திராவிடர் கழகம் வரலாற்றை திரிக்க வேண்டாம்!

பெரியார் – தமிழ்நாடு தனி நாடாக வேண்டும் என்று கூறியது குறித்து வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தி.க. தலைவர் கி.வீரமணி ‘உண்மை’ இதழில் (ஜன.1-15) கீழ்க்கண்ட பதிலை அளித்துள்ளார்.

“சமூக இழிவு ஒழிப்பு மாநாடுதான் அவர் கடைசியாக நடத்தியது; பேசியது. அதற்காக விடுத்த அறிக்கையில் ‘நானே பிரிவினை கேட்கவில்லையே!’ என்று அறிக்கையை விடுத்தார். அது விடுதலை நாளிதழில் வெளி வந்துள்ளது. ‘விடுதலை’க்கான தேவை அவசியம் வேறு – கழகம் விடுதலை கேட்டது என்ற நிலை வேறு’ என்று பதிலளித்துள்ளார். பெரியார் தமிழ்நாடு தனிநாடாக பிரிய வேண்டும் என்று வலியுறுத்தியது உண்மை. தி.க. தலைவர், அதை ஏற்கிறாரா? இல்லையா என்பது, அவரது கொள்கை. அதற்காக பெரியார் கருத்தை மறைக்க முயல்வது வரலாற்றுத் துரோகம்.

தி.க. தலைவர் கூறுவதுபோல் பெரியார் கடைசியாக பேசியது சமூக இழிவு ஒழிப்பு மாநாடு அல்ல.

பெரியார் சமூக இழிவு ஒழிப்பு மாநாடு நடத்தியது 1973 டிசம்பர் 8, 9 தேதிகளில்! அதுவே அவரது கடைசிப் பேச்சு அல்ல. கடைசி உரை நிகழ்த்தியது சென்னை தியாகராயர் நகரில் 19.12.1973இல்! இறுதிப் பேருரையில், சூத்திர இழிவு, ஒழிப்புப் போராட்டத்துக்கு பெரியார் அறைகூவல் விடுத்தார். அப்போது இவ்வாறு கூறினார்:  “நான் என்ன செய்கிறேன். இந்தச் சாக்கிலேயே நம்நாடு நம்முடையதாக ஆகிவிடாதா? அவ்வளவுதான்!” என்று தான் முழங்கினார். எவ்வளவோ முறை எடுத்துக் கூறியும் தி.க. தலைவர் வீரமணியோ, மீண்டும் மீண்டும் ‘பொய்’யையே எழுதுகிறார்.

இதே ‘உண்மை’ இதழில், ‘பஞ்ச கவ்யம்; கங்காஜலம்’ என்ற கட்டுரை ஒன்று வெளி வந்துள்ளது. 2.11.1946இல் ‘காலி மணி பர்ஸ்’ என்ற புனைப் பெயரில் ‘குடிஅரசில்’ பெரியார் எழுதிய கட்டுரை என்று ‘உண்மை’ வெளியிட்டுள்ளது.

அது உண்மையல்ல. ‘காலி மணிபர்ஸ்’ என்ற தலைப்பில் ‘கிண்டல்’ கட்டுரைகளை ‘குடிஅரசு’ ஏட்டில் எழுதியவர் குத்தூசி குருசாமி. குருவிக்கரம்பை வேலு எழுதிய குத்தூசி குருசாமி வரலாற்றிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டுரை நடையைப் படித்த எவருக்குமே அதை எழுதியது குத்தூசி என்பது புரிந்துவிடும். ஆனால், ‘உண்மை’யோ தந்தை பெரியார் எழுதியதாக பதிவு செய்கிறது.

‘குடிஅரசு’ தொகுப்புகளை கழகம் வெளியிட முன்வந்தபோது அதை எதிர்த்து வழக்குத் தொடுத்த திராவிடர் கழகம், வரலாற்றுத் தவறுகள் நிகழ்ந்து விடும் என்று கூறியது. தங்களால் மட்டுமே சரியான வரலாற்றுத் தகவல்களைக் கூற முடியும் என்று மார்தட்டியது.

ஆனால், குத்தூசி குருசாமி எழுதியதை பெரியார் எழுதியதாக எழுதுவதும், பெரியார் கடைசி பேச்சு – பெரியார் திடலில் நடந்த சமூக இழிவு ஒழிப்பு மாநாடுதான் என்று எழுதுவதும், பெரியார் தனிநாடு கேட்கவில்லை என்பதும் தான் வரலாற்றை பிழையில்லாமல் எழுதுவதா?

பெரியார் முழக்கம் 23012014 இதழ்

You may also like...