காவேரி அணை
ஈரோட்டிற்கு முப்பத்தேழு மைல் தூரத்தில் மேட்டூர் என்னும் கிராமத் திற்கு அருகில் ஓடும் காவேரிநதியின் இருகரைகளிலும் இரண்டு பெரிய மலைச்சரிவுகள் இருக்கின்றன. அவ்விரு சரிவுகளுக்கு இடையில் ஓடும் காவேரிநதியின் பிரவாக ஜலத்தை இச்சரிவுகளை ஆதாரமாகக்கொண்டு அணை கட்டி நிறுத்திவிட்டால், வேடைகாலத்திற்கு நீர்ப்பாசனத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாமென்று சுமார் 50, 60 வருஷ காலமாக சென்னை அரசாங்கத்தாருக்கு நிபுணர்களால் யோசனை சொல்லப்பட்டு வந்தது. அந்த யோசனையின் மேல் சுமார் 25 வருடத்திற்கு முன்பாக ஸ்ரீமான் பி.வி.மாணிக்க நாயக்கர் முதலிய இஞ்சினியர்களால் இந்த அணைக்குத் திட்டம் போடப்பட்டிருந்தும் நாளது வரையிலும் வேலைத் துவக்கப்படாமல் இப்பொழுதுதான் வேலைத் துவக்கத்திற்கு ஏற்பாடாக, சென்னை கவர்னர் அவர்களால் மேட்டூரில் சூலை 20 தேதி அஸ்திவாரக்கல் நாட்டப்பட்டது. இவ்வேலைக்கு 6 கோடி ரூபாயும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வேலை முடிய குறைந்தது பத்து வருஷம் ஆகும் என்று கருதப்படுகிறது.
இந்த அணையின் நீளம் ஆறாயிரம் அடி. நீர்தேக்கத்தின் பரப்பு சுமார் இருபது சதுரமைல். இதன் நீர்ப்பாச்சலினால் மூன்று லட்சத்து முப்பதாயிரம் ஏக்கர்களுக்கு ஒரு போகமும் 70 ஆயிரம் ஏக்கராவுக்கு இரண்டாம் போக மும் தண்ணீர் பாய்ந்து விளைவு உண்டாகும். இவ்வணையின் நீர்பாசனம் முழுதும் தஞ்சை ஜில்லாவுக்கே மிகுதியும் உபயோகப்படுமேயல்லாது கோயமுத்தூர், சேலம் ஜில்லாக்களுக்குக் கொஞ்சமும் உபயோகமில்லை. இவ்வளவு பூமியும் பட்டுக்கோட்டை தாலூக்காவில் தான் திட்டம் போடப் பட்டிருக்கிறது. இந் நீர்ப்பாசனத்திற்கு ஏக்கரா ஒன்றுக்கு 15 ரூ. வீதம் தான் தீர்வை விதிக்கப்படும்.
கோயமுத்தூர், சேலம் ஜில்லாக்களில் ³ நீர்ப்பாசன வசதி செய்வ தாயிருந்தால் செலவு அதிகமாகுமென்றும் அதனால் ஏக்கரா ஒன்றுக்கு 30 ரூ. தீர்வை விதிக்கவேண்டிவரும் என்றும் கருதி இந்த யோசனையைக் கைவிடப் பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதை புனராலோசனை செய்யும்படி கோயமுத்தூர் ஜில்லாவாசிகள் கூடி யோசித்து ஏக்கரா ஒன்றுக்கு 22 ரூ. தீர்வை கொடுக்கத் தாங்கள் சம்மதிப்பதாயும் கோயமுத்தூர் ஜில்லாவுக்கும் பாசன வசதிசெய்துகொடுக்க வேண்டுமென்றும் தீர்மானித்து அரசாங்கத்திற்கும் தெரிவித்திருக்கிறதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவிலேயே மேட்டூர் காவேரி அணையைப் பெரிய அணைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
நமது தேசத்தில் உள்ள நீர் வசதியைக் கவனித்தால் இம்மாதிரி அனேக அணைகள் கட்டி சமுத்திரத்தில் போய் வீணாக விழும் தண்ணீரைத் தேக்கிக் கோடிக்கணக்கான ஏக்கரா பூமிகளைச் சாகுபடி செய்ய எவ்வளவோ சௌக ரியமிருக்கிறது. நமது அரசாங்கத்தார் இத்தேசத்திற்குப் பிழைக்க வந்திருக் கிறவர்களானதாலும், நமது தேசத்தின் வாழ்வுகளில் லட்சியம் செலுத்த வேண்டிய அவசியமில்லாதவர்களாயிருக்கிறவர்களானதாலும் பெரிய கூட்ட மாகிய 33 கோடி ஜனங்களை வெகு சிலபேர் ஆளவேண்டி யிருக்கிறதான தினாலும் சந்துபொந்து மூலை முடுக்குகளுக்கெல்லாம் தங்கள் பீரங்கியும், துப்பாக்கியும், பட்டாளங்களும் போகத்தக்கவண்ணம் ரயில் போடுவதி லேயே கவலை செலுத்தி நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை அதர்க்கே செலவிட்டு ரயில் வசதிகளைப் பெருக்கி வந்தார்களே ஒழிய, இவ்வணை கட்டுகிற விஷயத்தில் இவர்களுக்கு இஷ்டமும் கவலையும் மிகுதியாக இருக்கவேயில்லை. அன்றி மற்றொரு காரணமும் கூறலாம். இந்நாட்டில் நீர்ப்பாசன வசதி அதிகமேற்பட்டுவிட்டால் மக்களுக்கு கூலி வசதியும் பிழைப்பு வசதியும் அதிகமாய்விடும். வெளிநாட்டில் உள்ள அன்னிய தோட்டக்காரர்களுக்கு நம் நாட்டிலிருந்து கூலியாட்கள் ஏற்றுமதியாக இடமில்லாமல் போய்விடுமே என்கிற பயமும் இருக்கலாம். நமது சட்டசபை அங்கத்தினர்களுக்கும் இது விஷயங்களில் கவனம் செலுத்தத்தக்க புத்திவரும்படியான கல்வியும் நமது தேசத்தில் இல்லை. மின்சார விசை கொண்டுவந்து விளக்குப்போடவும், யந்திரம் வண்டி கொண்டுவந்து குப்பை வாரவும், இயந்திரம் வைத்து நூல் நூற்கவும் நெசவு செய்யவும், பூமிக்குள் ரயில் போடவும் அல்லாமல், தேச நலத்திற்கோ ஏழைகள் பிழைப்பிற்கோ என்ன செய்வது என்று யோசிக்க நேரமோ புத்தியோ இல்லாமல் போகும்படி கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
பயங்கொள்ளியாகவும் எப்பொழுதும் தன்னைக் காப்பாற்றிக் கொள்வ திலேயே கருத்துள்ளதாகவும் குடிகளிடத்தில் சதாகாலமும் சந்தேகமுள்ள தாகவும் அன்பினால் அல்லாமல் துப்பாக்கி, பீரங்கி, வெடிகுண்டினால் ஆளுவதாகவும் இருக்கிற ஒரு அரசாங்கத்தினிடை இவற்றைத் தவிர நாம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்?
குடி அரசு – கட்டுரை – 26.07.1925