தூற்றலுக்கும் ஆத்திரத்துக்கும் ஆளானேன்: பெரியார்

பெரியார் தனது எதிர்நீச்சல் பயணம் குறித்து செய்துள்ள சுயமதிப்பீடு இது. வாழப்போவது இன்னும் சிலகாலம்தான் என்று எழுதும் பெரியார், அதற்குப் பிறகு 45 ஆண்டுகாலம் சமுதாயத் துக்காகவே உழைத்திருக்கிறார்.

“பொதுவாக நமது பிரசங்கத்தினாலும், ‘குடி அரசி’னாலும் நான் செய்து வந்த பிரச்சாரத்தில் அரசியல் இயக்கங்கள் என்பவைகளைக் கண்டித் தேன். அரசியல் தலைவர் என்பவர்களைக் கண்டித் தேன். மதம் என்பதைக் கண்டித்தேன். மதத் தலவர்கள் என்பவரைக் கண்டித்தேன். மதச் சடங்கு என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன். குருக்கள் என்பவர்களைக் கண்டித்திருக்கிறேன். கோவில் என்பதைக்  கண்டித்திருக்கிறேன். சாமி என்பதைக்  கண்டித்திருக்கிறேன். சாத்திரம் என்பதைக்  கண்டித் திருக்கிறேன். வேதம் என்று சொல்வதைக்  கண்டித் திருக்கிறேன்.  பார்ப்பனீயம் என்பதைக்  கண்டித் திருக்கிறேன். சாதி என்பதைக்  கண்டித்திருக்கிறேன். அரசாங்கம் என்பதைக்  கண்டித்திருக்கிறேன். உத்தியோகம் என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன். நீதி ஸ்தலம் என்பதைக்  கண்டித்திருக்கிறேன். நியாயாதிபதி என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன். நிர்வாக ஸ்தலங்கள் என்பவைகளைக் கண்டித்திருக் கிறேன். ஜனப் பிரதிநிதித்துவம் என்பதைக்  கண்டித் திருக்கிறேன். தேர்தல் என்பதைக்  கண்டித் திருக்கிறேன். கல்வி சுயராச்சியம் என்பதைக்  கண்டித் திருக்கிறேன். ஸ்ரீமான்கள் கல்யாண சுந்தர முதலியார், வரதராசுலு நாயுடு, இராசகோபாலாச்சாரியார் முதலிய ஒரே துறையில் வேலை செய்துவந்த நண்பர்களைக்   கண்டித்திருக்கிறேன். இன்னும் என்னென்னவற்றையோ, யார் யாரையோ கண்டித்திருக்கிறேன். கோபம் வரும்படி வைது மிருக்கிறேன்.

எதைக் கண்டித்திருக்கிறேன். எதைக் கண்டிக்க வில்லை என்பது எனக்கு ஞாபகத்திற்கு வரமாட்டேன் என்கிறது. இன்னமும் ஏதாவது எழுதலாமென்று பேனாவை எடுத்தாலும், பேசலாbன்று வாயைத் திறந்தாலும், கண்டிக்கவும், வையவும், துக்கப்பட வுமான நிலைமை ஏற்படுகிறதே ஒழிய, வேறில்லை. கண்டிக்கத்தகாத இயக்கமோ, திட்டமோ, அபிப்பிராயமோ என் கண்களுக்குப் படமாட்டேன் என்கிறது.

இவைகளின்றி எனது வார்த்தைகளும், எழுத்துகளும், செய்கைகளும் தேசத் துரோகம் என்றும், வகுப்புத் துவேஷம் என்றும், பிராமண துவேஷம் என்றும், மான நஷ்டமென்றும், அவதூறு என்றும், ராஜ துவேஷம் என்றும், நாத்திகம் என்றும், மதத் தூஷணை என்றும் சிலர் சொல்லவும், ஆத்திரப்படவும் ஆளானேன். அரசியல் தலைவர்கள்,  தேசாபிமானிகள், தேச பக்தர்கள் என்பவர்கள் என்னை வையவும், என்னைத் தண்டித்து ஜெயிலில் வைக்கும்படி அரசாங்கத்தைக் கெஞ்சவும் ஆளானேன். இந்த இன்பமற்ற காரியங்களை நான் ஏன் செய்ய வேண்டும்? சிலருக்காவது மனவருத்தத்தையும் அதிருப்தியையும் கொடுக்கத்தக்க காரியத்தை ஏன் செய்ய வேண்டும்? என்று நானே யோசிப்பதுண்டு. சிற்சில சமயங்களில் யாரோ, எப்படியோ போகட்டும், நாம் ஏன் இக்கவலையும் இவ்வளவு தொல்லையும் அடைய வேண்டும்?

“நமக்கென்ன? இதனால் ஜீவனமா? பணம், புகழ், கீர்த்தி, சம்பாதனையா? ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்? ஒரு பத்திரிகையாவது உதவி உண்டா? இமயமலை -வெயிலில் காய்கின்றது என்று குடை பிடிப்பதுபோல இருக்கின்றது   என்பதாக நினைத்து விலகிவிடலாம் என்று யோசிப்பதுண்டு. ஆனால், விலகுவதில்தான் என்ன லாபம்? ஏறக்குறைய நமது ஆயுட்காலமும் தீர்ந்துவிட்டது. இனி நாலோ அய்ந்தோ அல்லது அதிகமிருந்தால் பத்து வயதுக் காலமோ இருக்கலாம். இந்தக் கொஞ்ச காலத்தை ஏன் நமது மனசாட்சிக்கு விட்டுவிடக் கூடாது. விலகித்தான் என்ன காரியம் செய்யப் போகிறோம்? என்பதாகக் கருதி மறுபடியும் இதிலே உழன்று கொண்டிருக்கின்றோமே அல்லாமல் வேறில்லை.

‘குடிஅரசு’ தலையங்கம் 1.5.1927

பெரியார் முழக்கம் 02012014 இதழ்

You may also like...