ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்திர முதலியார்
ஸ்ரீமான். முதலியார் தனது ‘நவசக்தி”யில் “எனது நிலை” என்ற தலைப்பிட்டு நமது “குடி அரசின்” 29 கேள்விகள் கொண்ட கட்டுரைக்கு மறுப்பு எழுதுவது போல் எழுதியிருக்கிறார். அதற்கு எமது குடி அரசிலும் எமது நிலை என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதக் கருதி, இவ்வாரம் “குடி அரசுக்கு” எனது நிலை ஸ்ரீமான் முதலியார் நிலை ஆகிய இருவர் நிலை முழுவதையும் விவகரிக்க இடம் போதானெக்கருதி இவ்வாரத்திய “குடி அரசு” பன்னிரன்டு பக்கத்தை, இதற்கென்றே பதினாறு பக்கமாக்கப்பட்டது. வெளிப்படுத்த முடியாத பல இடங்களிலிருந்தும், நண்பர்களிடமிருந்தும், கடிதங்கள் வந்ததாலும், ஸ்ரீமான் முதலியார் அவர்களுக்கும், எனக்கும் பொது வான நண்பர்கள் சிலர் நேரில் வந்து 144 தடை உத்தரவு போட்டதாலும், கருதிய படி நடக்கமுடியவில்லை. ஆனாலும், ஸ்ரீமான். முதலியாரின் மறுப்பில் காணும், விஷயங்களை சுமார் 30 கூறுகளாய் பிரித்திருந்தாலும், இரண்டு ஒன்றை மாத்திரம் பொது ஜனங்களுக்கு விளக்க நண்பர்களின் அநுமதி பெற்று ஓர் சிறு குறிப்பை எழுதி முடித்து விடுகிறேன்.
ஸ்ரீமான். முதலியார் மறுப்பில் காணும் முக்கிய விஷயங்களில் சில கீழே விவரிக்கிறேன்:-
- “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஆதரித்து ஸ்ரீமான். முதலியார் எங்கும் பேசவில்லை, எழுதவில்லை” யென்பது.
- “ஸ்ரீமான். கிருஷ்ணசாமிப் பாவலர், ஸ்ரீமான். இராமநாதன் பிரேரேபனைக்கு 100-க்கு 90 பேர், பிராமணரல்லாதாராயிருக்க வேண்டு மென்று ஒரு துண்டு ஒட்டவைத்தார்” என்பது.
- “ஸ்ரீமான். இராமநாதனின் தீர்மானம் விஷயாலோசனைச் சபையில் தோற்றுப்போய் விட்டதால், மகாநாட்டில் வலியுறுத்தப்போவதாக அறிவித் ததை ஏற்றுக் கொள்ளப்பட்டது” என்பது.
- “மகாநாட்டில் முதல் தீர்மானம் விவாதத்திலிருந்த காலத்தில், 25 பிரதிநிதிகள் கையெழுத்துக் கேட்டதாகச்” சொல்லுவது.
- “ஸ்ரீமான். நாயக்கர் காங்கிரஸோடு சுயராஜ்யக்கக்ஷி கலந்து விடுவ தற்கு சம்மதிக்காமல், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எப்படி கேட்கலா மென்று கருதி வகுப்புவாரி தீர்மானத்தை ஒழுங்குத்தவறென்று நிராகரித்ததாகச் சொல்வதும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானத்தை காங்கிர° மகாநாட்டில் அநுமதிப்பது அநாவசியம்” என்பது.
பதில்
- சென்னை மாகாணச் சங்கத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் ஓர் முக்கியமான கொள்கையென்பதும் அச்சங்கத்தின் முக்கிய°தராகவே ஸ்ரீமான் முதலியார் விளங்கினாரென்பதும் அச்சங்கத்தை ஆதரித்த முக்கிய பத்திரிகையான “ தேசபக்தனுக்கு”க்கு ஸ்ரீமான் முதலியார் ஆசிரியரா யிருந்தாரென்பதும் அதற்குள் உலகம் மறந்திருக்காது. இந்நிலையில் இவர் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை தான் ஆதரிக்கவில்லை யென்று சொல்லுவது, சரியா யென்பதை வாசகர்களே கவனித்துக் கொள்ளட்டும். மற்றும் “தேச பக்தன்” பத்திரிக்கையின் பிரதிகளை ஸ்ரீமான். முதலியாரே சாவதானமாய் படித்துப் பார்க்கட்டும்.
- ஸ்ரீமான். பாவலர், ஸ்ரீமான். இராமநாதன் தீர்மானத்திற்கு ஒரு துண்டு ஒட்டவைத்தாரென்று சொல்லுவது உண்மைக்கு விரோதமானது. ஸ்ரீமான். இராமநாதன் தீர்மானம் விஷயாலோசனை சபையில் தோற்றுப்போன பிறகு தான், ஸ்ரீமான். பாவலர் தன்னுடையதைப் பின் வாங்கிக் கொண்டிருக்கிறார். இவர் பின்வாங்கிக்கொள்ள ஸ்ரீமான். முதலியார் அநுமதி கொடுத்தது, ஒப்புக்கொள்ளத்தக்கதல்லவென்று கூட நானும் ஸ்ரீமான். தண்டபாணி பிள்ளையும் விஷயாலோசனைக் கமிட்டியில் வாதாடியிருக்கிறோம். இவை யெல்லாம் ஸ்ரீமான். முதலியார் ஞாபகமில்லாமற் சொல்லுகின்றாரென்றுகூட சொல்ல மனம் வரவில்லை. உண்மைக்கு நேர்விரோதமாகப் பேசுகின்றா ரென்பது தான் தனது அபிப்பிராயம்.
3 & 4. ஸ்ரீமான். இராமநாதனின் விஷயாலோசனைக் கமிட்டியில், தோற்றுப் போன தீர்மானத்தை மகாநாட்டில் வலியுறுத்த அநுமதித்ததாகச் சொல்லுவது ரொம்பவும்சரி. ஆனால் அப்படி ஒப்புக்கொண்ட அவர் மகாநாட்டிற்கு வந்தபிறகு ³ தீர்மானத்தைப் பிரேரேபிக்க, 25 பிரதிநிதிகள் கையெழுத்து வேண்டுமென்று சொன்னதை மாத்திரம் ஒப்புக்கொள்ளு கிறாரே தவிர, அப்படிச்சொல்ல நேர்ந்த அவசியமென்னவென்பதை அவர் சொல்லவில்லை. அல்லாமலும், முதல் தீர்மானம் மகாநாட்டில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், 25 கையெழுத்துக் கேட்டதாகச் சொல்வது மனதறிந்து சொல்லும், உண்மைக்கு மாறுபட்ட விஷயமாகும். முதல் தீர்மானத்தின், இரண்டாவது பாகம் பின் வாங்கிக்கொள்ளப்பட்டு, முதல் பாகம் நிறைவேற்றப்பட்ட பின்பு நானும், ஸ்ரீமான். எ°. ஸ்ரீனிவாசய் யங்காரும், பிராமணர் – பிராமணரல்லாதார் விஷயத்தைப்பற்றி தனியாக ஓர் இடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த சமயத்தில் இது சொல்லப்பட்டது என்பது உறுதி. ஸ்ரீமான். ஸ்ரீனிவாசய்யங்கார் பக்கத்தில் பேசிக்கொண் டிருக்கும்போதுதான், ஸ்ரீமான். இராமநாதன் என்னிடம் வந்து, ஸ்ரீமான். முதலியார் திடீரென்று 25 பிரதிநிதிகள் கையெழுத்துக் கேட்கிறாரென்று சொன்னது. அதன் பிறகுதான் கையெழுத்து வாங்க ஏற்பாடு செய்து சுமார் 30 கையெழுத்து வாங்கிக் கொடுத்தது. அது சமயம், கல்பாத்தித் தீர்மானம் விவாதத்திலிருந்தது. இதற்கு வேண்டிய ருஜுக்களும் இருக்கின்றது.
- காங்கிரசோடு சுயராஜ்யக் கட்சி கலருவதற்கும், வகுப்புவாரிப் பிரதி நிதித்வம் கேட்பதற்கும் என்ன சம்மந்தம்? வகுப்புவாரிப் பிரதிநிதித்வ மென்பது சட்டசபைப் பிரவேசம் மாத்திரந்தானா? நமது நாட்டில் சட்டசபை °தாபனங்கள் தேர்தல்களில் ஒட்டுமொத்தம் ஒரு நூறு °தானங்கள்கூட இருக்காது. சட்டசபைகளின் மூலம் ஊதியம் பெறும் °தானம் ஒரு பத்து °தானங்கள்கூட இருக்காது. நான் கேட்கும் வகுப்புரிமை °தானங்கள் °தல °தாபனங்களுட்பட பொதுஜன ஊழியம், அரசியல் ஊதிய அதிகாரப் பதவி களுட்பட காங்கிர° முதலிய பொது °தாபனங்களின் ஆதிக்கங்கள் உட்பட, ஆகிய இவைகளில் சுமார் லட்சக்கணக்கான °தானங்களுக்குக் குறையாமல் உள்ள பதவிகளுக்கும், அதிகாரத்திற்கும், நான் வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் கேட்பது. இவ்வளவு பொறுப்புள்ள உரிமைகளையும் காங்கிர°, சுயராஜ்யக் கட்சியார் வசம் ஒப்படைத்திருக்கிறதா? °தல °தாபனம் முதலியவை களைக் காங்கிர°காரர்கள் கைப்பற்ற வேண்டு மென்று, காஞ்சீபுரம் மகாநாடு தீர்மானித்திருக்கிறதேயல்லாமல், சுயராஜ்யக் கட்சியார் கைப்பற்ற வேண்டு மென்று தீர்மானிக்கவில்லை. லக்னோ பேக்டும், சுயராஜ்யக்கட்சி ஏற்பட்ட தற்குப் பிறகுகூட கல்கத்தா பேக்டும், காங்கிர° மூலியமாகவும், அகில இந்திய காங்கிர° கமிட்டிக்கு வகுப்புரிமையும், காங்கிர° மூலமாய் பிரேரே பிக்கப்பட்டதேயல்லாமல், சுயராஜ்யக்கட்சியின் தயவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை. காங்கிர° சார்பாக கூட்டப்பட்ட இம்மகாநாடு, வகுப்புவாரிப் பிரதிநிதித்வத்தை எடுத்துக் கொள்ளவேண்டியது அனாவசிய மென்று தான் தள்ளிவிட்டேனென்று ஸ்ரீமான். முதலியார் சொல்வதில் எவ்வளவு ஒழுங்கிருக்கிறதென்பதை வாசகர்கள் கவனிப்பார்களென்று நினைக்கிறேன்.
இதே ஸ்ரீமான். முதலியாரவர்கள் காஞ்சீபுரம் மகாநாட்டுத் தலைமை தனக்குக் கிடைக்கும் முன்பாகத் தனது பத்திரிக்கையிலும், பல மேடைகளிலும் நமது நாட்டில் சுயராஜ்யக் கட்சி ஒன்று தோன்றினபிறகுதான் வகுப்புச் சண்டைகளும், வகுப்புப் பூசல்களும், வகுப்புப் பிணக்குகளும் ஏற்பட்டதாகக் கை ஓய்வுரும்படியும், வாய் ஓய்வுரும்படியும் எழுதியும், பேசியும் வந்திருக்கிறார். அப்படியிருக்க, சுயராஜ்யக் கட்சியின் திட்டத்தைக் காங்கிர° எடுத்துக்கொண்டு நடத்திவைக்கவேண்டும் என்ற தீர்மானத்தைத் தானே பிரயத்தனப்பட்டுக் கொண்டு வரச்செய்ததாகவும், அதை ஸ்ரீமான். நாயக்கர் எதிர்த்தால், வகுப்புரிமை கேட்பதற்கு அர்த்தமில்லையென்றும், ஸ்ரீமான். முதலியார் எழுதுவதற்கு என்ன அர்த்தமென்று விளங்கவில்லை.
கல்பாத்தியில் தெருவில் நடக்காமைக்காக சர்க்கார் சமாதானத்தின் பேரால் போடப்பட்ட 144 உத்திரவும், காஞ்சீபுரம் மகாநாட்டில் வகுப்புவாரிப் பிரதிநிதித்வ தீர்மானத்தைப் பிரேரேபிக்கக்கூடாதென்று ஸ்ரீமான். திரு.வி. கலியாணசுந்தர முதலியார், ஒழுங்கின்பெயரால் போடப்பட்ட 144 உத்தரவும், ஒரே சக்தியை அடிப்படையாகக் கொண்டது என்பதுதான் நமது முடிவு. அந்த சக்தி என்று நம் நாட்டைவிட்டு ஒழியுமோ அன்றுதான் நமது நாட்டுக்கும், சமூகத்துக்கும் விடுதலையும், சுயமரியாதையும் உண்டாகும். மற்றப்படி ஸ்ரீமான். முதலியாரவர்கள் என்னைப்பற்றி எழுதியிருக்கும் பல விஷயங்கள் என்னையே பொறுத்திருப்பதால், நான் அவற்றிற்கு சாவதானமாக நண்பர் களின் விடைபெற்றுப் பதிலெழுதுகிறேன்.
– ஈ.வெ.ரா
குடி அரசு – அறிக்கை – 27.12.1925