தலையங்கம் ‘ரோகித்’களை காவு கேட்கும் ஜாதிவெறி!

படிக்கக் கூடாத கூட்டம் என்ற ‘மனு’ சாஸ்திரத்தால் தடை செய்யப்பட்ட சமூகம், சமூகப் புறக்கணிப்புகளைக் கடந்து, உயர் கல்வி வரை எட்டிப் பிடிக்கும்போது அங்கும் ஜாதியம், அவர்களின் உயிர்களைக் காவு கேட்டுக் கொண்டிருக்கிறது. இதுதான் இந்த ‘பாரத சமூகத்தின்’ பார்ப்பன ஜாதி தர்மம்! நெஞ்சு பதறுகிறது. அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் சமூகக் கல்வியில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வந்த 26 வயது தலித் மாணவர் ரோகித் வெமுலா, ஜாதி வெறி கொடுமைகளை எதிர்கொள்ள முடியாது தனது உயிரைப் பலியிட்டுக் கொண்டார்.
பார்ப்பன ஆதிக்கத்தில் மூழ்கிக் கிடக்கும் உயர்கல்வி நிறுவனங்கள், இடஒதுக்கீட்டின் கீழ் வரும் ‘தலித்’ மாணவர்களை அவமதிப்பதும், புறக்கணிப்பதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. பார்ப்பன உயர்ஜாதிப் பேராசிரியர்கள் பலரும் இந்த மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு வெளியேறிடக் கூடாது என்று தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இவர்களை ஒதுக்கி வைக்கிறார்கள்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன், ‘சங்பரிவார்’ மாணவர் அமைப்பான ‘வித்யார்த்தி பரிஷத்’ உயர்கல்வி வளாகங்களில் பார்ப்பன மதவாதத்துக்கு எதிராக எந்தக் குரலும் ஒலித்து விடக் கூடாது என்பதில் உறுதி காட்டி வருகிறது. வித்யார்த்தி பரிஷத் செயல்படும்போது அம்பேத்கர் மாணவர் அமைப்பு வளாகத்தில் செயல்படக் கூடாதா? இப்படி ஒரு அமைப்பை மாணவர்கள் தொடங்கினர். விதிமுறைகளை எல்லாம் புறந்தள்ளி யாகூப் மேனன் தூக்கிலிடப்பட்டதை எதிர்த்து கருத்துகளை தெரிவித்தனர். இ°லாமியர்கள் மீது மதவெறியர்கள் நடத்திய ‘முசாபர் நகர்’ கலவரம் பற்றிய ஆவணப் படத்தை திரையிட்டனர். இவையெல்லாம் இந்த மாணவர்கள் செய்த ‘குற்றம்’. வித்யார்த்தி பரிஷத் உடனே மத்திய அமைச்சரை தலையிடக் கோரியது. மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்திரேயா, மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணிக்கு கடிதம் எழுதினார். அவரின் தலையீட்டால் புதிதாக நியமிக்கப்பட்ட துணைவேந்தர், 5 தலித் மாணவர்களை விடுதியை விட்டு வெளியேற உத்தரவிட்டார். (மேலே உள்ள படம்) 13 நாட்களாக குளிக்க, படுக்க இடமின்றி, வளாகத்தின் வாயிலில் உறங்கிக் கொண்டிருந்தார்கள், இந்த மாணவர்கள். இது திட்டமிடப்பட்ட சமூகப் புறக்கணிப்பு அல்லவா? இப்படிப்பட்ட ஒரு சமூக அவலத்தை எந்த ஒரு பார்ப்பன உயர்ஜாதி மாணவன், எந்த ஒரு கல்வி வளாகத்திலாவது சந்தித்திருப்பானா? என்று கேட்கிறோம்.
இயற்கையையும் அறிவியலையும் ஆழமாக நேசித்து கவிதை எழுதும் ஆற்றல் மிக்க ரோகித், கடந்த டிசம்பர் மாதமே துணைவேந்தருக்கு ஒரு கடிதம் எழுதினார். விடுதியிலேயே கவுரவத்துடன் மரணத்தைத் தேடிக் கொள்வதற்கான ‘விஷத்தை’ தங்களுக்கு வழங்கிடுமாறு அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். இப்படி ஒரு கடிதம் எழுதும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருந்தார் என்றால், அவர் எத்தகைய வலியை ஏற்றிருப்பார்? நினைத்துப் பார்க்கவே இயலவில்லை.
இதே அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் 2008ஆம் ஆண்டு, அறிவியல் துறையில் படித்து வந்த தலித் மாணவர் செந்தில்குமார், விடுதியில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தைச் சேர்ந்தவர் அந்த மாணவர். தலித் சமூகத்திலேயே ஜாதியமைப்பில் கடைநிலையில் நிறுத்தப்பட்டுள்ள ‘பன்னியாண்டி’ என்ற பன்றிகளை மேய்க்கும் சமூகத்திலிருந்து முதன்முதலாக உயர் கல்வியை எட்டிப் பிடித்தவர், வாழ்க்கையை முடித்துக் கொண்டார். “தலித் பழங்குடி மாணவர்களுக்கு இந்த உயர்கல்வி நிறுவனங்களில் ஏனைய மாணவர்களுக்கு தரப்படுகிற வாய்ப்புகள், பயிற்சிக்கான உதவிகள் மறுக்கப்படுகின்றன. ஆய்வு செய்ய வரும் தலித் மாணவர்களை வழி நடத்த பேராசிரியர்கள் முன் வருவதில்லை” என்று இந்த மாணவர் மரணம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு குற்றம் சாட்டியது. (வினோத் பவரலா குழு)
டெல்லியில் இயங்கும் ‘அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகம்’ என்ற உயர்கல்வி நிறுவனத்தில் தலித் மாணவர்கள் பாகுபாட்டுக்கும் புறக்கணிப்புக் கும் உள்ளாகிவரும் குற்றச்சாட்டுகள் வந்தபோது, பல்கலைக்கழக மான்யக் குழுவின் முன்னாள் தலைவர் தோரட் தலைமையில் ஒரு குழு ஆய்வு நடத்தியது. இந்திய அரசு கல்வி வளாகங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சமூகக் கேடான ஜாதி – ஜாதியப் பாகுபாடுகளைத் தடுக்க எந்த முனைப்பும் காட்டுவதில்லை என்று தோரட் குழு சுட்டிக்காட்டியது. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த உயர்கல்வி நிறுவனங்களில் தங்களின் கல்வியை தொடரவே முடியாது என்று உள்ளம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட தலித் மாணவர்கள் 18 பேர், என்னே கொடுமை!
இப்போது துணை வேந்தர் அப்பாராவ், மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்திரேயா மற்றும் இரண்டு வித்யார்த்தி பரிஷத் செயல்பாட்டாளர்கள் மீதும் காவல்துறை வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தற்கொலைக்கு தூண்டும் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு களைப் பதிவு செய்திருப்பதை வரவேற்கிறோம். மத்திய அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று மாணவர்கள் போராடி வருகிறார்கள்.
இவை அனைத்தையும் தாண்டி, சமுதாயத்தில் புரையோடி நிற்கும் ஜாதி என்ற புற்று நோயை அழித்து ஒழிப்பதற்கான இயக்கங்கள் நடத்தப்பட வேண்டும். ஜாதியமைப்பை நியாயப்படுத்தும் ஜாதி வெறியர்கள் கிரிமினல் குற்றவாளிகளாக சமூக விரோதிகளாக கருதப்படும் நிலை உருவாக வேண்டும்.
‘ரோகித் வெமுலாக்கள்’ – இனியும் தொடரக் கூடாது.
சமூகத் தடைகளை தகர்த்து, தன் முனைப்போடு உயர்கல்வியை எட்டி, ஆய்வாளராகவும் விஞ்ஞானியாகவும் வெளியே வரவேண்டிய இந்த இளைஞர்களை பிணங்களாகத்தான் பார்க்க வேண்டுமா?
ஏ, ஜாதி வெறியே! பார்ப்பனியமே! இன்னும் எத்தனை ‘ரோகித்’களை
நீ காவு கேட்கப் போகிறாய்?

பெரியார் முழக்கம் 21012016 இதழ்

You may also like...