இடஒதுக்கீடுகளை புறந்தள்ளும் தமிழக அரசைக் கண்டித்து ஜன.25இல் ஆர்ப்பாட்டங்களை நடத்துவீர்!

தமிழக அரசே!

  • ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர் நியமனங்களை ரத்து செய்!
  • ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ என்ற பெயரைப் பயன்படுத்தி,

இட ஒதுக்கீட்டு உரிமைகளைப் பறிக்காதே!

ஓமந்தூர் ராமசாமி தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக்கும் தமிழக அரசு மருத்துவர் தேர்வில் இடஒதுக்கீடுகள் பின்பற்றப்பட மாட்டாது என்று அறிவித்திருக்கிறது.

ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுவதால் இடஒதுக்கீட்டை அமுலாக்க முடியாது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா! ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்துவிட்டு பிறகு நிரந்தர மாக்கப்படுவதே இதில் அடங்கியுள்ள சதி.

எனவே ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும். அதற்கு பதிலாக  தமிழ்நாடு முழுதும் –

  • மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் தகுதி வாய்ந்த மருத்துவர்களை இந்த மருத்துவமனையில் பணியமர்த்தம் செய்ய முடியும்.
  • ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவ மனைகளுக்கு இடஒதுக்கீடு கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்கிறார், முதல்வர் ஜெயலலிதா. ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ என்ற பெயரை மாற்றி வேறு பெயரை ஏன் சூட்டக் கூடாது?
  • தமிழ்நாடு மருத்துவ வாரியத்தை தனது ஆட்சியில் தொடங்கி இட ஒதுக்கீடு வழியாக பதவிகள் நிரப்பப்பட்டன என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், இந்த மருத்துவமனையை தமிழ்நாடு அரசே, தனது நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து ‘கார்ப்பரேட்’ மருத்துவமனையாக்க திட்டமிடுகிறது. அதற்கேற்பவே ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு, இட ஒதுக்கீடுகளும் ஒழிக்கப்படுகின்றன.

தனியார் நடத்தும் ‘அப்பல்லோ’ போன்ற அதி நவீன மருத்துவமனை களுக்கே மருத்துவ ஆலோசகர்களாக தமிழக அரசு மருத்துவர்கள் இருக்கும் போது அவர்கள் ‘தகுதியற்றவர்கள்’ என்பதுபோல அரசு கருதுவது பார்ப்பனியப் பார்வையேயாகும்!

ஆசிரியர் தேர்வுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களைக் குறைக்க மறுக்கிறது தமிழக அரசு (பிற மாநிலங்களில் குறைக்கப்பட்டிருக் கின்றன) தேர்வு நிலையிலேயே தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரை வெளியே தள்ளி விட்டு தேர்வு பெற்றவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாகக் கூறுவது மக்களை ஏமாற்றும் நாடகம்!

இடஒதுக்கீட்டை அமுல்படுத்தாமல் இருப்பதற்கான குறுக்கு வழிகளைத் தேடத் தொடங்கி விட்டது, அ.இ.அ.தி.மு.க. ஆட்சி.

சமூக நீதியின் தலைநகர் என்ற பெருமைக்குரிய தமிழ் நாட்டில் இடஒதுக் கீடுகள் குழிதோண்டி புதைக்கப்படும் ஆபத்துகள் தொடங்கி விட்டன.

சமூகநீதியை மீட்டெடுக்கப் போராடுவோம்!

ஜனவரி 25 ஆம் தேதி ஒத்த கருத்துள்ள அமைப்புகளை இணைத்து ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

– பொதுச் செயலாளர் தலைமைக் கழகம்

திராவிடர் விடுதலைக் கழகம்

பெரியார் முழக்கம் 16012014 இதழ்

You may also like...