மதுபானம்

1920 – ம் ´ சென்னை ராஜதானியில் உள்ள கள்ளுக்கடைகள் 11,034  இவைகளில் விற்ற கள்ளு 11 கோடி காலன். 8 திராம் புட்டி 1 க்கு 2 அணா வீதம் 66 கோடி புட்டிக்கு கிரயம் ரூ. 8 1/2 கோடி கிரயம் ஆகிறது. இதற்கு அனுகூலமாய் செலவாகும் மாமிசம், புட்டு, தோசை, முட்டை  முதலிய உபகருவிகளுக்கு 2 கோடி ரூபாய் ஆக ரூ.101/2  கோடி.

சென்னை ராஜதானியில் உள்ள சாராயக்கடைகள் 6,352. இவைகளில் விற்ற சாராயம் 16,75,000 காலன்கள். காலன் ஒன்றுக்கு  12 ரூ. வீதம் 2 கோடியே 1 லட்சம்  ரூபாய்.  இதற்கு மாமிசம், தோசை, புட்டு முதலிய உபகருவிகள் 25 லட்சம். ஆக இரண்டும் சேர்ந்து 12 1/2 கோடி ரூபாய் செலவாகிறது.

இந்தப் பனிரண்டரைக்கோடி ரூபாய் நமது ராஜதானியில் கள், சாராயத் திற்காக 3 1/2 கோடி ஜனங்களால் சிலவு செய்யப்படுகிறது. இது  அல்லாமல்  ஏழை மக்களால் குடியின் பொருட்டு களவு – சூது – பொய் – கொலை, கொள்ளை முதலிய காரியங்களுக்கு ஆகும் செலவு எவ்வளவு? கோர்ட்டு, வக்கீல், லஞ்சம், சப்ளை, மாமூல் வகைகளில்ஆகும் செலவுகள் எவ்வளவு?

மக்கள் ஒழுக்கம், கற்பு முதலிய குணங்கள் ஒழிந்து தேசத்திலும், நாட்டிலும், குடும்பத்திலும் ஏற்படும் கலகங்கள் ஒற்றுமைக்  குறைவுகள் எவ்வளவு? இவைகளுக்கு விலைமதித்தால் எந்தக் கணக்கிலடக்கமுடியும்? இவ்வளவு கொடுமைகளையும் செய்வித்து வரும்படிக்காக நமது சர்க்கார் நமது மாகாணத்தில் இதனால் சம்பாதிக்கும் பொருள் எவ்வளவு என்று கணக்குப் பார்த்தால் கள்ளில் 2 கோடியே 31 லட்சமும், சாராயத்தில் 88 1/2 லட்சமும், ஆக 3 கோடி  ரூபாய் 19 1/2  லட்சம் ரூபாய்தான். இதல்லாமல், கஞ்சா, அபினி, சீமை சாராயம் விற்கும் கணக்குகள் இதில் சேர்க்கப்படவில்லை. இதிலிருந்து சர்க்கார் 3 கோடி  ரூபாய் சம்பாதிக்க ஜனங்கள் எவ்வளவு கஷ்டமும் நஷ்டமும் அடைய வேண்டி வருகிறது ?

இதே  மாதிரி இந்தியா முழுமைக்கும் 1923 – 1924  -ம்  வருஷத்திற்கு நமது சர்க்காருக்கு மது வியாபாரத்தில் வந்த ஆதாயம் 19,40,51,689  ரூபாய். சர்க்காருக்கு 19 1/2 கோடி வரவேண்டுமானால் பொது ஜனங்களுக்கு ³ கணக்குப்படி  கள்ளும் சாராயமும் குறைந்தது 80  கோடி ரூபாய்க்குக் குறை வில்லாமல் விற்பனை ஆகியிருக்க வேண்டும். இதற்கேற்ற மற்ற சடங்கு களின் செலவையும் சேர்த்துப் பார்த்தால் எவ்வளவு பெரிய தொகை நாட்டின் nக்ஷமத்திற்கல்லாமல் நாட்டினுடையவும், ஒழுக்கத்தினுடையவும் அழிவுக் குச் செலவாகிறது என்பது விளங்கும். சட்டசபை மெம்பர்கள் என்று சொல்லிக் கொள்வோரும், மந்திரிகள் என்று சொல்லிக்கொள்வோரும் இதற்காக என்ன செய்திருக்கிறார்கள்? கேள்வி கேட்பதும் பத்திரிகையில் எழுதிக் கொள்ளு வதுமான காரியங்களைச் செய்து பொதுஜனங்களை ஏமாற்றி சர்க்காருக்கு அனுகூலம் செய்துகொண்டு வந்திருக்கிறார்களே அல்லாமல் உண்மையில் யோக்கியமான வேலை எதுவும் செய்திருக்கிறார்களா ?

சட்டசபையிலேயே குடிக்கும் மெம்பர் சில பேர்கள்; சாராயக்கடை குத்தகையெடுத்துப் பிழைக்கும் மெம்பர்கள் சிலபேர் ; கள்ளுக்கு மரம் குத்தகை விட்டுப் பணம் சம்பாதிக்கும் மெம்பர்கள் சிலபேர்; குடியினால் ஏற்படும் கொடுமைகளினால் பிழைப்பவர்கள் சிலபேர்.  குடியை விளம்பரப் படுத்தி “நல்ல சாராயம்”, டாக்டர் சிபார்சு செய்தது, உடம்புக்கு நல்லது என்று ஜனங்களைக் குடிக்கச் சொல்லிப் பிழைக்கும் மெம்பர்கள் சிலபேர். இப் பேர்ப்பட்ட சிகாமணிகளால் பெரும்பாலும் நிரப்பப்பட்ட சட்டசபை                              ( இவைகளில் சம்பந்தப்படாத சில பேர் இருக்கலாம் ) ஜனங்களுடைய பிரதி நிதிசபையென்று இப்படிப்பட்டவர்களே பொதுஜனங்களுக்கு எடுத்துச் சொல்லி இவைகளை ஒழிப்பதாய் அங்கு போய் உட்கார்ந்து கொண்டு தங்கள் பிள்ளைக் குட்டிகளுக்கும், இனத்தாருக்கும் பிழைப்புக்கு உத்தியோகம் சம்பா திக்கப் பாடுபடுவதல்லாமல் வேறு என்ன பலனை உண்டாக்குகிறார்கள்?

சட்டசபைகள் ஏற்பட்டு மதுபானத்தை ஒழிக்க நம்மவர்கள் பிரயத் தனப்பட்டதாக சொல்லிக்  கொள்வதன் பெருமையைக்  கீழ்க்கண்ட கணக்கு களால் தெரிந்துகொள்ளலாம். ஜனப்பிரதிநிதிகள் பெரும்பாலும் உள்ள சட்டசபை இல்லாத காலத்தில் நமது சர்க்காருக்கு இந்தியாவில் மொத்தம் கள்ளு சாராயத்தால்  வரும்படி:-

அதாவது 1880 – 1881 வருஷத்தில்        3 1/2 கோடி

அதற்கு வேண்டிய இலாகாக்கள் அமைத்து ஒழுங்குபடுத்தின பிறகும்,

சட்டசபை ஏற்பட்ட பிறகும் 6  கோடி.

1910 – ல் மிண்டோ – மார்லி சீர்திருத்தத்தின் பிறகு 10 கோடி.

1918 – ம் வருஷத்தில் மாண்ட் போர்ட் சீர்திருத்தத்தின் பிறகு 18 1/2 கோடி

1924 – ம் வருஷத்தில் 19 1/2  கோடி.

இப்படியே நாளுக்குநாள் உயர்ந்துகொண்டு வருவதல்லாமல் குறைவுபடுவது எங்கே ? இதை நிருத்திவிட வேண்டுமென்று சொன்னால் நமது சட்டசபை மெம்பர்களும் மந்திரிகளும் கூட இந்த வரும்படி போனால் சர்க்கார் நடைபெறாதே என்று விசனப்படுகிறார்களே அல்லாமல், தேசமும் ஜனங்களும் கெட்டுப் போகிறதே என்கிற கவலையே இவர்களுக்கு இல்லை. தவிரவும், மது வரும்படி நின்றால் ஜனங்கள் படிக்கப் பணமில்லையே என்றும் விசனப்படுகிறார்கள். இரண்டு பிள்ளையுள்ள தகப்பனை உன் ஒரு பிள்ளை படிக்க வேண்டுமானால் ஒரு பிள்ளை கள்ளு சாராயம் குடிக்க வேண்டும்; சம்மதமா ? என்று கேட்டால்,  தகப்பன் ஒரு பிள்ளை குடித்தாலும் சரி ஒரு பிள்ளை படிக்கத்தான் வேண்டும் என்று எவனாவது சொல்லுவானா? ஒருக்காலும் சொல்ல மாட்டான். அதுபோலவே நமது மந்திரிகளும். சட்ட சபை மெம்பர்களும், ஏழை  மக்களும், தாங்களும் ஒருவருக்கொருவர் சகோதரர் என்கிற உணர்ச்சி இருக்குமானால் வெகுகாலத்திற்கு முன்பே இந்த மது வியாபாரத்தை சர்க்காரிலிருந்து ஒழித்திருப்பார்கள் அல்லது சட்ட சபையை விட்டு விலகி இருப்பார்கள். மதுவருந்துபவர் பெரும்பாலும் ஏழைகள். சட்டசபைக்குப் போகிறவர்கள் பணக்காரரும், மதுவருந்துபவர்கள் கொடுக்கும் பணத்தால் படித்தவர்களாயுமிருப்பதால் மதுபானமென்பது அவர்களுக்கு ஒரு கவலையற்ற விஷயமாயிருக்கிறது. சட்டசபைப் பயித்தி யம்  இருக்கிறவர்கள் மற்றெல்லா விவகாரங்களையும் விட்டுவிட்டு மது விலக்கு என்கின்ற ஒரு காரியத்தில் மாத்திரம் தாங்கள் எல்லாரும் ஒன்றா யிருந்து ஒரேயடியாய் இதை ஒழிப்பதுதான் தங்கள் வேலைத்திட்டம் என்கிற கொள்கையை வைத்துக் கொண்டு சர்க்காரின் அதிகச் செலவைக் குறைத்து கள்ளு வரும்படி இல்லாமலே சர்க்கார் நடக்கும்படியாக  வரவு செலவு திட்டத்தைச் சரிசெய்துகொண்டு இதை சர்க்காரை ஒப்புக்கொள்ளச் செய் வோம்;  ஒப்புக்  கொள்ளாவிட்டால் ராணுவச் சட்டம் வந்தாலும் சரி, சட்ட சபையை வேறுகாரியம் பார்க்கவிடுவதில்லையென்று பிடிவாதம் செய்வ தாக தீர்மானித்துக் கொண்டால் மதுபானம் நமதுநாட்டில் இன்னும் ஒழியாமல் இருக்குமா? ஒருக்காலும் இருக்காது என்றுதான் சொல்லுவோம்.

கள் மரம் வளர்ப்பது நாம், சாராயம் காய்ச்சுவது நாம், விற்பது நாம், குடிப்பது ஏழைகள். யார் பேரில் குற்றம் சொல்வது? மரம் வளர்த்து குத்த கைக்கு விட்டுக் கடை யெடுத்து கள் விற்று, குடிகாரன் போதையில் செய்த காரியத்திற்குக் கோர்ட்டில் ஏற்பட்ட வழக்குக்கு பீசு பெற்று வாழுபவர்கள், சட்டசபைக்குப் போனால் சர்க்கார் பேரில் குற்றம் சொல்லி ஜனங்களை ஏமாற்றுவார்களே அல்லாமல், தங்கள் குற்றங்களை ஒருக்காலும் திருத்திக் கொள்ள மாட்டார்கள். ஆகையால் யாராவது சட்டசபைக்குப் போவதற்காக ஏழை மக்களிடத்தில் வந்து ஓட்டுக் கேட்பார்களானால் அவர்களை சட்ட சபையில் நம்பிக்கை உள்ள ஓட்டர்கள் உங்களுக்கு எத்தனை தென்னை மரம்? அதில் எவ்வளவு கள்ளுக்கு அடைக்கப்பட்டிருக்கிறது? நீங்கள் எத்தனை குடிகாரர் கேசுக்கு ஆஜராகி எவ்வளவு பணம் சம்பாதித்தீர்கள்? குடி  விலக்க நீங்கள் இந்த 6 வருஷ காலமாய் சட்டசபையிலும், வெளியிலும் என்ன செய்தீர்கள்? எங்களுக்கு வேறு ஒரு நன்மையும் வேண்டாம்; குடி ஒழிந்தால் போதும்; அதற்கு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? நீங்கள் சொல்வதை சர்க்கார் கேட்காவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று இம்மாதிரியான கேழ்விகளைக் கேட்டு அதற்கு ஏற்ற உண்மை யோக்கியர் களை ஆராய்ந்துப் பார்த்து ஓட்டர்கள் தங்கள் கடமையைச் சரியாய்ச் செய்வார்களானால் மாத்திரம் சட்டசபையால் மதுபானம் ஒழிக்கலாம் என்று ஓட்டர்கள் நம்புவதற்கும், மதுபானம் ஒழியாவிட்டால் சர்க்கார் மீது குற்றம் சொல்லுவதற்கும் அர்த்தம் உண்டு.

குடி அரசு – தலையங்கம் – 16.08.1925

 

 

 

You may also like...