ஊழல் அதிகாரியைக் கைது செய்: புதுவை கழகம் முற்றுகைப் போராட்டம்

புதுச்சேரி அரசில் அரசுச் செய லாளராகப் பணியாற்றும் ராக்கேஷ் சந்திரா என்னும் அதிகாரி ஏராளமான ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் ஆவார்.
மருத்துவக் கல்லூரி இடங்களில் 50 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீட்டு அளித்தாக வேண்டும் என்ற விதியை 50 இடங்கள் அளித்தாக வேண்டும் என்று திரித்துக் கூறி இடஒதுக்கீட்டின் பயன் மாணவர்களுக்கு கிடைக்காமல் செய்தவர்.
ஆசிரியப் பணித் தேர்வில் தகுதி அடிப்படையில் தேர்வு பெற்றோரையும் ஒதுக்கீட்டுக் கணக்கில் வைத்து ஏராளமான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களின் வேலை வாய்ப்பைப் பறித்தவர். மேலும் சம்பள விகிதம் அதிகமாக உள்ள ஆசிரியப் பணியிடங்களை கெசட்டட் பதவி எனக் கூறி இடஒதுக்கீட்டில் வராது என்று நியமனங்களில் ஊழல் செய்தவர்.
புதுவைக் காகித ஆலைக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தை, அவ்வாலை இயங்காததால் அரசுக்குத் திருப்பி அளிக்க வேண்டும் என்ற ஒப்பந்த விதிகளுக்கு முரணாக, அரசின் அனுமதியின்றியே தனியாருக்கு விற்றதால் 7.5 கோடி ஊழல் என்று 2014 ஜூலை மாதமே ஏமாற்றுதல் (420), அதிகார துஷ்பிரயோகம் ஆகியப் பிரிவுகளில் மத்திய புலனாய்வுப் பிரிவால் வழக்கு பதியப் பெற்றவர்.
சுனாமி நிதி ஒதுக்கீட்டில் ஊழல் செய்ததால் வழக்குப் பதிவு செய்து சிறைப் படுத்தப்பட்டவர்.
எல்லாக் கட்சியினருக்கும், மருத்துவக் கல்லுரியில் இடம் போன்ற சலுகைகளைச் செய்து வந்துள்ளதால், எந்த அரசியல் கட்சியினரும் எதிர்க்குரல் எழுப்பாத சூழலில், இவ்வாறான சமூக நீதிக்கெதிரான – ஊழல் குற்றவாளிமீது உடனடியாக இடைநீக்கம் செய்தும், கைது செய்தும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையோடு, புதுவை மாநில திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் பல்வேறு அமைப்புகளின் பங்கேற் போடு தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் 16-12-2015 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.
அண்ணா சிலை அருகிலிருந்து, புதுவை மாநிலக் கழகத் தலைவர் லோகு அய்யப்பனின் கோரிக்கை முழக்கங்களோடு ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக தலைமைச் செயலகத்தை நெருங்கியபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடையை மீறி முன்னேறிய 15 பெண்கள் உள்பட 400க்கும் மேற்பட்டோரை கைது செய்து மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். பிற்பகல் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

பெரியார் முழக்கம் 24122015 இதழ்

You may also like...