வினாக்கள்… விடைகள்…!

அமைச்சர்கள் – தலைவர்களின் குடும்ப வாரிசு களுக்கு தேர்தலில் போட்டியிட, காங்கிரஸ் அனுமதிக்காது.       – ராகுல் அறிவிப்பு

நல்ல முடிவு! அம்மா சோனியா, சகோதரி பிரியங்காவிடம் கலந்து ஆலோசித்தீர்களா, ராகுல்?

மோடி எனக்கு சிறந்த நண்பர்.    – கலைஞர்

ஆமாம்! திருவாரூரில் ‘முரசொலி’யை கையெழுத்துப் பிரதியாக வெளியிட்டபோது கலைஞரின் பேனாவில், மை நிரப்பிக் கொடுத்து எழுது எழுது என்று உற்சாக மூட்டிய நண்பர் !

‘கருணை மனு’ குறித்து குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவில் எந்த மறுபரிசீலனைக்கும் இடமில்லை.    – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

இப்படி மொட்டையா சொன்னா எப்படி? அதாவது சோனியா விருப்பப்படி உள்துறை அமைச்சர் முடிவெடுத்து, அதை குடியரசுத் தலைவர் வழியாக வெளியிடும் அறிவிப்பில் உச்சநீதிமன்றமேயானாலும் தலையிடும் உரிமையே கிடையாது என்று விளக்கமாகச் சொல்லுங்க! அப்பத்தானே புரியும்!

இராணுவ வீரர்கள் ஒவ்வொருவரும் பா.ஜ.க.வை ஆதரிக்க வேண்டும்; பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் தளபதி வி.கே.சிங் அழைப்பு.              – செய்தி

எதுக்கு தலைய சுத்தி மூக்கைத் தொடுறீங்க… பா.ஜ.க.வே இராணுவத்தை தேர்தலில் நிறுத்தி, இராணுவ தளபதிகளை ஆட்சிக்குக் கொண்டு வந்துடுங்க, எல்லாமே முடிஞ்சிடும்!

கோயில் உண்டியலில் ‘காணிக்கை’ செலுத்து வதைவிட, வருமான வரி கட்டினால் நாட்டு மக்களுக்கு பயன் கிடைக்கும்.  – நடிகர் கமலகாசன்

அதாவது, வருமான வரிகட்டாமல் ஏய்ப்பவர்கள்தான் அந்த பாவத்தைப் போக்க உண்டியலில் காணிக்கை போடுகிறார்கள் என்பதை நாகரிகமாகச் சொல்லிட்டீங்க… கமலுக்கு ஒரு ‘ஓ போடுங்க….!’

முஸ்லீம் சமுதாயத்துக்கு எப்போதாவது நாங்கள் தவறு செய்திருந்தால் தலைவணங்கி மன்னிப்புக் கேட்கிறோம்.  – பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங்

அப்படி எல்லாம் எதுவும் நடக்கவே இல்லீங்க. குஜராத்தில்கூட மூன்றுமுறை முதல்வராக இருந்த மோடி, ஒரு சட்டசபை தொகுதி யிலேகூட முஸ்லீமை நிறுத்தி வைத்து தொந்தரவு கொடுக்கவே இல்லைங்க. அந்த நன்றியை எல்லாம் மறக்கவே முடியாதுங்க!

கூட்டணி குறித்து அரசியல் கட்சிகள் ‘பேச்சு வார்த்தை’ தீவிரம்.  – செய்தி

நல்லா நடத்துங்க… ஆனால், பேச்சுக்கும் வார்த்தைக்கும் உள்ள வித்தியாசத்தை வாக் காளர்களுக்கு, கொஞ்சம் விளக்குங்கய்யா….

ஊழலுக்கு எதிரான அவசரச் சட்டம், மத்திய அமைச்சரவை ஆலோசனை!  – செய்தி

ஆமாங்க… முதலில் சட்டம் அவசரமாக வந்திடட்டும். ஊழலை அப்புறமா ‘சாவகாசமாக’ ஒழிச்சுக்கலாம்!

‘மோடி மீன் விற்பனைக்கடை’ பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் திறந்து வைத்தார்.  – செய்தி

பலே! இல. கணேசன், மீன் விற்க வந்துட்டாரே! இந்த மீன்களையும் இந்து மதத்துல சேத்துடாதீங்க. அவையாவது மதமில்லாமலே சாகட்டும்!

பெரியார் முழக்கம் 06032014 இதழ்

You may also like...