தேர்தல் ஸ்ரீமான் வரதராஜலு நாயுடுவின் அபிப்பிராயம்

 

°தல °தாபனங்களின் தேர்தல்கள் விஷயமாக ஸ்ரீமான் வரதராஜலு நாயுடு பொதுமக்களுக்கு மனக்குழப்பத்தை உண்டாக்கும் விதமாக தன்னுடைய கருத்து இன்னதுதான் என்பதைப் பிறர் அறிந்து கொள்ள முடியாதபடி ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு விதமாக எழுதிவருகிறார்.  இரண்டொரு விஷயத்தை மாத்திரம் இங்கு எடுத்துக்காட்டுகிறோம்.  கோயம் புத்தூர் தேர்தலின்பொழுது காங்கிர° பிரசாரகர் ஒருவர் எழுதிக் கேட்டதற்கு தேர்தல்களில் நின்ற அபேட்சகர்களை அறிந்தோ அறியாமலோ சுயராஜ்யக் கட்சிக்காரருக்காக வேலை செய்தவர்களைப் பாராட்டியும் சுயராஜ்யக் கட்சிக்காரருக்கே வெற்றி கிடைக்கவேண்டுமென்றும் ஒரு ஆசிர்வாத ஸ்ரீமுகம் அனுப்பினார்.  அதற்கடுத்தாற்போல் சுயராஜ்யக் கட்சிக்கு விரோத மாக இருந்த ஒருவர் ஸ்ரீமான் நாயுடுவுக்கு ஒரு விண்ணப்பம் செய்து கொண்டார்.  அந்த விண்ணப்பத்திற்கு மனதிரங்கி அடியிற் கண்டபடி மீண்டும் ஒரு ஸ்ரீமுகம் அனுப்பினார்.  “சுயராஜ்யக் கட்சியார் சட்டசபைக்கு உள்ளே சென்று அதை ஓடவிடாது தடுக்கவே முன்னால் கைப்பற்றுவதாகச் சொன்னார்கள்.  சட்ட சபைகளைத் தவிர °தல °தாபனங்களில் ஒற்றுழை யாமைக்கோ, முட்டுக் கட்டைக்கோ வழியில்லை.  முனிசிபாலிடிகளில் நகர ஜனங்களுக்கு எந்த எந்த விதத்தில் நன்மை செய்யலாம் என்பதை யோசித்துச் செய்வதே அங்கத்தினர் களின் வேலையாயிருக்கின்றதே யொழிய அங்கு எதிர்த்துப் போராடுவதற்கு அதிகார வர்க்கம் அங்கு இல்லை.  இதனால் °தல °தாபன தேர்தல்களில் ஒருவர் இன்ன கட்சியைச் சேர்ந்தவர் என்பதற்காக மட்டும் அவருக்கு ஓட்டுக் கொடுத்து விடக்கூடாது” என்றும் முடிவில் “அபேட்சகர்களின் உண்மையான யோக்கியதைகளை அறிந்தே ஓட்டர்கள் ஓட்டுக் கொடுக்க வேண்டும்” என்றும் எழுதியிருக்கிறார்.  மீண்டும் நான்கு நாட்களுக்குள்ளாக திருச்சியில் கூடிய கூட்டத்திற்குச் செல்லமுடியாதவராய், சாதி பேதத்தைக் கவனியாமல் காங்கிர°காரர்களையே தெரிந்தெடுக்க வேண்டுமென்று அக்கூட்டத்திலிருந்த ஜனங்களுக்கு புத்திமதி கூறி ஒரு செய்தி அனுப்பியதாக இந்துப் பத்திரிகை யிலிருந்து தெரியவருகிறது.  பின்னும் இரண்டுநாளில் இந்த விஷயத்தில் தங்களுடைய அபிப்பிராய மென்ன என்று நேரில் கேட்ட இரு கனவான்களுக்கு “°தல °தாபனங்களின் தேர்தலுக்கு நகர சபையில் வேலை செய்யத் தகுந்த யோக்கியதை உள்ள ஒரு பிராமணரும், ஒரு பிராமணரல்லாதாரும் நிற்பார்களானால் கட்சிப் போக்கு களை கவனியாமல் பிராமணரல்லாதாருக்குத் தான் ஓட்டுச் செய்ய வேண்டும்” என்றும் கூறினார்.

செப்டம்பர் 6-ந்தேதி தமிழ்நாடு பத்திரிகையில் “ஸ்ரீமான் நாயுடுவின் போர் முழக்கம்”என்கிற தலையங்கத்தின் கீழ் பாம்பன், ராமேச்வரம் முதலிய இடங்களில் செய்த பிரசங்கத்தின் சாரமாக ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பதில் “சட்டசபைக்கோ, °தல °தாபன போர்டுக்கோ தான் போகப்போவ தில்லை யென்றும், ஆனால், காரியத்திற்குக் கதர் உடுத்தி காங்கிர° பெயரைச் சொல்லித் திரியும் கசடர்கள் உங்களை ஏமாற்றும்படி நான் விடப்போவ தில்லை” என்றும், தான் எந்தக் கட்சியிலும் சேராமலிருப்பதற்கு இதுவே முதல் காரணம் என்றும் இவர் கூறியதாகக் காணப்படுகிறது.  மறுபடியும் ஸ்ரீமான் எ°. சத்தியமூர்த்தி தேர்தல் விஷயமாகத் தனது அபிப்பிராயத்தைக் கேட்டதற்கு காங்கிர°காரர்களுக்கே ஓட்டுக்கொடுக்கவேண்டுமென்று கூறியுள்ளார்.

இவ்விதமான கொள்கைகளோ, அபிப்பிராயங்களோ தேர்தல்கள் விஷயமாய்த் தமிழ்நாட்டில் நடக்கும் அக்கிரமங்களுக்கும், கொடுமை களுக்கும் எவ்வளவு தூரம் உதவியாயிருக்கின்றதென்பதை ஸ்ரீமான் நாயுடு அறிய வேண்டுமாய் வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

குடி அரசு – கட்டுரை – 13.09.1925

 

 

You may also like...