‘சித்திரை’யில் தொடங்குவது அறிவியலுக்கு எதிரானது : பஞ்சாங்கத்தைப் புறந்தள்ளிய ‘மேனக்ஷா’ குழு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ‘சித்திரை’ தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்திருப்பது, அவரது பார்ப்பனிய இந்துத்துவ ஈடுபாட்டைத்தான் வெளிப்படுத்துகிறது. திராவிடர் விடுதலைக் கழகம் இந்த மாற்றத்தை வன்மையாக எதிர்க்கிறது.

சித்திரை தான் தமிழ்ப் புத்தாண்டு என்பது அறிவியலுக்கு எதிரானது.

தமிழர் கொண்டாடிய தை புத்தாண்டு, சித்திரைக்கு மாறியது எப்படி? குப்தர் வம்சத்தில் வந்த இரண்டாம் சந்திர குப்தன் தனது பெயரை விக்கிரமாதித் தன் என்று மாற்றிக் கொண்டு – தனது பெயரால் ‘விக்கிரம சகம்’ என்ற ஆண்டு முறையை உருவாக்கிக் கொண்டான். வானவியலை அறிவியல் கண்ணோட்டத்தில் ஆராய்ந்த ஆரியபட்டருக்கு எதிராக வானவியலில் – சாதகம், சோதிடத்தைப் புகுத்தும் முயற்சிகள் அவனது காலத்தில் மேற் கொள்ளப்பட்டன. எனவே வானியல் சிந்தனை யாளர் ஆரியபட்டர் புறக்கணிக்கப்பட்டு, பழமையில் ஊறியவரான மிகிரர் உயர்த்திப் பிடிக்கப்பட்டார். அப்படி விக்கிரமாதித்தன் உருவாக்கிய ‘விக்கிரம சகம்’ எனும் ஆண்டு முறையில் சித்திரை முதல் நாளே ஆண்டின் முதல் நாளாக்கப்பட்டது. ‘விக்கிரம சகம்’ 60 ஆண்டுகளை வரை யறுத்தது. ‘பிரபவ’ ஆண்டில் தொடங்கி ‘அட்சய’ ஆண்டில் முடியும். இவைகளில் ஒரு பெயர்கூட தமிழ் இல்லை. 60 ஆண்டு களுக்கும் வடமொழிப் பெயர்கள்தான். ஆனால், தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடிக் கொண்டிருக் கிறார்கள் என்பதுதான் வேடிக்கை – வேதனை.

இந்த 60 ஆண்டுகளையும் கடவு ளோடு தொடர்புபடுத்தி, ஆபாசம் வழியும் கதைகளையும் உருவாக்கி விட்டார்கள். நாரதரும், கிருஷ்ணனும் உறவு கொண்டு (இருவரும் ஆண்கள்) பெற்ற குழந்தைகளே ‘பிரபவ முதல் அட்சய முடிய 60 ஆண்டுகள்’ என்று தமிழ்க் கலை களஞ்சியமான ‘அபிதான சிந்தாமணி’ கூறுகிறது. இதற்கு புராண ஆதாரங்கள் வேறு உள்ளன. இந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 61வது ஆண்டைக் குறிக்கப் பெயர் இல்லை. மீண்டும் ‘பிரபவத்திலிருந்து தான் தொடங்க வேண்டும்’ நடைமுறைக் கும் அறிவுக்கும் ஒவ்வாத குழப்பங்களும், மூடநம்பிக்கைகளும் இதில் அடங்கிக் கிடக்கின்றன.

இந்த நிலையில் தான் – தமிழ் அறிஞர்கள் 1921-ம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஆராய்ந் தார்கள். மூன்று முக்கிய முடிவுகளை அவர்கள் அப்போது எடுத்தார்கள்.

  1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டாகப் பின்பற்றுவது.
  2. அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது.
  3. திருவள்ளுவர் காலம் கி.மு. 31 (வழக்கில் உள்ள ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் திருவள்ளு வர் ஆண்டு) திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமைகள் வழக்கில் உள்ளவை என்று முடிவெ டுத்தார்கள். இப்படி முடிவெடுத்த வர்கள் தமிழகத்தின் மூத்த தமிழ் அறிஞர்கள் மறைமலை அடிகள், திரு.வி.க., சுப்பிரமணியப் பிள்ளை, சச்சிதானந்தப் பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம. சுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவ நாதம் ஆகியோர் ஆவர்.

அதன் பிறகு 1939 ஆம் ஆண்டு திருச்சியில் ‘அகில இந்திய தமிழர் மாநாடு’ சோமசுந்தர பாரதியார் தலைமை யில் கூடியது. அதில் தந்தை பெரியார், கரந்தை தமிழ்ச்சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேராசிரியர் கா. சுப்பிர மணியம், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க., மறைமலையடிகளார், பி.டி. இராஜன், ஆற்காடு இராமசாமி முதலியார், புரட்சி கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி உட்படப் பலரும் பங்கேற்றனர். அந்த மாநாடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும், பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் பறைசாற்றியது.

1971-ல் அன்றைய தி.மு.க. ஆட்சி, திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றது. இம்முறையையோ 1971 முதல் அரசு நாட் குறிப்பிலும், 1972 முதல் அரசிதழிலும், 1981 முதல் அரசின் அனைத்து அலுவல் களிலும் பின்பற்றி வருகிறது.

1969-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி பொங்கல் திரு நாளுக்கு அடுத்த நாளை திருவள்ளுவர் நாள் என்று ஏற்று அரசு விடுமுறை அளித்து ஆணை பிறப் பித்தது. எனவே தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு ஆகும். இடையில் வந்து புகுந்த சித்திரை – தமிழர் மீது புகுத்தப்பட்ட பண்பாட்டுத் திணிப்பாகும்.

இந்து காலண்டரின் ஓட்டைகள்

அந்தக் காலத்திலேயே இந்து மதத்தின் முன் னோர்கள் – வானவியலைக் கணித்து, நாட்காட்டியை உருவாக்கியுள்ளதாக பழம் பெருமையை, பார்ப் பனர்களும் இந்துப் பழமைவாதிகளும் பீற்றிக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த இந்து காலண்டரின் ஓட்டைகள் அம்பலத்துக்கு வந்துள்ளன.

இந்து காலண்டரின் அபத்தம் குறித்து ‘பிரன்ட் லைன்’ இதழில் பீமன் நாத் என்ற வானவியல் விஞ்ஞானி எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:

கையில் கட்டியுள்ள கடிகாரம், காலை 8 மணியை காட்டுவதற்கு பதிலாக – இரவு 12 மணியை தொடர்ந்து காட்டிக் கொண்டிருந்தால் அதை நாம் கையில் கட்டிக் கொண்டு, இதுதான் சரியான நேரம் என்று ஊரில் கூறிக் கொண்டிருந்தால் – ஊர் மக்கள் என்ன சொல்வார்கள்? பைத்தியம் பிடித்து விட்டதா என்று கேட்பார்கள். எனது கடிகாரத்தின் நேரம் இரவு 12 மணி தான் என்று காலை 8 மணிக்கு ஒருவன் கூறிக் கொண்டே இருப்பதைப் போல்தான்

இந்து காலண்டரான பஞ்சாங்கத்தின் கதையும் இருக்கிறது.

இந்து சோதிடர்களின் விஞ்ஞான அடிப்படை யில்லாத தவறான கணிப்புகளால் ஊகத்தால் உருவாக்கப்பட்ட வானவியல் அடிப்படைகள். மிக மோசமான நேரத்தைக் காட்டிக் கொண்டிருக் கின்றன. பருவ காலங்களை வேகம் வேகமாக – கடந்த 60 ஆண்டுகளில் பாய்ச்சல் வேகத்தில் கடந்து போய் விட்டது. ‘இந்து’க்கள் கணித்த நேரம், இதன் விளைவாக – இப்போது 24 நாட்கள் இடைவெளியில் இந்து

காலண்டரான பஞ்சாங்கம், தேங்கிப் போய் நிற்கிறது. அதாவது உலகம் முழுதும் ஆகஸ்டு 1 ஆம் தேதி என்றால், இப்போது, பஞ்சாங்கப்படி, ஆகஸ்டு 25 அய் காட்டிக் கொண்டு நிற்கிறது. இந்த பஞ்சாங்கம் – சரியான வழிகாட்டியல்ல என்பதால் 1955 ஆம் ஆண்டு நேரு பிரதமராக இருந்தபோது, இந்திய அரசு மேக்னக் ஷா என்ற புகழ்பெற்ற விஞ்ஞானியின் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இந்து பஞ்சாங்க காலண்டரை விரிவாக ஆராய்ந்த குழு, தனது அறிக்கையில் “இந்து காலண்டர் என்பது – மனிதர்கள் தங்கள் சிந்தனையின் கற்பனையில் உருவாக்கப்பட்டதால், அதில் ஏராளமான மூட நம்பிக்கைகளையும், அரை உண்மைகளையும் இடைக்காலத்தில் இணைத்துவிட்டார்கள். இதில் பல குளறுபடிகளும், குழப்பங்களும் உள்ளன. இந்தக் குறைகளை துணிவோடு எடுத்துக்காட்டி மாற்றங் களைக் கொண்டுவர – எவருக்கும் துணிவில்லை. 23 நாட்கள் இடைவெளியில் இந்து பஞ்சாங்கம் போய்க் கொண்டிருக்கிறது. கடந்த 1400 ஆண்டுகளாக  கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்ட கால இடைவெளி நீண்டு 23 நாட்களாக வந்து நிற்கிறது” என்று கமிட்டி தனது பரிந்துரையில் சுட்டிக் காட்டியதுடன், “தவறுகளும் – மூடநம்பிக்கைகளும் நிறைந்த ‘களஞ்சியத்தை’ நாம் இந்து வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டு வாழப் பயிற்றுவிக்கப்பட்டு விட்ட தால், அதை மாற்ற முடியாத புனிதமாக்கி – பாது காத்து வருகிறோம்” என்றும் சுட்டிக்காட்டியது. விஞ்ஞானிகள் குழு – புதிய தேசிய காலண்டர் முறையையும் உருவாக்கியது. ஆனால் – பார்ப்பனர் களும், பழமைவாதிகளும், சோதிடர்களும், இந்த மாற்றத்தை ஏற்காமல், கிடப்பில் போட்டுவிட்டனர்.

உண்மையில் சூரியன் உச்சிக்கு வரும் நாளான – தமிழர் திருநாள் – பொங்கல் நாள் என்று கொண் டாடப்படும் நாள் டிசம்பர் 22 ஆம் தேதியே ஆகும். ஆனால், தவறான கணிப்புகளால் அது ஜனவரி 14 அல்லது 15 ஆம் தேதிக்கு தள்ளப்பட்டுவிட்டது.

1955 இல் 23 நாட்களாக இருந்து, இப்போது 24 நாட்கள் அதிகரித்துள்ள  தவறான இடைவெளியில் தான் நாள், நட்சத்திரம், நல்ல நேரம், எதிர்காலம் எல்லாமுமே கணிக்கப்பட்டு வருகிறது. இந்த அடிப்படையிலே சோதிட “மேதைகள்” பத்திரிகைகளில் சோதிடக் கணிப்புகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் படித்தவர்கள் முதல் பாமரர் வரை படித்து நம்பிக் கொண்டிருக்கிறார்கள்! வெட்கக் கேட்டைப் பார்த்தீர்களா?

பெரியார் முழக்கம் 09012014 இதழ்

You may also like...