தேச பக்தியைக் காக்க ‘இரும்புத் தடி-124ஏ’
தேச பக்தர்கள், தேச பக்தியைக் காப்பாற்ற இரண்டு ஆயுதங்களைத் தூக்கி இருக்கிறார்கள். ஒன்று இரும்புத் தடி; மற்றொன்று தேசத் துரோக சட்டம்!
திலீபன் மகேந்திரன் என்ற த.பெ.தி.க.வைச் சார்ந்த இளைஞர், தனது முகநூலில் தேசியக் கொடியை எரிப்பது போல் ஒரு படத்தை வெளியிட்டாராம். அவர் பொது இடத்தில் அதைச் செய்ய வில்லை. ‘இந்திய தேசியத்தின்’ துரோகத்துக்கு தனது எதிர்ப்பாக வெளியிட்ட ஒரு போராட்ட வடிவம் அவ்வளவுதான்! உடனே ‘தேச பக்தி’ பீறிட்டுக் கிளம்பிய சென்னை புளியந் தோப்பு காவல்துறை, தேசபக்திக்காக இரும்புத் தடியை தூக்கியது. அந்த இளைஞரின் கை விரல்களை உடைத்து, ‘தேச பக்தி’யையும் சட்டத்தை மதிக்கும் தனது ‘மாண்பையும்’ கேவலமாக வெளிப்படுத்தியது.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில், ‘தேசபக்தி’யைக் காப்பாற்ற கன்யாகுமார் என்ற பீகாரைச் சார்ந்த மாணவனை ‘தேசத் துரோக’ வழக்கில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவின் கீழ் கைது செய்திருக் கிறார்கள். அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நாளை துக்க நாளாக அனுசரித்தார் களாம்; அது தேச துரோகமாம்! அப்சல் குரு, ‘தீவிரவாத’ இயக்கத்திலிருந்து விலகி, இந்திய இராணுவத்திடம் தாமாக முன் வந்து சரணடைந்து, அமைதியாக வாழ்க்கையை நடத்த விரும்பியவர்! நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் உண்மை குற்றவாளி சிக்காததால் எவரையாவது தண்டித்தாக வேண்டும் என்பதற்காக சரணடைந்த அப்சல் குருவை ஏமாற்றி டெல்லிக்கு அழைத்து வந்து பொய் வழக்கு புனைந்து, தூக்கில் தொங்கவிட்டது, இந்திய உளவுத் துறை! தூக்கிலிடப்போகும் தகவலைக்கூட அவரை நம்பியிருந்த குடும்பத்துக்கு தெரிவிக்கவில்லை. இதைக் கண்டிப்பது தேசபக்திக்கு எதிரானதாம்! இதற்காக கன்யாகுமார் என்ற ஜவகர்லால் நேரு பல்கலை மாணவனை பிரிட்டிஷ்காரன் அறிமுகப்படுத்திய ‘124-ஏ’ தேசத் துரோகம் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் தள்ளியிருக்கிறது, பா.ஜ.க. பார்ப்பனிய ஆட்சி! இந்த மாணவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான அகில இந்திய மாணவர் சம்மேளனத்தைச் சார்ந்த தோழர்.
‘இந்தியா’ என்ற ‘தேசத்து’க்கு எதிராக ஒருவர் பேசினார் என்பதற் காகவே இந்த சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றும், வன்முறையை தூண்டுவதற்கு அழைப்பு விடுத்தால், அல்லது பொது ஒழுங்கு சீர்குலையும் நிலை ஏற்பட்டால் மட்டுமே இந்த சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும், உச்சநீதிமன்றமே பலமுறை எச்சரித்த நிலையிலும், இந்தச் சட்டத்தை மாணவர் மீது சர்வசாதாரணமாக ஏவி யிருக்கிறார்கள். ஆயுள் தண்டனைக்கு வழி வகுக்கும் இந்த ஆள் தூக்கி சட்டம், ஒரு மாணவரின் வாழ்வையே சிதைப் பதற்கு பயன்படுத்தி, ஆனந்தக் கூத்தாடு கிறது ‘சங்’ பரிவார் கூட்டம்!
பிரிட்டிஷ்காரன், அடிமை ‘இந்தியர்’ களை அடக்கி வைக்க கொண்டு வந்த சட்டத்தை சட்டப் புத்தகத்திலிருந்து நீக்காமல் வைத்திருக்கும் இவர்கள் தான் ‘அக்மார்க்’ தேசபக்தர்களாம்! வெட்கக் கேடு!
(மாணவர்களிடையே கன்யாகுமார் ஆற்றிய எழுச்சி உரை உள்ளே)
பெரியார் முழக்கம் 18022016 இதழ்