பல நூறு மேடைகளில் முழங்கிய பகுத்தறிவுக் குரல் ஓய்ந்தது : திருவாரூர் தங்கராசு விடை பெற்றார்

பெரியார் கொள்கைகளை மேடைகளிலும் கலை வடிவங்களிலும் அரை நூற்றாண்டுக்கு மேலாக மக்களிடம் கொண்டு செல்வதையே தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்ட திருவாரூர் தங்கராசு 5.1.2014 பிற்பகல் 3.45 மணியளவில் சென்னை ராஜா அண்ணா மலைபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் முடிவெய்தினார். நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழாமல் மரணத்தை சந்திக்கும் வரை வழமையாகவே இருந்தார். குடும்பத் துடன் உரையாடிக் கொண்டிருந்தவர், கழிப்பறைக்குச் சென்றார். அங்கேயே சாய்ந்துவிட்டார். அவரது மரணமும் சுயமரியாதையுடனேயே நிகழ்ந்துவிட்டது.

6 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் ராஜா அண்ணாமலைபுரத்திலிருந்த அவரது இல்லத்திலிருந்து பெரியார் இயக்கத் தோழர்கள் அணி வகுப்புடன் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. பெசன்ட் நகரிலுள்ள மின் மயத்தில் உடல் வீரவணக்க முழக்கங்களுடன் எரி யூட்டப்பட்டது. முன்னதாக, ராஜா அண்ணாமலை புரத்திலுள்ள அவரது இல்ல வாயிலில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் செகதீசன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு, கவிஞர் செ.வை.ர. சிகாமணி, த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், வழக்கறிஞர் துரைசாமி, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சி நிறுவனர் வே.ஆனைமுத்து, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், திருச்சி சவுத்தரராஜன், சிற்பி ராசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் உரையாற்றினர். திருவாரூர் தங்கராசு அவர்களின் குடும்பத்தின் சார்பில் பேரன் தமிழரசன் இறுதியாகப் பேசினார்.

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், 5 ஆம் தேதி திருவாரூர் தங்கராசு உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர். திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களும் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்களும் இறுதி நிகழ்வுக்கு திரண்டு வந்திருந்தனர். கலைஞர் வை.கோ., மருத்துவர் இராமதாசு ஆகியோர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

திராவிடர் விடுதலைக் கழக சார்பில் விடுதலை இராசேந்திரன் இரங்கல் கூட்டத்தில் பேசுகையில், கடந்த தலைமுறைகளில் பெரியார் இயக்கத் தோழர்களின் நெஞ்சங்களில் நிலைத்துவிட்ட பெயர் திருவாரூர் தங்கராசு. பெரியார் இயக்கத்தின் எதிர்ப்பாளர்களால் விவாதிக்கப்பட்ட பெயரும் திருவாரூர் தங்கராசு. பெரியாருக்கு அடுத்த நிலையில் தமிழகம் முழுதும் கூட்டங்களில் பேசியவர். மேடையை யும் பார்வையாளர்களையும் தனது முழுமையான ஆளுகையின் கீழ் கொண்டு வரக்கூடிய ஆற்றல் மிக்க பேச்சாளர், சொல் வீச்சு, ஒப்பனைகள் இல்லாமல் பெரியார் இயக்கத்துக்கே உரிய கருத்துகளின் உரை யாடல்களையும், சொல்லாடல்களையும், விவாதங்களாக வும், வினாக்களாகவும், மறுப்புரைகளாகவும் பார்ப்பன வேத, இதிகாச, புராணங்களைக் கட்டுடைத்துக் காட்டிய தனித்துவம் கொண்டது அவரது மேடைப் பேச்சு.

பெரியார் தொண்டர்கள் புகழையும் விளம்பரத்தை யும் நாடக் கூடாது என்று அவர் கூறுவார். மேடைவிட்டு இறங்கியவுடன் தனது உரையை பாராட்டுவதற்கு வருவோரிடம், அவர் முகம் கொடுத்துப் பேச மாட்டார். அவர் எழுதி, நடிகவேள் ராதா அவர்களால் நடிக்கப்பட்ட இரத்தக் கண்ணீர் நாடகம், பிறகு திரைப்படமானது. ஒரே நாடகம் அதிக எண்ணிக்கையில் மேடை ஏற்றப்பட்ட பெருமை இரத்தக் கண்ணீருக்கு மட்டுமே உரியது. பெற்ற மனம், தங்கத்துரை போன்ற திரைப்படங்களுக்கும் உரையாடல்களை எழுதினார். எல்லாவற்றையும்விட நடிகவேள் இராதா அவர்கள் நடித்த ‘இராமாயணம்’ நாடகம், திருவாரூர் தங்கராசு அவர்களால் தீட்டப்பட்டது ஆகும். நாடெங்கும் தடைக்குள்ளாக்கப்பட்ட அந்த நாடகத்தை கடும் எதிர்ப்புகளுக்கிடையே மேடைகளில் நடித்தார் எம்.ஆர். இராதா.  மேடை நாடகத்தின் பிரதிகளை காவல் துறையிடம் காட்டி முன் அனுமதி பெற்றுத்தான் நடத்த வேண்டும் என்று பக்தவத்சலம் முதல்வராக இருந்த போது ஒரு சட்டத் திருத்தமே கொண்டுவரப்பட்டது. அதற்குக் காரணமே நடிகவேள்  எம்.ஆர்.இராதா நடித்த திருவாரூர் தங்கராசு தீட்டிய இரத்தக் கண்ணீர், இராமாயண நாடகங்களே ஆகும். பார்ப்பனியத்தை மட்டுமல்ல, அதற்கு நிகராக சைவத்தையும் கடுமையாக தோலுரித்தவர் திருவாரூர் தங்கராசு.

மயிலாடுதுறையில் 1971 இல் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் அவர் எழுதிய இராமாயண நாடகத்தில் அவரே இராவணன் பாத்திரம் ஏற்று நடித்ததையும் பெரியார் நள்ளிரவு வரை விழித்திருந்து நாடகத்தைப் பார்த்ததையும் இங்கே தோழர்கள் பலரும் சுட்டிக் காட்டினார்கள். 1971 இல் சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு ஊர்வலத்தின்மீது அன்றைய ஆர்.எஸ்.எஸ்ஸான ஜன சங்கத்தினர் சிலர் கறுப்புக் கொடி காட்டி செருப்பு வீசியபோது கையில் நீண்ட தடியை ஏந்தி, எதிரிகளை சந்திக்க ஓடியவர்களில் ஒருவராக திருவாரூர் தங்கராசும் இருந்தார். இளைஞனாக நான் அன்று அவரை பார்த்த காட்சி, என் கண் முன் நிற்கிறது. ‘பகுத்தறிவு’ எனும் வார ஏட்டை பல ஆண்டுகாலம் நடத்தினார். அதில் கேள்விகளுக்கு நடிகவேள் எம்.ஆர்.இராதா விடையளிப்பார்.

பல்லாயிரம் மேடைகளில் பேசி கொள்கைகளைப் பரப்பிடும் திரைப்படம், நாடகம் போன்ற கலைப் படைப்புகளை உருவாக்கி, சுமார் 65 ஆண்டுகால நீண்ட பொது வாழ்க்கைக்கு ஒப்படைத்துக் கொண்ட ஒரு ‘கருப்புச் சட்டைக்காரர்’. எளிமையாக, ஊடக வெளிச்சம் விளம்பரங்கள் இல்லாமல், அந்தப் புகழ் மின்மினுப்பில் மயங்கிடாமல் கொள்கை அடையாளத் தோடு வாழும் உன்னத வாழ்க்கை முறை பெரியார் தொண்டர்களுக்கே உரித்தான தனித்துவம். அந்தப் பெருமையோடு விடை பெற்றிருக்கிறார் திருவாரூர் தங்கராசு. பெரியார் இயக்கம் எந்தப் பெயரில் இருந்தாலும் அது குறித்த நிறைகுறைகள், விமர்சனங்கள் இருந்தாலும்  பெரியார் இயக்கத்தில் வந்து சேர்ந்துவிட்ட தோழர்கள் ஒவ்வொருவரும் இந்தக் கொள்கைப் பிடிப்பிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியவே முடியாது. கடலில் வாழும் மீன் கரையில் தூக்கிப் போட்டால் உயிர் வாழ முடியாது. பெரியாரியலில் மூழ்கிய தோழர்களின் கொள்கை உணர்வுகளும் அப்படித்தான். ‘இயக்கம்’ என்ற எல்லைகளைக் கடந்தது பெரியாரியம். அது சமூக மாற்றத்துக்கான தத்துவம் மட்டுமல்ல, வாழ்க்கை முறையும்கூட. கொள்கை உறுதி, நேர்மை, தன்னலமற்ற மறுப்பு, புகழ் வெறுப்பு போன்ற உயரிய மரபுகளை விட்டுச் சென்றிருக் கிறது,  நமது மூத்த பெரியார் தலை முறை! அத்தகைய அழுத்தமான அடை யாளங்களில் ஒருவரான திருவாரூர் தங்கராசு விடைபெற்று விட்டார்.

சுயமரியாதை இயக்கமும், குடி அரசும் வாழ்வியலுக்கான பல சொல் லாக்கங்களை உருவாக்கியது. ‘கால மானார்’, ‘விண்ணுலகம் சென்றார்’, ‘மறைந்தார்’ என்ற வழமையிலிருந்து மரணத்துக்கான சொற் களுக்கு மாற்றாக, பெரியார் முன் வைத்த சொல் ‘முடிவெய்தினார்’. ஆம், திருவாரூர் தங்கராசு முடிவெய்து விட்டார். அவர் காட்டிச் சென்ற கலை வழியிலான, மேடை வழியிலான கருத்துப் பரப்பு களின் வடிவங்களை மேலும் வளர்த் தெடுத்து, மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க உறுதி ஏற்போம் என்றார் விடுதலை இராசேந்திரன்.

பெரியார் முழக்கம் 09012014 இதழ்

You may also like...