காஞ்சீபுரம் பிராமணரல்லாதார் மகாநாடு

 

இன்று தினம் பிராமணரல்லாதாராகிய நாம் எல்லோரும் இங்கு கூடியிருக்கிறோம்.  இத்தகைய பெரிய மகாநாடு எதன் பொருட்டு கூட்டப் பட்ட தென்பது பற்றியும் இதில் என்னென்ன விஷயங்களைக்குறித்து ஆலோசிக்கப்படும் என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ள இங்கு கூடியுள்ள பலரும் அவாக் கொண்டிருக்கக் கூடும்.  இம்மகாநாடு எந்த வகுப்பாரிடத்தும் அதிருப்தியாவது துவேஷமாவது காரணமாகக் கொண்டு கூட்டப்பட்டதன்று. தேசவிடுதலைக்காக ராஜீய விஷயத்தில் நமது நிலைமையைத் தெளிவாக்கி ஒரு திட்டம் நமக்கென அமைத்துக்கொள்வது நியாயமேயாம்.  நம்முடைய உரிமைகளையும் நன்மைகளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுவதன் நிமித்தம், இத்தகைய மகாநாடுகள் கூட்டவேண்டியது அத்தியாவசிய மென் றேற்படுகின்றது.  இதுபோன்ற மகாநாடுகள் சென்ற ஐந்தாறு ஆண்டுகளாக மாகாண மகாநாடும் காங்கிரசும் கூடும்போது அவ்வவ்விடத்திலேயோ பிறிதோரிடத்திலேயோ கூட்டப்படுவது வழக்கமாய் வருகிறது.  இத்தகைய மகாநாடுகளில் நமது முன்னேற்றத்திற்கான வழிகளைக் குறித்து ஆலோசித்து முடிவு செய்ய வேண்டுவது முதற் செய்ய வேண்டிய வேலைகளில் முக்கியமானதாகிறது.  தேசத்தில் பிராமணர் பிராமணரல்லாதார் என்ற தனிப்பட்ட கட்சிகள் தோன்றி பிணக்குறுவது அனைவரும் அறிந்த ஒரு விஷயமேயாகும்.  இவ்வாறு பிரிவினைகள் இல்லையென்று எவ்வளவுதான் மூடிவைத்த போதிலும் காங்கிரசிலும்கூட இத்தகைய பேதமுண்டென்பதை யாரும் மறுக்கமுடியாது.  இதனை வரவேற்புச் சபைத் தலைவர் பிரசங்கத் திலும், தலைவர் பிரசங்கத்திலும் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள்.  பிராமணர் பிராமணரல்லாதாரென்னும் பிரிவினை இல்லையென்பது உடலிலுள்ள புண்ணை மூடிவைத்து அழுகவிடுவதற்கொப்பாகும்.  அதற்கேற்ற பரிகாரம் செய்து உடல் நலத்தைக் கெடுக்கும் புண்ணை ஆற்றமுயலுவதே பொது நோக்குடைய அறிஞர் கடமையாகும்.  இத்தகைய பிரிவேற்பட்டுள்ளதால் பிராமணரல்லாதாரின் முன்னேற்றத்திற்கான விஷயங்களைக்குறித்து ஆலோசிக்கப்படவேண்டுவது ஒவ்வொரு பிராமணரல்லாத மக்களின் கடமை என்பதை நான் எடுத்துச் சொல்லவேண்டியதில்லை.  லக்னோ ஒப்பந்தத்தின் மூலமாக முகம்மதியர்களுக்குத் தனிப்பிரதிநிதித் துவமளிக்கப் பட்டதன் பலனாக அங்கே இந்து மு°லீம் வேற்றுமை பெரிதும் ஒழிந்து ஒற்றுமைக்கு இடமேற்பட்டது.  அது போன்றே நமது உரிமைகளைப் பாதுகாத்து நாம் முன்னேற்றமடைவதற்கான மார்க்கம் இன்னதென தெளிவாக்குவதன் பொருட்டே இப் பெருங்கூட்டம் கூட்டப்பட்டிருக்கின்றது.  இக்கூட்டத்தைச் செவ்வனே நடத்தி வைக்க ஸ்ரீமான். ராமலிங்கஞ் செட்டி யாரை தலைமை வகிக்கக்கேட்டுக் கொள்கிறேன்.

 

குறிப்பு: 22.11.1925 இல் காஞ்சீபுரத்தில் நடைபெற்ற பிராமணரல்லாதார்

மகாநாட்டில் சொற்பொழிவு.

குடி அரசு – சொற்பொழிவு – 29.11.1925

 

You may also like...