தேர்தல்களின் யோக்கியதையும் புதுச்சட்டத்தின் பலனும்
தேர்தல் சம்பந்தமான ஆட்சேபனை விண்ணப்பங்கள் கொஞ்சகாலத் திற்கு முன் நிர்வாக அதிகாரிகளாகிய கலெக்டர், அரசாங்க முனிசிபல் நிர்வாக அங்கத்தினர் இவர்களுக்குள்ளாகவே முடிவு பெறக்கூடிய தாகவிருந்தது. ஆனால் இப்படி நடப்பதில் தாட்சண்யங்களும், விருப்பு வெறுப்புகளும், சப்ளைகளும் சில்லரை அதிகாரிகளை விலைக்கு வாங்கப் படக்கூடியது களும் நியாயத்தைக் கெடுத்துவிடுகின்றனவென்கிற அனுபோகங்கள் ஏற்பட்டு, இந்த அதிகாரங்களை நிர்வாக அதிகாரிகளிடமிருந்து பிடுங்கி நீதிபதிகளுக்குக் கொடுக்கவேண்டுமென்று பொதுஜனங்களில் சிலர் வாதாடி னார்கள். அவைகளில் ஒன்றுதான் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் தன் முனிசிபல் சேர்மன் பதவியையும், ஜில்லாபோர்டு, தாலூகா போர்டு முதலியவைகளில் வகித்துவந்த பதவிகளையும் ராஜீனாமாச் செய்தது. முனிசிபல் புதுச் சட்டம் இயற்றும்போது இவற்றைக் கவனித்து. தேர்தல் சம்பந்தமான ஆnக்ஷபனைகள் இனிமேல் நீதிபதிகளிடம்தான் தெரிவிக்க வேண்டுமென்று சட்டமும் செய்தார்கள். இந்த சட்டம் செய்யப்பட்ட பிறகு விலங்கைத் தறித்துக் குட்டையில் போட்டதுபோல் ஆகிவிட்டது. நீதி ஸ்தலத்திற்குப் போகிற விஷயத்தில் நிர்வாகஸ்தர்களிடம் அனுபவிக்கிற கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து போய்விட்ட தென்று சொல்வதற்கு இல்லாமல் இருப்பதோடு புதுக்கஷ்டங்கள் அநேகம் ஏற்பட்டுவிட்டன. அதாவது வக்கீல் களை வைத்து வக்கீல்களுக்குப் பணம் கொடுப்பது ஒன்று, சாட்சிகளை அழைத்துக்கொண்டு ஜில்லா கோர்ட்டுக்குப் போவது மற்றொன்று, ஜில்லாக் கோர்ட்டு தீர்ப்பிற்கு மேல் ஐகோர்ட்டுக்குப் போவது வேறொன்று, அதற்கு வக்கீல்களுக்கும், சிப்பந்திகளுக்கும் பணம் கொடுப்பது இன்னொன்று; இவைகளை அல்லாமல் நியாயத்தை விலைக்கு வாங்க அவஸ்தைப்படுவதும், அதற்காகப் பணம் செலவு செய்வதும் இவ்வ ளவும் செய்து முடிவு தெரி வதற்குள், தேர்தல் காலம் இரண்டு வருடமோ, மூன்று வருடமோ கடந்து எப்படித் தீர்ப்பானாலும் பிரயோஜனப்படாமல் போகிற பெரிய அக்கிரமம் ஒன்று. புதுச்சட்டம் ஏற்பட்ட பிறகு கோர்ட்டுக்குப் போகாத முனிசிபா லிட்டியோ, தாலூகாபோர்டோ இருப்பது நிரம்பவும் அபூர்வம் என்று சொல்லத்தக்க நிலைமையில் வந்துவிட்டது. மனச்சாட்சி உள்ளவர்களும், யோக்கியப்பொறுப்பு உள்ளவர்களும் தேர்தல்களுக்கு நிற்கப் பயப் படத்தகுந்த மாதிரிக்குச் சட்டங்கள் இடங்கொடுத்துக்கொண்டு வருகின்றன. நியாயமான முறையில் ஓட்டர்களின் அபிப்பிராயத்தைப் பெற அநேக சமயங்களில் சாத்தியமில்லாமலேயே போய்விடுகிறது. சிற்சில தேர்தல்களின் கதையைக் கேட்டால் உடல் நடுங்குகிறது. ஒரு முனிசிபாலிட்டி, தாலூகா போர்டு எலக்ஷன்களுக்குப் பத்தாயிரம், பனிரண்டாயிரம், சில தருணங்களில் இருபதினாயிரமும் செலவாகிவிடுகின்றது. தேர்தல் ஆட்சேபனை மனுக் களுக்கு அதிகாரிகளுக்கும், வக்கீல்களுக்குமாகவென்று ஐயாயிரம், பத்தாயிரம் செலவாகின்றது. இதுதான் இப்படி ஆகிவிட்டது என்று முடிவு செய்துவிட்டு, சட்டசபை போன்றவைகளின் தேர்தல்களைப் பார்த்தாலோ ‘விரல் உரல் ஆனால் உரல் என்ன ஆகும்’ என்கிற கதையில் இருக்கிறது. சட்டசபைத் தேர்தலின் பொழுது ஒரு நகரத்தில் ஒரு தேர்தலுக்கு எழுபதினாயிரம் ரூபாய்வரை செலவாயிற்று என்றும் மற்றோரிடத்தில் ஒரு தேர்தலுக்கு முப்பதினாயிரம் ரூபாய் செலவாயிற்று என்பதும், வெளிப் படையான இரகசியங்களாய் விளங்குகின்றன. இவற்றை நிவர்த்திக்க எந்தச் சட்டத்தினாலும் முடிவதில்லை. பணம் இருந்தால் எந்தப் பதவியும், எந்தப் பட்டமும், எந்த உத்தியோகமும் யாரும் விலைக்கு வாங்கிவிடலாம் என்கிற முறையில் நமது சர்க்கார் இடங் கொடுத்துக் கொண்டு வருவது முழுவதும் உண்மைக்கு விரோதமானது என்று சொல்ல முடியாது. ஆகையால் மக்களுக்குள் ஒழுக்கமும் கண்ணியமும் கற்பிக்கப்பட்டால் அல்லது, எவ்வித சட்டங்களாலும் இவ்விதக் குற்றங்களை நீக்கமுடியாது. கூடிய சீக்கிரத்தில் சட்டசபைத் தேர்தல்கள் வரப்போகின்றன. ஓட்டர்களும், ஏஜண்டுகளும் அதை ஒரு வெள்ளாமைக் காலமாக நினைத்துக் கொண்டிருந்தாலும், காங்கிரஸில் ஈடுபட்ட தொண்டர்களென்று சொல்லிக் கொள்ளும் சிலர் கைமுதல் இல்லாது வெள்ளாமை வரப்போகிறது என்று காத்துக் கொண்டிருக் கிறார்கள். இந்த நிலைமையில் தேர்தல்கள் ஜனப்பிரதிநிதித்துவம் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எல்லோரும் ஜனப்பிரதிநிதிகள் என்று நாம் எப்படிச் சொல்லிக் கொள்ளமுடியும்? இதனால்தான் சர்க்காரை ஒழுங்கு படுத்துவதைவிட ஜனங்களை ஒழுங்குபடுத்தவேண்டுவது மிகவும் அவசர மென நினைத்து ஒத்துழையாமையோடு நிர்மாணத் திட்டத்தை இந்திய மக்களுக்கு மகாத்மா வற்புறுத்தி வந்தார். முன்சொன்ன தத்துவத்தில் வாழு கின்றவர்களுக்கு இது பிடிக்காமல் ஒத்துழையாமையை உடைத்தெறிந்து விட்டார்கள். நிர்மாணத் திட்டத்தையும் அழிக்கப்பார்க்கிறார்கள். பொது ஜனங்கள் இதை அறிந்து நிர்மாணத் திட்டத்தை ஈடேற்றி வைத்து தேசத்தை ஒழுக்கமுடையதாகவும், கண்ணியமுடையதாகவும், சுயமரியாதை உடைய தாகவும் ஆக்கி, பிறகு தேர்தல்களில் கவலை செலுத்த விரும்புகிறோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 19.07.1925