காஞ்சீபுரம் இராஜீய மகாநாடு
ஸ்ரீமான். ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அடியோடு அசல் தீர்மானத்தையே* எதிர்த்து பேசுகையில் தீர்மானமே ஜனங்களை ஏமாற்றுகிற மாதிரியில் எழுதியிருக்கிறதென்றும் பாட்னா தீர்மானம் என்ன என்பதும் சுயராஜ்யக்கட்சி திட்டம் என்ன என்பதும் இங்குள்ள அனேகருக்கே தெரியவில்லை என்றும் தெரியும்படி யாரும் எடுத்து சொல்லவில்லையென்றும் காங்கிரசின் பெயர் கெடாமலிருக்கவே சுயராஜ்யக்கட்சி திட்டத்தை காங்கிர° ஒப்புக்கொள்ள வில்லை யென்றும் காங்கிரசுக்காவது மகாத்மாவுக்காவது சுயராஜ்யக் கட்சித் திட்டத்தில் நம்பிக்கையில்லையென்றும் டில்லி காகிநாடா முதலிய தீர்மானங்களாலும் மகாத்மாவின் சலுகையாலும் தாங்கள் வேண்டியளவு பிரசாரம் செய்ய சவுகரியமேற்படுத்திக்கொண்டதோடு வேறுயாரும் எதிர் பிரசாரம் செய்யக்கூடாதென்று மகாத்மாவிடம் சிபார்சு பெற்றுக்கொண்ட தாலும் மீறி எதிர் பிரசாரம் செய்பவர்களை சுயராஜ்யக் கட்சிக்காரரும் அவர்கள் பத்திரிக்கையும் தூற்றி வருவதாலும் அதற்கு பயந்து கொண்டு யாரும் வெளியில் வராமல் வெகுசிலரே துணிவாய் அதன் தந்திரங்களையும் தப்பிதங்களையும் எடுத்துச் சொல்வதாலும் பொது ஜனங்களுக்கு சுயராஜ்யக் கட்சி ரகசியம் ஒன்றுமே தெரிவதற்கில்லாமல் போய்விட்ட தென்றும் இதனால் ஜனங்களுக்கு சட்டசபை என்கிற விஷமே தலைக்கேரி வருகிறதென்றும் இந்த லக்ஷணத்தில் காங்கிரசே சுயராஜ்யக் கட்சி திட்டத்தை ஏற்று வேலை செய்ய வேண்டும் என்பது “குதிரை கீழே தூக்கிப்போட்டது மல்லாமல் ஆளையே புதைத்துவிட குழி பறித்தது” போல் ஆகிவிடும் என்றும் 3 வருஷமாகியும் இதுவரையில் சுயராஜ்யக் கட்சி என்ன வேலை செய்தது? பத்திரிக்கையில் மாத்திரம் வெற்றி மேல் வெற்றி என்று பெரிய எழுத்தில் எழுதிக்கொள்ளுகிறது. யாருக்கு வெற்றி என்று பார்த்தால் சர்க்காருக்குத்தான் என்று தெரிகிறது. ‘இரட்டை ஆக்ஷியை ஒழித்தாய் விட்டது’ இதனால் லாபமென்னவென்று பார்த்தால் ஒத்தையாட்சி பலப்பட்டது, “வரவு செலவு பட்ஜட் நிராகரிக்கப்பட்டது. இதனால் லாபமென்ன வென்று பார்த்தால் முன்னிலும் அதிக வரி வசூலிக்கப்படுகிறது. “சட்டசபை அக்கிராசனர் பதவி சுயராஜ்யக் கட்சியாருக்கு வந்துவிட்டது.” இதனால் லாப மென்னவென்றால் சட்டசபையை ஒழுங்காய் நடத்த சுயராஜ்யக்கட்சியில் இருந்தே ஒரு ஆள் சம்பளத்துக்கு கிடைத்துவிட்டது. அந்த ஆள் ஒழுங்காய் நடத்தித்தருகிறேன் என்று சத்தியமும் செய்து கொடுத்திருக்கிறது. “மந்திரிகள் சம்பளத்தில் கொஞ்சம் ரூ. குறைந்தாய் விட்டது.” இதனால் என்ன லாபம் என்றால் வேறு வேலை செய்ய சர்க்காருக்கு ரூ. கிடைத்தது. இப்படியே சுயராஜ்யக் கட்சியார் செய்யும் ஒவ்வொரு வேலையும் சர்க்காருக்கு வெற்றி மேல் வெற்றியும் தேசத்திற்கு தோல்வி மேல் தோல்வியுமே அல்லாமல் எந்த உத்தியோகம் குறைந்தது? எந்த வெள்ளைக்காரர் சம்பளம் குறைந்தது? எந்த வழியில் நம்ம பணம் சீமைக்குப் போகாமல் இருக்கிறது?
சுயராஜ்யக் கட்சிக்கு இப்போது தேசத்தில் யோக்கியதையும் நாணையமும் செல்வாக்கும் குறைந்து அது சாகப்போகும் தருவாயிலிருந்து தப்புவதற்காக காங்கிரசையே சுயராஜ்ஜியக் கட்சியாக்க தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள். சுயராஜ்யக் கட்சி ஓட்டர்களிடம் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை என்றும் இப்பொழுது கொஞ்சம் சுயராஜ்ய கட்சிக்கு இடம் கொடுத்ததிலேயே தேசத்தில் எவ்வளவு கட்சிகளும் மன°தாபங்களும் வலுத்து நிர்மாணத் திட்டங்கள் கெட்டு ஒத்துழையாமை என்பதே ஜனங் களுக்கு ஒரு பழைய கதையாய் போய்விட்டதென்றும் இனியும் இடம் கொடுத்து காங்கிரசே சட்ட சபைக்கு போவதானால் மறுபடியும் பத்து வருஷ மானாலும் ஜனங்களை திருப்ப முடியாதென்றும் ஆகையால் தீர்மானத்தை அடியோடு நிராகரிக்க வேண்டும்.
குறிப்பு: 22.11.1925 இல் நடைபெற்ற காஞ்சீபுரம் ராஜீய மாநாடு தீர்மானத்தின் மீது சொற்பொழிவு.
குடி அரசு – சொற்பொழிவு – 29.11.1925