நடிகர் சத்தியராஜ் பேச்சு: பெரியாரைத் தவிர்த்துவிட்டு எந்த சமூக மாற்றத்தையும் செய்ய முடியாது

‘அந்தி மழை’ மாத இதழில் எழுத்தாளர் பாமரன் ‘சொதப்பல் பக்கம்’ என்ற பெயரில் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு ‘சொதப்பல்’ என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு நிகழ்ச்சி 16.2.2014 ஞாயிறு மாலை 6 மணியளவில் கோவை ஆர்.எஸ்.புரம் பாரதிய வித்யாபவன் அரங்கில் நடைபெற்றது. நடிகர் சத்தியராஜ், விடுதலை இராசேந்திரன், எழுத்தாளர் அழகிய பெரியவன், ‘அந்தி மழை’ நிறுவனர் இளங்கோவன் ஆகியோர் உரையாற்றினர். நிர்வாக ஆசிரியர் என். அசோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். முனைவர் இரா. சுப்பிர மணியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பாமரன் ஏற்புரை நிகழ்த்தினார்.

நடிகர் சத்தியராஜ் தமது உரையில் : அடுத்த ஆண்டு தனக்கு 60 ஆம் ஆண்டு திருமணம் நடத்த வேண்டும் என்று குடும்பத்தினரும் நண்பர்களும் தெரிவித்தக் கருத்தை, தான் மறுத்துவிட்டதாகவும்,  தனது மனைவிக்கு 60 வயது நிறைவு பெறும்போது அதை சுயமரியாதைத் திருமணமாக நடத்துவேன் என்றும் அறிவித்தார். ஆணுக்கு 60  வயது நிறைவு பெற்றால்தான் 60 ஆவது திருமணம் நடத்த வேண்டுமா? பெண்களுக்கு ஏன் நடத்தக் கூடாது என்ற கேள்வியை எழுப்பினார்.

தமிழகத்தில் ஜாதி-தீண்டாமைக் கொடுமைகள் நீடிப்பதை சுட்டிக் காட்டி கண்டித்த அவர், ஒவ்வொரு ஜாதியினரும் தமது ஜாதிக்குக் கீழே உள்ள மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து, சொந்த ஜாதிப் பெருமையை ஆதிக்கத்தை மறுப்பதுதான் உண்மையான ஜாதி ஒழிப்பு என்றார். பெரியார் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு, எந்த சமூக மாற்றத்தையும் கொண்டுவர முடியாது என்று கூறினார் சத்தியராஜ், ‘அந்திமழை’ப் பதிப்பகம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

மேடையில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் சிவா, ஜோ. ரஞ்சனா ஆகியோரின் ஜாதி-மத மறுப்பு திருமணத்தை பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நடத்தி வைத்தார். கழக ஏட்டுக்கு மணமக்கள் சார்பில் ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 20022014 இதழ்

You may also like...