமண உரிமையே மறுக்கப்பட்டது

மேட்டூர் கழகத் தோழர் செ. மார்ட்டின்-விஜயலட்சுமி மகள் வி.மா.அன்புக்கரசி, பி.ஈ., கொளத்தூர் கு. மணி-மணிமேகலை ஆகியோரின் மகன் ம.திலிப்குமார், எம்.பி.ஏ. ஆகியோரின் ஜாதி-மத மறுப்பு மணவிழா 21.8.2016 அன்று கொளத்தூர் எஸ்.எஸ். திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடந்தது. இதில் மணவிழா அழைப்பிதழ் மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. 1958இல் பெரியார் பேச்சு தொகுப்பாக ‘வாழ்க்கைத் துணை நலம்’ என்ற தலைப்பில் வெளி வந்த நூலோடு இணைத்து, அழைப்பிதழ் தயாரிக்கப்பட் டிருந்தது. தந்தை பெரியாரின் சிறப்பான கருத்துகள் இடம் பெற்றிருந்த இந்த நூலில், ‘சூத்திரனுக்கு திருமண உரிமையே கிடையாது’ என்று பிரிட்டிஷ் இந்தியாவில் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பை பெரியார் எடுத்துக் காட்டியிருக்கிறார். உரையின் அந்தப் பகுதி:

‘இந்து லா’வில் பிராமணன், சூத்திரன் என்ற பிளவுகள் உண்டே தவிர – நாயுடு, செட்டியார், படையாட்சி, பிள்ளை என்ற தனி வகைகள் இல்லை. ஆகையால் பார்ப்பனரைத் தவிர்த்து நாம் எல்லோரும் ஒரே சாதிதான். திராவிடர் என்று சொல்லலாம். மதப்படி சாஸ்திரப்படிப் பார்த்தால் சூத்திர சாதிதான். மேல்சாதிக்காரனுக்குத்தான் அதாவது பார்ப்பானுக்குத்தான் – பூணூல்காரனுக்குத்தான் திருமணம் செய்து கொள்ள உரிமை உண்டேயொழிய சூத்திரனுக்கு உரிமை கிடையாது. அண்மையில் நடந்த சிதம்பரம் செட்டியார்- ரெங்கம்மாள் திருமணத் தீர்ப்பைப் பார்த்தாலே தெரியுமே.

திரு. சிதம்பரம் செட்டியார் தம் பிள்ளைகளுக்குச் சொத்துப் பிரிவினை சம்பந்தமாக ஒரு வழக்குப் போட்டார். அதில் அப்பீல் செய்த அவருடைய முதல் மனைவியின் மகனின் மனைவி சுயமரியாதை திருமணம் செல்லாது என்றும், எங்கள் சொத்தை இரண்டாகத்தான் பங்கு போட வேண்டும் என்றும், என் மாமன் மக்களுக்கு இந்தச் சொத்தில் பங்கு கிடையாது; அவருக்குப் பிள்ளை இல்லை. அவர் கல்யாணம் செல்லாது என்பதாகக் குறிப்பிட்டார். அவருடைய இரண்டாம் மனைவியும் இறந்த பிறகு, அவர் (திரு. சிதம்பரம் செட்டியாரே) நமது முறைப்படி (சுயமரியாதை முறைப்படி) செய்து கொண்ட தனது மூன்றாம் மனைவியின் இரண்டு மக்களுக்கும் பங்கு உண்டு என்று சொன்னார்.

அதற்கு நீதிபதி அவர்கள் சொன்னார்கள், சூத்திரர்களுக்குக் கலியாணம் இல்லை. பெண்டாட்டியும் வைப்பாட்டியும் ஒன்றுதான் என்றும், கல்யாணம் செல்லாது என்றும், இதற்கு ஆதாரமாக நாரதர், பராசரர், யக்ஞ வல்கியர், மனுவில் சொல்லியிருக்கிறார் என்பதாகவும் ஜட்ஜ்மெண்டிலே காட்டினார். அதற்கு, வக்கீல், சடங்குகள் செய்தே திருமணம் செய்திருக்கிறார்கள் என்று சொன்னார். அதற்கு நீதிபதி அவர்கள், “அந்தச் சடங்குகள் என்பது கல்யாணச் சடங்கல்ல. கல்யாணத்தை உடைக்கும் சடங்கு என்று தான் சொல்ல வேண்டும். ஆகவே திருமணமே செல்லாது” என்றார்.

இன்னொரு கேசிலே நீதிபதி சொல்லுகிறார்: திருமணத்திற்கு ஏதாவது சடங்கு இருந்தால் போதும் என்று! இதிலேகூட எவ்வளவு முரண்பாடுகள்! அதற்கு, வக்கீல் அவர்கள் திருமணம் செல்லுமா செல்லாதோ அதைப் பற்றிக் கவலை இல்லை. இவர்களுக்கு சொத்துக்கு ஏதாவது வழி செய்யுங்கள் என்று கெஞ்சிக் கேட்டார். அதற்கப்புறம் ஜட்ஜுக்கு பரிதாபம் வந்தது. ஓஹோ; அப்படியா; அதற்கு வேண்டுமானால் வழி செய்கிறேன் என்று சொல்லி சூத்திரர்களுக்கு மனைவிக்குப் பிறந்த பிள்ளைகளுக்கும், வைப்பாட்டிக்குப் பிறந்த பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரியான சொத்துரிமைதான். ஆகவே சொத்தை நான்காகப் பிரித்து அதில் மூன்று பங்கு உங்களுக்கும், ஒரு பங்கு இன்னொரு மகனுக்கும் ஆக பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பதாகத் தீர்ப்புச் சொல்லியிருக்கிறார். சூத்திரர்களுக்குத்தானே திருமண முறை கிடையாது என்கிறீர்கள்? நாங்கள் வைசியர்கள்; எங்களுக்குத் திருமண முறை உண்டல்லவா? என்று  எதிரி கேட்டதற்கு நாட்டுக்கோட்டைச் செட்டிகள் சூத்திரர்கள் என்பதற்காகத்தான் பிரீவி கவுன்சில் தீர்ப்பு (இலண்டனில் இருந்த நீதிமன்றம்) என்று எடுத்துக் காட்டி இருக்கிறார்.

சூத்திரர்களுக்கு கலியாணம், சொத்து, திவசம் எதுவும் கிடையாது. கலியாணமோ, திவசமோ செய்வதானால் முதலில் புரோகிதன் நம்மை சூத்திரனிலிருந்து மாற்றுவதற்காகப் பூணூலைப் போட்டு, வைசியனாக்கித்தான் பிறகு சடங்குகள் செய்வான்! சடங்குகள் முடிந்ததும் பூணூலைக் கழற்றி ஆற்றில் போட்டுவிடு என்பான். சூத்திரனுக்குச் சொத்து என்பதாக ஒன்றும் கிடையாது. சூத்திரனுடைய சொத்தைப் பார்ப்பான் கொள்ளையடிக்கலாம்; திருடலாம்; அது குற்றமாகாது. சூத்திரன் சொத்தை வைத்திருப்பது தான் குற்றமாகும். இது மனுநீதியில் உள்ளது! நமது இயக்கம் வலுத்துவிட்டதால் இதில் பார்ப்பனர் அடங்கிக் கிடக்கிறார்கள். ஒன்றும் செய்ய முடியவில்லை. (பார்ப்பானுக்குச் செல்வாக்கும், பலமும் இருந்தால் இப்பொழுதும் அந்தப் படிக்குச் செய்வான்)

அது மட்டுமா? சாதிகளிலே சாதி இந்துக்கள் என்றும், சாதி அல்லாத இந்துக்கள் என்றும், அதாவது வர்ணஸ்தர்கள் என்றும், அவர்ணஸ்தர்கள் என்றும் பிரித்தார்கள். இந்த வாணியர்கள், நாடார்கள், ஆசாரிகள் முதலியவர்களை எல்லாம் அவர்ணஸ்தர்கள் என்று, சதாசிவ  அய்யர் தீர்ப்பு, பிரீவி கவுன்சில் தீர்ப்பு முதலிய தீர்ப்புகள் இன்னும் இருக்கின்றன. பார்ப்பனனைக் காக்கவே மற்றவரைப் பிரித்தனர்.

எதற்காகப் பார்ப்பான் என்றும், சூத்திரன் என்றும், அவர்ணஸ்தர்கள் என்றும் பிரித்தார்கள் என்றால், இவர்கள் ஒற்றுமையாக இருந்தால் தங்களுக்கு ஆபத்து என்று கருதியே இப்படிப் பிரித்தார்கள். தமிழர்களுக்குள்ளாகவே நான் மேல் சாதி, நீ கீழ்ச் சாதி என்று சண்டை போட்டுக் கொண்டால் தம்மிடம் சண்டைக்கு வரமாட்டார்கள் என்பதாகக் கருதியே பார்ப்பான் இந்த மாதிரி சூழ்ச்சி செய்திருக்கிறான்.

குறிப்பு: பெரியார் குறிப்பிடும் சிதம்பரம் (செட்டியார்), திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணியின் மாமனார் ஆவார்.

பெரியார் முழக்கம் 25082016 இதழ்

You may also like...