ஈரோடு முனிசிபல் நிர்வாகம் – பழைய கறுப்பன் 

 

நான் யார் ?

பழைய கறுப்பன் என்பவர் யார்? என்று அநேகர் என்னையே கேட்டார்கள். அவ்வப்பொழுது என் மனதில் தோன்றின பதிலை அவரவர் களுக்குச் சொன்னேன். சிலருக்கு திருப்தி, சிலருக்கு அதிருப்தி. உலகத்தில் எல்லாருக்கும் நல்லவனாய், எல்லாரையும் திருப்தி செய்ய நினைப்பது முடியாத காரியம். அவ்வித முயற்சி “கிழவனும், மகனும், கழுதையும்” என்ற கதையாய்த்தான் முடியும். ஆகையினால் அதிருப்தியினால் நான் கவலைப்படவேயில்லை. ஆனால் இந்தக் கேள்வியில் அடங்கிக் கிடக்கிற ஒரு உண்மையை எல்லாரும் அறிந்து கொள்ள வேண்டும். விஷயம் முக்கி யமா? விஷயகர்த்தா முக்கியமா? என்பதுதான். விஷயகர்த்தா முக்கியத் தினால்தான் இந்தக் கேள்வி பிறந்தது என்று  அறிந்தேன். விஷயகர்த்தாவைக் குறித்துதான்  விஷயம் நல்லது கெட்டது என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டுமென்று நமது ஜனங்கள் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய மனப் பான்மைதான் நம்மையும் நமது நாட்டையும் தற்கால கதிக்குக் கொண்டுவந்து விட்டது. நான் யாராயிருந்தாலென்ன? சொன்னதெல்லாம் சரியென்று தோன் றினால் அந்தக் குறை நிவர்த்திக்கப் பாடுபடுங்கள்.  இல்லையேல் இன்னமும் பாடுபட்டுக் கொண்டிருங்கள். சரியில்லையென்று தோன்றினால், ஏதோ பைத் தியக்காரன் உளறுகிறான் என்று தள்ளி விடுங்கள். என்னுடைய வீரப்பிரதாப வியாக்கியானம் போதும். நிற்க,

முனிசிபல்  கட்சிகள்

தற்கால முனிசிபல்  நிர்வாகிகளுக்கு விரோதக் கட்சியில் நானிருப் பதால் அவ்விதம் எழுதினதாகச் சிலருடைய எண்ணம். முனிசிபல் வேலை யில் எனக்குக் கட்சியில்லை. என் வார்த்தையை நம்பாவிட்டால் நான் என்ன செய்ய முடியும்? உங்கள் இஷ்டம். முனிசிபல் நிர்வாகத்தில் கட்சி பேதத் திற்கே இடமில்லை. முனிசிபல் வேலை ராஜீய வேலையல்ல. ராஜீயக் கட்சிக் கும் முனிசிபல் வேலைக்கும் வெகுதூரம். காந்தி சொல்லுகிற மாதிரி ஏதாவது ஒரு ராஜீயக் கட்சியின் பலத்தைத் தெரிந்து கொள்ள முனிசிபல் எலக்ஷன்கள் சாதகமாக இருக்குமே ஒழிய வேறு பிரயோஜனம் ஒன்றுமில்லை. ஈரோடு முனிசிபலில் ராஜீயக் கட்சிக்காரர்கள் இருக்கிறார்களா என்றால் அதுவு மில்லை. ஆனால், இருக்கிறதாகச் சொல்லிக்கொள்ளலாம். அதெல்லாம் வேஷம்தான். நமது முனிசிபாலிட்டியில் எத்தனை  கவுன்சிலர்கள் இருக் கிறார்களோ அத்தனை அல்லது ஒன்றிரண்டு குறைந்த கட்சிகள் இருக்கின் றன என்பது என் எண்ணம். எல்லாம் சுயநலக் கட்சியே. எப்படியாவது  தங்கள்  தங்கள் சொந்த இஷ்டங்களைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமென்ற கட்சியின் மேல் நமது முனிசிபல் நிர்வாகம் நடைபெறுகிறது. இத்தனைக் கட்சியில் நான் எந்தக் கட்சியைச் சேர்வது? உள்ளுக்கு இருந்தால் நானும் ஒரு  சுயநலக்கட்சி °தாபிதம் செய்து கொள்வேன். அந்தப் பாக்கியம் இல்லை. முனிசிபாலிட்டியில் தற்காலம் நடக்கும் அரசாங்கத்தை முன்னிட்டு இரண்டே கட்சிகள்தான் இருக்க முடியும். ஒன்று அரசாங்கக்கட்சி, மற்றொன்று ஜனங்கள் கட்சி. இதைத்தவிர வேறு கட்சிகள் இருக்க வழியே கிடையாது. ஆனாலோ, மேலே சொன்னமாதிரி நமது முனிசிபாலிட்டியிலோ ஒவ்வொரு வரும் தனிக்கட்சி, இதுவும் ஒரு காட்சி தான். ஈரோடு ஜனங்கள் இந்தக் காட்சியைக் கண்டு களிக்கும்படியாகக்  கேட்டுக் கொள்ளுகிறேன்.

சென்னை கவர்னர் நீடூழி வாழ்க

சென்னை கவர்னர் நீடூழி வாழ ஈரோட்டார் ஒவ்வொரு கோயிலிலும் அர்ச்சனைகளும், பூஜைகளும் செய்யும்படியாகக் கேட்டுக் கொள்ளுகிறேன். அந்தப் புண்ணியவானால் அல்லவா  லார்டு நேப்பியர் வீதி நடக்கிறதற்கு யோக்கியமாயிற்று? ஈரோடு ஜனங்களின் எலும்பு  தோல் போர்த்த பாதங்க ளுக்குப் பரிதாபப்படாமல் போனாலும் கூட சென்னை கவர்னருடைய மோட்டார் வண்டி சக்கரத்தின் ரப்பர் தேய்ந்து வருத்தப்படுமேயென்று தங்கள் கண்ணில்பட்டதுபோல  எண்ணி முனிசிபாலிட்டியார் இந்த உபகாரம் செய்ததற்கு என்னுடைய மனப்பூர்வமான வந்தனம்.

கவர்னருக்கு ஒரு வேண்டுகோள்

கவர்னருக்கு ஒரு வேண்டுகோள் செய்துகொள்ள விரும்புகிறேன். ஈரோட்டாரும் என்னோடு “கோவிந்தா” போடுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு. கூடிய சீக்கிரத்தில் ஈரோடு வீதிகளில் சென்னை கவர்னர் மோட்டார் களில் ஒரு தெருவுகூட விடாமலும் ஊர்கோலம் வரும்படியாகத் தம்முடைய அலுவல் திட்டத்தைப் ( ஞசடிபசயஅஅந ) போட்டுக்கொள்ள வேண்டுமென்பதே  எனது வேண்டுகோள். அவ்விதம் அவர் வருவாரானால் வீடு தவறாமல் பூர்ணகும்பம், ஆலாத்தி முதலியவைகள் எடுப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்ய என் முழுமனதுடன் “நாய்போல்” உழைக்கிறேன்.  கேட்டால்  கேளுங்கள்.

முனிசிபல்  கவுன்சிலர்களுக்கு  ஒரு வேண்டுகோள்

என்னுடைய, நான் நம்புகிறபடி ஈரோட்டு ஜனங்களுடைய வேண்டு கோளின்படி சென்னை கவர்னரை ஈரோட்டுக்கு அழைத்து வரத் தங்களால் ஆன முயற்சி செய்யும்படி வேண்டுகிறேன். அவ்விதம் செய்வார்களாகில் அவர்களுக்கும் கவர்னருக்குச் செய்யும் மரியாதைகளை வேறொரு நாளில் செய்ய வஞ்சகமில்லாமல் பாடுபடுகிறேன். இப்பொழுது 100 ரூபாய் செலவ ழித்தார்கள் என்று கேள்வி. அப்பொழுது அந்த தொகைக்கு முன்னால் இன் னொரு பூஜ்ஜியம் சேர்த்துக்கொள்ள மனப்பூர்வமாய் ஆதரவளிக்கிறேன்.

ரோட்  போட்ட செலவு என்ன ?

கவர்னர் மோட்டார்கள் போக ரிப்பேர் செய்த ரோட்டிற்கு என்ன செலவு ஆயிற்று என்பதை அறிய ரொம்ப ஆவல். என் ஆசை நிராசை என்பது தெரியும்.  ஆவலை அடக்க முடியாமல் வெளியிட்டேன். அவ்வளவு தானே நான் செய்யமுடியும். இதற்கு முன்னால் அந்த ரோட்டிற்கு  ஆன  ரிப் பேர் செலவுகளையும் இப்பொழுதான செலவையும் பார்த்து உண்மையை வெளியிடுவார்களா? என்று கேட்கிறேன். ஆனால் இன்னொரு சங்கதி, மேட்டூர் அணைப் பணத்திலிருந்து இந்த ரோட் ரிப்பேர் செய்தார்கள் என்று ஒருவர் சொல்லுகிறார். எது உண்மை என்று எனக்குத் தெரியவில்லை.  எல்லாம் அறிந்தவர்கள் மௌனவிரதம் சாதிக்கிறார்கள். ஈரோடு ஜனங்கள் வாயில்லாப் பூச்சிகள் மாதிரி இருக்கிறார்கள். யாரை நோவது என்று தெரிய வில்லை. என்னைப் பொறுத்த மட்டிலும் ‘கல்லைக் குத்தி கை நோவது’ என்று சொல்வது  வெட்கமாக இருக்கிறது. எலக்ஷன் காலத்தில்  ராப்பகலாக  ஓடி ஆடித் திரிந்து ஆசை வார்த்தைகளைக் காட்டி ஏமாற்றினவர்களைப் பிரதி நிதிகளாக அனுப்பிவிட்டு நமது வார்த்தைகளுக்குக் காது கொடுத்துக் கேட்க மாட்டேன் என்கிறார்களே என்று ஜனங்கள் முணு முணுக்கிறதில் பிரயோஜன மென்ன? இனி மேலாவது புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்களா என்றுதான் ஈரோடு ஜனங்களை நான் இப்போது கேட்கிறேன்.

வரவேற்புக்கு  100  ரூபாய்

நமது முனிஸிபல் கவுன்ஸிலர்களின் ராஜாபிமானத்தை எந்த அளவு கோல் கொண்டு அளப்பதென்று தெரியவில்லை. இவ்வளவு ராஜாபிமானத் திற்கு, அவசியம் சன்மானங்கள் பெறவேண்டியவர்களே. ஆனால் பாவம்.  இன்னும் 5, 6 மாதங்கள் காத்திருக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய வருத்தம். நமது ராஜாவின் பிறந்த தினம் போய்விட்டது. அப்பொழுதே பட்டங்களும் செலவாய் விட்டன. இந்தப் பாழுங்  கவர்னர்  இராஜா பிறந்த தினத்திற்கு முன்னாலேயே வந்திருக்கக்கூடாதா? சிந்தின பாலுக்கு அழுது என்ன செய்வது? புதுவருஷப் பிறப்பை நான் எண்ணிக் கொண்டிருக்க வேண்டியதைத்தவிர வேறு வழியில்லை. விதி யாரை விட்டது?

கவர்னர் வரவேற்பு அலங்காரத்திற்கு 100 ரூ. நமது கவுன்சிலர்கள் சாங்ஷன் செய்தார்களாம். இந்தத் தொகையை ஜில்லா கலெக்டர் அநுமதித்து இருப்பர் என்பதில் சந்தேகமில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் நமது முனிசிபா லிட்டியார் காந்தியடிகளுக்கு வரவேற்பு செய்தது எனக்கு ஞாபகத்திற்கு வரு கின்றது. அப்பொழுது ரூ.50 போல் செலவழிக்க கவுன்சிலர்கள் தீர்மானித்தார்கள். சரியான தொகை நினைவில்லை. அப்போதைய கலெக்டர் கண்ணுக்கு காந்தி கவர்னராகத் தோன்றவில்லை. ஆனபடியால் “இவ்வளவு ரூபாய் வேண்டாம். இதை அநுமதிக்க மாட்டேன், முனிசிபாலிட்டியில் காகிதம் இருக்கிறது, பேனா இருக்கிறது, மை இருக்கிறது,  சைக்கிளோ °டைல் எந்திரம் இருக்கிறது. அவைகளைக் கொண்டு வரவேற்புப் பத்திரம் தயாரித்துக் கொடுங்கள்” என்று உத்தரவிட்டாராம் – இந்த அவமானம் இன்னும் நீங்கவில்லை.  அதற்குள் கவர்னருக்காக ரூ. 100 செலவழித்து நல்ல பிள்ளைகளாக நமது கவுன்சிலர்கள் முன்வந்துவிட்டார்கள். ஆனால் அப் பொழுது இருந்த கவுன்சிலர்கள் வேறு  இப்போது இருப்பவர்கள் வேறு என்று சொல்லலாம். வா°தவம்;  ஆனால் முழுவதும் வா°தவம் அல்ல;  பழைய புலிகளில் சிலர் இப்போதும் இருக்கிறார்கள் – தம்பிக்கு வந்த அவமானம் தமயனுக்கு இல்லையா?  என்று கேட்கிறேன். அதுதான் போகட்டும். முனி சிபல் கவுன்சிலுக்கு அவமானம் என்றால் ஈரோட்டு ஜனங்களுக்கு அவ மானம் என்றுதானே அர்த்தம் – அப்போதுள்ள ஜனங்கள்தானே இப்போதும் இருக்கிறார்கள். பழைய ஈரோட்டார் புது உயிரும், புது உருவமும் பெற்று விட்டார்களோ  என்னவோ எனக்குத் தெரியாது.

நமக்கும் ஒரு காரியதரிசி

இனியும் நமது கவுன்சிலர்கள் முனிசிபல் நிர்வாகத்தில் கவலை கொள்ளவில்லை என்று யார் சொல்ல முடியும்? நமது முனிசிபாலிடியில் எப்படியோ திடீரென்று வேலை அதிகமாகப் போய்விட்டது என்று கண்டு கொண்டார்கள் – உடனே தலைவர் – உபதலைவர்களுக்கு உதவியாக ஒரு காரியதரிசி கொடுத்திருக்கிறார்கள். என்னமோ உளறுகிறேன். ஏன் வேலை யில்லை? சிங்கார நந்தவனம் – நீந்து கட்டம் ( ளுறiஅஅiபே ழுhயவ)  இவைகள் எல்லாம் ஏற்படப் போகின்றன. மின்சார விளக்கும் வந்து விடும். நெருப்ப ணைக்கும் கருவியும் வந்துவிட்டது. ஈரோட்டிற்கு அக்கினி பகவான் பிரவேசம் செய்ய நமது கவுன்சிலர்கள் விண்ணப்பம் போட்டு விட்டார்களோ என்னமோ இன்னமும் தெரியவில்லை. அது கிடக்கிறது. இவ்வளவு புதிய வேலைகள் உண்டாகும்போது உதவிக்கு இன்னொருவர் வேண்டாமா? வேண்டும்! வேண்டும்! ஊரார் பணம்தானே? பதவிக்கு சண்டை போட்ட வர்கள் வேலை செய்ய உதவி ஆள் தேடுகிறார்கள். ஆனால் காரியதரிசியை நினைக்கும்  போதெல்லாம் தாங்கமுடியாத வருத்தம் எனக்குண்டாகிறது. நமது முனிசிபல் ஆட்சியோ இரட்டை ஆட்சி; இதில் எந்தப் பகுதி ஆட்சிக்கு அடங்கினவர் அவர் என்பதுதான் எனது பிரச்சனை. இரண்டு ஆட்சிக்கும் ஆளாக இருக்க முடியுமா என்று சந்தேகம் – பாவம் – காரியதரிசியின் பாடு தான் பரிதாபம் –  ஒருவள் இரண்டு புருஷர்களைக் கல்யாணம் செய்து கொண்ட மாதிரிதான்.  ஒருவனுக்கு இரண்டு பொண்டாட்டிகள் இருந்தால் கூடுமான வரையில் சண்டை அடுப்பங் கரையில்தான்.  ஒருவளுக்கு இரண்டு புருஷர்கள் இருந்தால் நடுவீதியில் தான் மல்யுத்தம். “ஊருக்கு ஒரு தேவடியாள் யாருக்கென்று ஆடுவாள்” என்ற பழமொழியும் உண்டு. இந்தச் சங்கடத்தில் இருந்து நீங்கிக் கொள்ள ஒரு வழியுண்டு. அந்தக் காரியம் கவுன்சிலர்களால்தான்  ஆகவேண்டும். வேலை மிகுதியாய் விட்டது என்று நிச்சயம் வந்து விட்டது. ஏன் இன்னொரு உப காரியதரிசியையும் நியமிக்கக் கூடாது? கவுன்சிலர்கள் பெரிய மனது செய்தால் முடியாத காரியமுண்டோ? தலைவர் –  உபதலைவர் சண்டையும் ஒழியும்! காரியதரிசிகள் பாடும் நிவர்த்தி யாகும். இந்த யோசனையைக் கவுன்சிலர்கள் ஏற்பார்களா என்பதுதான் எனக்குச் சந்தேகம் – ஏன் ? அவர்களைத்தான் கேட்க வேண்டும்.

நன்றி மறவாமை

நமது கவுன்சில் ஹாலில் சில கனவான்களைத் தொங்க விடுவதாக நமது கவுன்சிலர்கள் தீர்மானித்திருக்கிறார்களாம் – இதேது இவன் நிறுத்த மாட்டான் போலிருக்கிறதே  என்று வாசகர்கள் சலிப்புக் கொள்ளுகிறார்கள். நிறுத்தி விட்டேன்.  பாக்கி பின்னால்; அதுவும்  வாசகர்கள் விரும்பினால்தான்.

குறிப்பு :-

கவுன்சிலர்களிடமும், வாசகர்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டிய வனாக இருக்கிறேன். காரணத்தோடுதான். சென்ற வியாசத்தில் ‘கள்ளி வனம்’ எடுக்க ரூபாய் 500 செலவு செய்வதாகக் கேள்விப்படுகிறேன் என்று எழுதினேன். அப்பொழுதும் நிச்சயமாக ஒன்றும் சொல்லவில்லை. உண்மை தெரியாததினால் தான்.  ஆனால் அந்த உண்மையை நான் கேட்டுக் கொண்டபடி எவரும் எனக்குத் தெரிவிக்கவில்லை. அப்புறம் உண்மையை அறிய நானே இதைப் பற்றித் தெரிய வேண்டியவரான ஒரு நண்பரைக் கேட்டேன். அவர் ரூ. 235 தான் செலவு என்றார். சரி என்றேன். இப்பொழுது என் மன்னிப்பை சமர்ப்பணம் செய்கிறேன்.

குடி அரசு – கட்டுரை – 26.07.1925

 

 

 

 

You may also like...