தமிழர் ‘இனப்படுகொலை’ உறுதியாகிறது
முள்ளிவாய்க்கால் படுகொலையைத் தொடர்ந்து, முதலில் அயர்லாந்து நாட்டிலுள்ள ‘மக்கள் நிரந்தரத் தீர்ப்பாயம்’ விசாரணை ஒன்றை நடத்தியது. வியட்நாமில் அமெரிக்காவின் மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்களை அம்பலப்படுத்திய பெருமை இந்த ஆணையத்துக்கு உண்டு. நேர்மையும் நம்பகத் தன்மையும் கொண்ட இந்த ஆணையத்தின் முன் இலங்கை இராணுவத்தின் போர்க் குற்றம் தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் சான்றுகளாக உலகத் தமிழர் அமைப்புகளின் முயற்சியால் சேகரித்து முன்வைக்கப்பட்டன. மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்களை உறுதிப்படுத்தியது, இந்த விசாரணை ஆணையம். ஆனால், இனப்படுகொலைக்கான அறிகுறிகள் தெரிகிறது என்றும், அந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்த சான்றுகள் தேவை என்றும் கூறியது. மீண்டும் மக்கள் நிரந்தரத் தீர்ப்பாயம் இது குறித்து இம்மாதம் ஜெர்மனியில் கூடி விரிவாக ஆராய்ந்து இனபடுகொலை குறித்து விசாரிக்க நிபுணர் குழு ஒன்றை நியமித்திருக்கிறது. இந்த நிலையில் சிங்கள இராணுவத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்து வந்த இந்திய அரசின் பிரதிநிதி ஒருவரே ‘இனப் படுகொலை’ நடந்தது உண்மையே என்று ஒப்புதல் தந்துள்ளார். அவர் வேறு யாரும் அல்ல, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்தான்.
சென்னையில் 30.11.2013 அன்று அவரே ஏற்பாடு செய்த கருத்தரங்கம் ஒன்று, நியு உட்லண்ட்° ஓட்டலில் நடந்தது. அதில் பேசிய ப. சிதம்பரம், “இறுதிக் கட்டப் போரின்போது இலங்கையில் இனப்படுகொலை நடந்ததை நான் மறுக்கவில்லை. 2009 ஆம் ஆண்டு நாம் மேற்கொண்ட முயற்சிக்கு இலங்கை அரசு உளப்பூர்வமாக செவி சாய்க்கவில்லை. அப்படி நடந்திருந்தால் பிரபாகரன் உயிரோடு இருந்திருக்கக்கூடும். இறுதிக் கட்டப் போரில் நடந்த இனப் படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான விரிவான விசாரணை நடத்தி படுகொலைகளுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படும் வரை நமது முயற்சி ஓயாது” – என்று பேசியுள்ளார். அவரது முழு உரையை ‘துக்ளக்’ பத்திரிகை (11.12.2013) பதிவு செய்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் பொறுப்பிலுள்ள ஒருவர், முதன்முறையாக ‘இனப் படுகொலை’ நடந்தது என்பதற்கு ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். இனப்படுகொலை என்ற நிலை வந்துவிட்ட பிறகு, சர்வதேசம் இலங்கையில் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியும் என்று அய்.நா.வின் சட்டங்கள் தெளிவாகக் கூறுகின்றன. அந்த நாட்டில் விடுதலைக்குப் போராடும் மக்கள், சுதந்திர நாட்டை அமைத்துக் கொள்ளும் உரிமையையும் சர்வதேச சட்டங்கள் அங்கீகரிக்கின்றன. ஏற்கெனவே பிரிட்டன், பிரான்சு, அய்.நா.வின் மனித உரிமை ஆணையம், இலங்கை அரசுக்கு எதிராக வெளிப்படையாகவே பேசத் தொடங்கிவிட்டன. முன் எப்போதும் இல்லாத நெருக்கடியை இலங்கை அரசு சந்திக்கத் தொடங்கிவிட்டது. ‘இனப் படுகொலை’யை ஒப்புக்கொண்ட ப.சிதம்பரம், அடுத்து இந்திய அரசுக்கு அழுத்தம் தருவாரா? அல்லது அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளைக் குறி வைத்துப் பேசினாரா? என்பது அவரது அடுத்த கட்ட நகர்வுகளை வைத்தே முடிவு செய்ய முடியும்.
பெரியார் முழக்கம் இதழ் 12122013