தமிழர் கதி
வைக்கம் சத்தியாக்கிரகமும் சேரன்மாதேவி குருகுலப் போராட்ட மும் தமிழ் மக்களுக்கு தங்கள் நாட்டில் தங்களுக்கு ஏதாவது சுயமரியாதை உண்டா என்பதைப் பற்றியும் இந்து மதத்தில் தங்களுக்கு ஏதாவது இடமுண்டா என்பதைப் பற்றியும் தீர்ப்பளிக்கப் போகின்றது. இது தமிழர்க்கோர் பரீட்சை காலமாகும். வைக்கம் சத்தியாக்கிரகமோ தமிழரைப் பார்த்து நான்கு வீதியில் மூன்று வீதிகளை உங்களுக்குத் திறந்து விட்டாய்விட்டதே ஓர் வீதியில்தானா உங்களுக்குப் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிட்டது? இதற்காக இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் செய்கிறீர்களே இதென்ன பயித்தியமா என்று கேட்கிறது. குருகுலப் போராட்டமோ பதினெட்டுப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் பதினேழு பிள்ளைகள் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டு ஓர் பிள்ளை மாத்திரம் தான் சாப்பிடுவதை மற்றவர்கள் பார்க்கக் கூடாதென்றால் என்ன குடி முழுகிப் போய் விட்டது? இதற்காகவா இவ்வளவு பெரிய கிளர்ச்சி தமிழ்நாட்டில் நடக்க வேண்டும் என்று சொல்லிக் கொள்வதல்லாமல், உட்சண்டைகளையும் கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறது. வைக்கம் சத்தியாக்கிரகமும் குருகுலப் போராட்டமும் அந்த வீதிகளில் நடப்பதினாலும், ஒரு குழந்தை உண்பதைப் பார்ப்பதினாலும் தமிழர்களுக்கு மோட்சம் கிடைத்துவிடும் என்கிற எண்ணத்தைக் கொண்டதல்ல. வீதிகளில் நடக்கக்கூடாதென்று சொல்லும் பொழுதும், கண்ணால் பார்க்கக் கூடாதென்று சொல்லுகிற பொழுதும், சொல்கிறவர்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டு எந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு சொல்லுகின்றனர் என்பதைப் பற்றித்தான் யோசிக்க வேண்டும். அன்னிய மத°தர்களான மகம்மதியர்கள், கிரு°தவர்கள், பார்சிகள் முதலியோர்கள் நடக்கலாம். பன்றி யும், நாயும், பூனையும், எலியும் வீதியில் நடக்கலாம்; சாப்பிடும் பொழுதோ இதர சமயங்களிலோ பார்க்கலாம்; ஆயிரக்கணக்கான வருஷங்களாக தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்து, தமிழ் நாட்டைத் தன்னுடைய தாக்கிக் கொண்டிருக்கும் இந்துவாகிய தமிழனை அவனுடைய நாட்டில் மற்றொருவன் “நீ வீதியில் நடக்காதே, என் முன் வராதே” என்று சொன்னால் மனித உடல் தரித்திருக்கும் ஒரு ஜீவன் அதை எப்படி சகித்துக் கொண்டி ருக்கிறது என்பதுதான் வைக்கம் சத்தியாக்கிரகத் தினுடையவும் குருகுலப் போராட்டத்தினுடையவும் தத்துவம். இதே தத்துவத் திற்காகத்தான் மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் செய்த சத்தியாக் கிரகமும், கெனிய ஏகாதிபத்திய பகிஷ்கார தினக் கொண்டாட்டமும் நடத்தப் பட்டனவென்பதை ஞாபகப்படுத்திப் பாருங்கள்.
குடி அரசு – கட்டுரை – 05.07.1925