பன்னீர்செல்வமே! காலம் சென்று விட்டாயா? : பெரியார் (பன்னீர்செல்வம் முடிவுக்கு எழுதிய இரங்கல்)

நமது உண்மைத் தோழரும், உற்ற துணைவரும், உள்ளும் புறமும் ஒன்றாய் உள்ளவரும், தமிழர் இயக்கத்தில் உறுதியான பற்றுக் கொண்டு அல்லும் பகலும் உழைத்து வந்தவரும், நம்மிடத்தில் களங்கமற்ற அன்பும் பற்றுதலும் விசுவாசமும் கொண்டிருந்தவரும், நினைத்தால் திடுக்கிடும்படி எதிரிகள் நெஞ்சில் எப்பொழுதும் திகிலை உண்டாக்கிக் கொண்டிருந்தவருமான அருமை பன்னீர் செல்வம் அவர்களை, இன்று, காலம் சென்ற பன்னீர் செல்வம் என்று எழுத நேரிட்டதற்கு மனம் பதைக்கிறது! நெஞ்சு திக்கு திக்கென்று அடித்துக் கொள்கிறது! மெய் நடுங்குகிறது! எழுதக் கையோடவில்லை; கண் கலங்கி மறைக்கிறது; கண்ணீர் எழுத்துக்களை அழிக்கிறது!

பன்னீர்செல்வத்திற்குப் பாழும் உத்தி யோகம் வந்ததும் போதும்; அது அவரது உயிருக்கே உலையாய் இருந்ததும் போதும்! தமிழர்களைப் பரிதவிக்கவிட்டுவிட்டு மறைந்து விட்டார். இந்த உத்தியோகம் ஏன் வந்ததென்றே ஒவ்வொரு வினாடியும் தோன்றுகிறது. அவருக்கடுத்தாற்போல் – யார், யார் என்று மனம் ஏங்குகிறது; தேடுகிறது; தேடித் தேடி ஏமாற்றமடைகிறது!

என் மனைவி முடிவெய்தியபோதும் நான் சிறிதும் மனம் கலங்கவில்லை; ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்கவில்லை.

என் தாயார் இறந்தபோதும் – இயற்கை தானே, 95 வயதுக்கு மேலும் மக்கள் வாழவில்லையே என்று கருதலாமா?  இது பேராசை அல்லவா என்று கருதினேன்!

10 வயதிலேயே லண்டனுக்கு அனுப்பிப் படிக்க வைத்த ஒரே அண்ணன் மகன், படித்துவிட்டு இந்தியா வந்து சேர்ந்து சரியாக 20 வயதில் இறந்து போனதற்காகவும் பதறவில்லை; சிதறவில்லை!

பன்னீர்செல்வத்தின் மறைவு மனத்தை வாட்டுகிறது.

தமிழர்களைக் காணுந்தோறும் காணுந் தோறும் – தமிழர் நிலையை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் நெஞ்சம் பகீரென்கிறது!

காரணம், முன் சொல்லப்பட்ட மனைவி, தாயார், குழந்தை ஆகியவர்கள் மறைவு என் தனிப்பட்ட சுக துக்கத்தைப் பொறுத்தது; தன்னலம் மறையும்போது அவர்களது மறைவின் நினைவும் மறந்துபோகும். பன்னீர் செல்வத்தின் மறைவு  பொது நலத்தைப் பொறுத்தது; தமிழர்களின் நிலையைப் பொறுத்தது. எனவே தமிழர்களைக் காணுந் தோறும் – நினைக்குந்தோறும் பன்னீர் செல்வம் ஞாபகத்துக்கு வருகிறார்! இது என்று மறைவது? இவருக்குப் பிறகு யார் என்றே திகைக்கிறது! பாழாய்ப்போன உத்தியோகம் – சர்க்கரை பூசின நஞ்சுருண்டை குத்திய தூண்டில் முள்ளாக இருந்து விட்டது!

அம் முள்ளில்பட்ட மீனாக ஆகிவிட்டார் செல்வம்!

இனி என் செய்வது? தமிழர் இயக்கமானது தோன்றிய நாள் முதல் இப்படியே பல ‘தத்துக்களுக்கு’ ஆளாகி வந்திருக்கிறது என்றாலும் – நாளுக்கு நாள் முன்னேறியே வந்திருக்கிற அனுபவந்தான் நமக்கும் தமிழ் மக்களுக்கும் சிறிது ஆறுதலளிக்கும் என்று கருதுகிறேன்.

காலம் சென்ற பன்னீர்செல்வமே! காலம் சென்று விட்டாயா? நிஜமாகவா? கனவா? தமிழர் சாந்தி பெறுவாராக!

– பெரியார், ‘குடிஅரசு’, 17.3.1940

பெரியார் முழக்கம் 23012014 இதழ்

You may also like...