பரமசிவனுக்கும் பார்வதிக்கும் நடந்த சம்பாஷணை -நாரதர்

 

பார்வதி:-        பிராணனாதா !

பரமசிவன்:- என்ன பிராணனாயகி.

 

பா-தி:-  சில முனிசிபாலிட்டிகளில் சேர்மெனும், வை°சேர்மெனும் சண்டைபிடித்துக் கொள்ளுகிறார்களே அது எதற்காக?

ப-சி:-    என் கண்ணே! இது உனக்குத் தெரியாதா? திருடர்கள் இரண்டுபேர் தங்களுக்குள்ளாகவே சண்டைப்போட்டுக்கொண்டால் அது எதற்காக?

 

பா-தி:- நாதா! இது எனக்குத் தெரியாதா? திருட்டு சொத்தை இருவரும் பங்கிட்டுக் கொள்வதில் வித்தியாசம் ஏற்பட்டால் இருவரும் சண்டை போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.  முனிசிபாலிட்டிகளில் எப்படி சண்டை வரும்?

ப-சி:- அதே மாதிரிதான் முனிசிபாலிட்டியிலும் பொதுஜனங்களி டம் இருந்து வாங்கும் லஞ்சத்திலும் உத்தியோகம் கொடுப்பதற்கு ஆக வாங்கும் தரகிலும் காண்டிராக்டர்களிடமிருந்து வாங்கும் வீதாச்சாரத்திலும் இருவரும் பிரித்துக் கொள்வதில் வித்தியாசம் ஏற்பட்டால் சண்டை வரவேண்டியது தானே?

 

பா-தி:-  இதெல்லாம் சேர்மெனுக்கும் முனிசிபல் சிப்பந்திகளுக்கும் தானே சேரவேண்டியது.  வை°சேர்மெனுக்கு இதிலென்ன பாத்திய மிருக்கிறது?

ப-சி :- நீ என்ன திரேதாயுகத்து சங்கதி பேசுகிறாய்? அந்த மாதிரி இருவருக்குள்ளும் ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தால்? அல்லாமலும் அதெல்லாம் பழைய காலம்.

திரேதாயுகத்தில் சிப்பந்திகள் மாத்திரம் தான் மேற்படி ஆதாயங்களை அனுபவித்து வந்தார்கள். திரேதாயுகத்தில் சிப்பந்திகளும் சேர்மெனுமாய் சாப்பிட்டு வந்தார்கள்.

துவாபரயுகத்திலேயே சிப்பந்திகளும் சேர்மெனும் வை°சேர்மெனும் சாப்பிடவேண்டியது. இந்தக் கலியுகத்திலோ சிப்பந்தி, சேர்மென், வை°சேர் மென், கவுன்சிலர்கள் ஆக நான்குபேரும் சாப்பிடவேண்டியது. இந்தப்படி மனுதர்ம சா°திரத்தில் இருந்தபோதிலும் இன்னும் இது பூராவும்  அமுலுக்கு வரவில்லை.

 

பா-தி:-  அப்படியானால் எனது கேள்விகளுக்கு பொறுமையோடு பதில்சொல்லவேண்டும்.  முதலில் இருந்து வருகிறேன்.  முனிசிபல் சிப்பந்திகள் லஞ்சமும் தரகும் மாமூலும் வாங்க காரணம் என்ன? அது யாருடைய குற்றம்?

ப-சி:- சர்க்கார் வழக்கமும் சேர்மெனுடைய குற்றமும்தான் காரணம்.

 

பா-தி:- சேர்மெனும் வை°சேர்மெனும் லஞ்சமும் தரகும் மாமூலும் வாங்கவும் பங்கு பிரித்துக் கொள்வதில் சண்டை போட்டுக் கொள்ளவும் யார் காரணம்?

ப-சி:- அப்படிப்பட்ட சேர்மெனையும் வை°சேர்மெனையும் நியமித்த கவுன்சிலர்கள் தான்  பொறுப்பாளிகளாவார்கள்.

 

பா-தி:- இப்படிப்பட்ட சேர்மென் வை°சேர்மென்களை நியமித்த கவுன்சிலர்களின் நடவடிக்கைக்கு யார் பொறுப்பாளி?

ப-சி:- இவர்களுக்கு ஓட்டு செய்த ஓட்டர்கள்தான் பொறுப்பாளி களாவார்கள்.

 

பா-தி:- இம்மாதிரி கவுன்சிலர்களுக்கு ஓட்டு செய்த ஓட்டர்களின் நடவடிக்கைக்கு யார் பொறுப்பாளி?

ப-சி:- அனேகமாய் இந்த காரியத்திற்கு ரூபாய்கள்தான் பொறுப் பாளி என்று சொல்லவேண்டும்.

 

பா-தி:- கேவலம் ரூபாய்க்கு இவ்வளவு பெரிய யோக்கியதை ஏற்பட்டு போய்விட்டது என்கிறீர்களே, ரூபாய்கள் இப்படிச்செய்யுமானால் இதற்கு யார் பொறுப்பாளி?

ப-சி:- ரூபாய்க்கு நாட்டில் இவ்வளவு ஆதிக்கம் ஏற்பட மனிதர் களின் ஒழுக்கக் குறைவும் வயிற்றுக் கொடுமையும்தான் பொறுப்பாளி.

 

பா-தி:- ஒரு நாட்டில் இம்மாதிரி ஒழுக்கக் குறைவும், வயிற்றுக் கொடுமையும் ஏற்பட யார் பொறுப்பாளி?

ப-சி:- சர்க்கார்தான் பொறுப்பாளி.

 

பா-தி:- இம்மாதிரி சர்க்கார் ஏற்பட யார் ஜவாப்தாரி?

ப-சி:- ஜனங்களின் ஒற்றுமைக்குறைவுதான்.

 

பா-தி:- ஜனங்களின் ஒற்றுமைக்குறைவிற்கு யார் பொறுப்பாளி?

ப-சி:- அவர்களுக்குள்ளிருக்கும் ஜாதி வித்தியாசமும் உயர்வு தாழ்வு என்று சொல்லிக்கொள்வதும் மக்களை ஒன்று சேர்வதற்கில்லாமல் செய்து கொண்டு வருகிறது.

 

பா-தி:- அப்படியானால் இதற்கு என்னதான் செய்வது?

ப-சி:- செய்வதென்ன இருக்கிறது? நாட்டிற்கு நல்லகாலம் வரும் போது இவையெல்லாம் தானாக ஓடிப்போகும். அதுவரை நிர்மாண திட்டத் தை நிறைவேற்றிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

குடி அரசு – உரையாடல் – 27.09.1925

You may also like...