அடுத்த மந்திரி சபை நிலை
“பந்தியில் உட்காரவே அனுமதி இல்லாமல் இருக்கும்போது இலை ஓட்டையாய் இருப்பதைப்பற்றி சொல்லுவதில் பயன் என்ன?” என்று ஒரு பழமொழி உண்டு. அதன் பொருள் என்னவென்றால் ஒரு மனிதன் ஒரு சாப்பாட்டு பந்தியில் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு தகுதி உடையவனல்ல என்று கருதி வெளியில் தள்ளப்படும்போது இலை ஓட்டையாய் இருக்கிறது என்று ஆவலாதி சொல்வதில் ஏதாவது புத்திசாலித்தனம் இருக்க முடியுமா என்பதே யாகும்.
அதுபோலவே நமது காங்கிரஸ்காரர்கள் இன்று மந்திரி பதவி ஏற்க வேண்டும் என்று ஒரு கூட்டமும், ஏற்கக்கூடாது என்று ஒரு கூட்டமும், ஏற்றால் ஒரு முட்டுக்கட்டை போடவேண்டும் என்று ஒரு கூட்டமும், ஏற்றால் சீர்திருத்தத்தை உடைக்கவேண்டும் என்று ஒரு கூட்டமும், உடைக்க முடியாது என்று ஒரு கூட்டமும், மரியாதையாய் ஏற்று உத்தியோகங்களையும் பதவிகளையும் ஒப்புக்கொண்டு தங்களால் கூடியதை ஜன சமூகத்துக்குச் செய்யவேண்டும் என்று ஒரு கூட்டமும் ஆக இப்படியாக பலவித அபிப்பிராயங்களைச் சொல்லி சண்டை போட்டுக்கொண்டும் மகாநாடுகளில் தீர்மானங்கள் கொண்டுவந்து வாதப் பிரதிவாதம் செய்து நிறைவேற்றிக் கொண்டும் இருக்கிறார்கள்.
இது முன் சொன்ன பழமொழிபோல் தான் இருக்கிறது. எப்படி யெனில் காங்கிரசுக்காரர்கள் மெஜாரிட்டியாய் சட்டசபை ஸ்தானங்களை கைப்பற்றுவார்களா? கைப்பற்ற முடியுமா? என்பது ஒரு புறமும், கைப்பற்றினாலும் மந்திரி பதவி கிடைக்கும்படியான அளவுக்கு இவர்களுக்கு பலம் ஏற்படுமா என்பது ஒரு புறமும், அதுவும் சீர்திருத்தத்தை உடைக்கும் மனப்பான்மை உள்ளவர்கள் காங்கிரசில் மெஜாரிட்டியாய் இருப்பார்களா என்பது ஒரு புறமும் சந்தேகமாகவும் சில விஷயங்களில் முடியாது என்பது சந்தேகமறவும் இருக்கும்போது இப்போது மந்திரி பதவியை ஆசை காட்டி தாங்கள் அதிகாரம் வகிக்கப்போவதைச் சொல்லி மக்களை மயக்க வீண் மெனக்கெட்ட வேலை செய்வது புத்திசாலித்தனமான காரியமாகுமா என்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
இன்றுள்ள நிலையில் எந்தக் காரணம் கொண்டும் காங்கிரஸ்காரர்கள் மந்திரிசபை அமைக்கும்படியான மெஜாரிட்டி எண்ணிக்கையுடன் சட்டசபைக்கு வரமாட்டார்கள் என்பது அனேகமாய் உறுதி என்றே சொல்லி விடலாம். எப்படி யெனில் சட்டசபை அமைப்பு அப்படிப்பட்டது. சட்ட சபைக்கு மொத்தம் 215 மெம்பர்கள் என்றாலும் அவர்களில் 116 பேர்கள் தவிர மற்ற 99 மெம்பர்கள் தனித்தொகுதிக்காரர்களே யாவார்கள். அதாவது:
தாழ்த்தப்பட்டவர்களில் 30, முஸ்லீம்களில் ஒரு பெண் உள்பட 29, கிறிஸ்தவர்களில் ஒரு பெண் உள்பட 9, இந்தியப் பெண்கள் 6, ஐரோப்பியர்கள், ஆங்கிலோ இந்திய தோட்டக்காரர், ஐரோப்பிய வியாபாரிகள் 9, ஜமீன்தார்கள் 6, தொழிலாளிகள் 6, இந்திய வியாபாரிகள் நகரத்தார் உள்பட 2, மலைவாசி 1, கலாசாலை தொகுதிக்கு 1 ஆக 99 ஸ்தானங்கள். இந்த 99 ஸ்தானங்களில் ஒரு 10 அல்லது 15 கூட காங்கிரசுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்பதோடு கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள், ஆதி திராவிடர்கள் ஆகியவர்கள் சங்கங்கள் காங்கிரசின் பேரால் நிற்கக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன.
அப்படியே பத்தோ பதினைந்தோ பெறுவதாய் இருந்தாலும் இவற்றுள் கண்டிப்பாய் 80 ஸ்தானங்கள் காங்கிரசுக்கு கிடையாது என்று இப்போதே சொல்லி விடலாம். 215க்கு 108 ஸ்தானங்கள் பெற்றால் தான் மொத்தத்தில் காங்கிரஸ்காரர்கள் மெஜாரிட்டியாக வந்ததாக கருதப்படுமே யல்லாமல் மற்ற தனித்தனிக் கக்ஷிகளைவிட 1, 2 அதிகமாய் தாங்கள் பெற்றுவிடுவதால் காங்கிரஸ் மெஜாரிட்டி என்று ஆகிவிடாது. ஏனெனில் மொத்த 215 ஸ்தானங்களில் காங்கிரஸ்காரர்கள் எத்தனைபேர், காங்கிரஸ் அல்லாதவர்கள் எத்தனைபேர் என்று தான் கணக்குப் பார்ப்பார்களே ஒழிய எந்தக்கட்சி அதிகம் என்று பார்க்க மாட்டார்கள். அப்போது 108 பேர்கள் காங்கிரஸ்காரர்கள் இருக்கவேண்டும். ஆதலால் தனித்தொகுதிகளில் காங்கிரசில் சேராதவர்கள் எண்ணிக்கை 80 போய்விட்டால் பாக்கி இருக்கும் 135 ஸ்தானங்களில் காங்கிரஸ் 108ஸ்தானங்கள் கைப்பற்றி ஆகவேண்டும். அதாவது 5ல் 4 பாகம் கைப்பற்றியாக வேண்டும். இது சுலபத்தில் முடியக் கூடிய காரியமல்ல. இப்போதே காங்கிரசுக்காரர்களுக்கு ஜில்லா தோறும் பொது தொகுதிகளில் பகுதிக்குக்கூட ஆள்கள் கிடைப்பது கஷ்டமாய் இருக்கிறது.
உதாரணமாக கோயமுத்தூர் ஜில்லாவை எடுத்துக் கொண்டால் தோழர் டி.எ.ராமலிங்கம் செட்டியாருக்கு ஒரு ஸ்தானம் ஒதுக்கி இருக்கிறார்கள். மற்றவை இன்னமும் நிஷ்கரிஷை செய்ய முடியவில்லை. செட்டியார் அவர்கள் ஸ்தானமும் ஜெயிப்பார்களா என்பது 100க்கு 75 பாகம் சந்தேகம் தான். ஏனெனில் எதிர்ப்போட்டிக்காரர் 40ஆயிரம் 50ஆயிரம் செலவழிக்க துணிந்து விட்டார். ஜாதி அபிமானம் வேறு தாண்டவமாடுகின்றது.
அவருடைய தொகுதியில் கொங்குவேளாளருக்கும் கம்ம நாயக்கர்மார் களுக்கும் தான் போட்டி நடக்கும். மற்ற ஜாதிக்காரர்கள் வந்தால் இருவரும் ஒன்று சேர்ந்து கொள்ளுவார்கள். ஆகையால் செட்டியார் ஜெயிப்பது சந்தேகம்.
இது தவிர மற்ற திருச்சி ஜில்லாவை எடுத்துக்கொண்டால் அங்கும் தோழர் தேவரைத்தவிர வேறு ஆள் கிடைப்பது கஷ்டமான காரியமாய் இருக்கிறது. தேவருடன் போட்டி போடும் ஆளும் சுமார் 10, 15 ஆயிரம் ரூபாய் செலவழிக்கத் துணிந்து நிற்கிறார். அங்கும் டவுனில் காங்கிரசுக்கு எவ்வளவு மதிப்பு என்பது நாம் எழுதி தெரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தில் யாரும் இல்லை.
சேலத்தில் தோழர் சுப்பராயன் அவர்களைத் தவிர வேறு ஆள்கள் அந்த ஜில்லாவில் சட்டசபைக்கு நிற்கக்கூடியவர்கள் காங்கிரசுக்கு கிடையாது. தோழர் சுப்பராயன் அவர்களுக்கும் அவர்கள் சொந்த ஜனங்களுக்குள்ளாகவே போட்டியும் அதிருப்தியும் பலமாக இருக்கிறது.
வட ஆற்காடு ஜில்லாவில் தோழர்கள் அண்ணாமலை குப்புசாமிகள்தான் இதுவரை அபேட்சகர்களாகக் கிடைத்திருக்கிறார்கள். தோழர் வி.எம்.ராமசாமி முதலியார் அவர்கள் பயந்து கொண்டிருக்கிறார். வட ஆற்காடு ஜில்லாவில் ஒரு ஐயாயிரம் ஆறு ஆயிரம் ரூபாய் செலவு செய்ய ஒரு அபேட்சகர் முன் வந்து விட்டால் அவரை எதிர்க்க காங்கிரசில் அபேட்சகர் கிடைப்பது கஷ்டமாக இருக்கும்.
மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாக்களும் இது போல்தான் இருக்கின்றன. மதுரைக்கு மாத்திரம் இதுவரை சுமார் 4லீ பார்ப்பனர்களை அபேட்சர்களாக காங்கிரஸ்காரர்கள் பிரஸ்தாபித்து இருக்கிறார்கள். அங்கு பார்ப்பனரல்லாதார் அபேட்சகர்களாக வரக்கூடியவர்கள் நூற்றுக் கணக்காக இருந்தும் காங்கிரசுக்கு ஒருவர் கூடக் கிடைக்கவில்லை. வலைபோட்டுத் தேடி ஓய்ந்தாய்விட்டது.
ராமநாதபுரத்தில் தோழர் குமார ராஜா பேர் அடிபடுகின்றது. அவருடைய இந்திய சட்டசபை ஸ்தானம் ராஜினாமா ஒப்புக் கொள்ளப்பட்ட பிறகுதான் அபேட்சகராய் நிற்க முடியும். அதுவும் 5000 அல்லது 10000 ரூபாயுடன் ஒருவர் போட்டி போட்டால் தோழர் ராஜா நிற்பாரா என்பதே சந்தேகம்.
திருநெல்வேலி ஜில்லாவுக்கு இன்னமும் யார் பேரும் பிரஸ்தாபிக்க முடியவில்லை. தளவாய் அவர்கள் இப்பொழுதே காங்கிரசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டார். தோழர்கள் எக்கினேஸ்வர சர்மாவும் கூத்த நயினார் பிள்ளை அவர்களும் வண்டி வாடகை கொடுத்தால்தான் ஓட்டுப்போடவே வெளியேறுவார்கள். ஆகவே அந்த ஜில்லாவுக்கு ஆள்களை இனிமேல் குயவன் சூளையில் உற்பத்தி செய்ய வேண்டியதாய் இருக்கிறது.
தஞ்சை ஜில்லாவில் தோழர் நாடிமுத்துபிள்ளை ஒரு ஸ்தானத்துக்கு துணிந்து நிற்பார். அதுவும் மந்திரி வேலைக்கு வாக்களித்திருப்பதினால்தான். மற்ற ஸ்தானங்களுக்கோ அய்யர்மார்களைத் தான் பிடிக்க வேண்டும்.
தென் ஆற்காட்டில் ஜஸ்டிஸ் கட்சியால் தின்று கொழுத்து உருவமான ஒரு முந்திரிக் கொட்டை ரெட்டியார் பட்டம் விட்டு விட்டு தலையை நீட்டிக் கொண்டிருக்கிறார். அவரை ஒரு ஸ்தானத்துக்கு வைத்துக்கொள்ளலாம். மற்ற ஸ்தானத்துக்கு காங்கிரசின் பேரால் நிற்க ஆள் கிடைப்பது கஷ்டம். ஜில்லா போர்டில் வெற்றி பெற்ற ரெட்டியார்களும் படையாச்சிகளும் டிமிக்கி கொடுத்து விட்டார்கள்.
செங்கல்பட்டுக்கு நமது தோழர் முத்துரங்க முதலியார் நிற்பார் என்பது உறுதி. மற்ற ஸ்தானங்களுக்கு ஆள் கிடையாது.
இவ்வளவுக்கும் கிடைப்பதானாலும் இனியும் ஒன்று இரண்டு ஆள்கள் கிடைப்பதாகவே வைத்துக்கொள்ளலாம். என்றாலும் இவைகள் மெஜாரிட்டி ஆகிவிடுமா என்பதோடு ஆந்திர தேச நிலவரம் என்ன என்று பார்த்தால் “வேட்டை ஆடினதில் 3 வெடி போட்டதில் 2 குண்டு குறிதவறி விட்டது. ஒன்று வெடிக்கவே இல்லை” என்பது போல் அவ்விடத்திய நிலையும் மிகவும் மோசம் என்று தான் சொல்லவேண்டி இருக்கிறது. கடப்பை, கர்நூல், பல்லாரி, அனந்தபூர் ஜில்லாக்களுக்கு காங்கிரஸ்காரர்களுக்கு சும்மா கவுரவத்துக்கு நிறுத்துவதற்குக் கூட அபேக்ஷகர்கள் பெயர் கிடைக்கவில்லை.
விசாகப்பட்டணமோ “பொப்பிலி ராஜ்யம்” என்று ஏற்கெனவே காங்கிரஸ்காரர்கள் சொல்லி விட்டார்கள்.
கோதாவரி, கிருஷ்ணா, நெல்லூர் ஆகிய ஜில்லாக்களில் பார்ப்பனர்கள் கம்மா ரெட்டி முதலிய தகராறுகளில் காங்கிரஸ் பேரால் நிற்க பார்ப்பனர்கள் தவிர பார்ப்பனரல்லாதார்களில் அபேட்சகர்கள் கிடைப்பது அரிதாய் விட்டது.
தமிழ்நாட்டிலாவது காங்கிரசுக்கு ஏதோ சில ஆள்கள் பார்ப்பன ரல்லாதாரில் இருக்கிறார்கள் என்றாலும் ஆந்திராவில் அது கூடக்கிடையாது. சுற்றிச்சுற்றி தோழர்கள் பட்டாபி, பிரகாசம், நாகேஸ்வரராவ், காளேஸ்வரராவ், புலுசு சாம்பமூர்த்தி என்கின்ற பந்துலுகள், அய்யர்கள் கூட்டங்களே தவிர மற்றபடி வேறு ஆள்கள் மிகவும் அபூர்வமாய்ப் போய்விட்டது. சில ரெட்டியார்கள் காங்கிரஸ் பேரால் குதியாட்டம் போட்டுக்கொண்டு இருந்தார்கள். அவர்களும் இப்போது முக்கியமானவர்கள் காங்கிரசை விட்டு விட்டார்கள்.
ஆகவே சென்னை மாகாணத்தின் நிலை காங்கிரசுக்காரர்கள் ஒரு 50, 60 ஸ்தானம் கைப்பற்றுவது என்பது கூட மிகவும் கஷ்டமான காரியமாகத் தான் இருக்கும்; அதுவும் பதவி ஏற்றுக்கொள்வதில்லை என்று சொல்லி விட்டால் ஒரு 10 ஸ்தானம் கிடைப்பது கூட காங்கிரசுக்கு அருமையாகத்தான் போய்விடும். வெறும் பார்ப்பனரும் குப்புசாமி கம்பெனியும் தான் மீதியிருக்கும்.
ஆகவே எந்த விதத்திலும் காங்கிரஸ்காரர்கள் மொத்தத்தில் 110 ஸ்தானங்கள் சம்பாதித்து மெஜாரிட்டி ஆகி மந்திரி சபை நியமிக்கும் அந்தஸ்துக்கு வருவார்கள் என்று நினைப்பது அமாவாசையன்றைக்குப் பூரண சந்திரோதயம் ஏற்படும் என்பது போல் தான் முடியும். இதற்குள் பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற பிளவு காங்கிரசில் காட்டுத் தீபோல் பரவிக்கொண்டிருக்கிறது. மந்திரி சண்டைக்கு இப்போது இருந்தே ஆயுதங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. யாருக்கு மந்திரி வேலை கிடைத்துவிட்டாலும் தோழர் சத்தியமூர்த்தி அவர்களுக்கு மாத்திரம் மந்திரி வேலை இல்லை என்பதை இப்போதே காங்கிரஸ் பக்தர்கள் கல்லில் எழுதி வைத்துக்கொண்டார்கள்.
தோழர் ராஜகோபாலாச்சாரியார் துறவும் தவமும் இனியும் நீண்டு அவை அஞ்ஞாத வாசத்தில் முடியும் போலிருக்கிறது.
ஆதலால் காங்கிரஸ் முயற்சி முடிவில் ஊரை ஏமாற்றி பணம் வசூலித்ததும், வாலிபர்களை ஏமாற்றி காலித்தனத்துக்கு உசுப்படுத்திவிட்டதும் பெண்களை ஏமாற்றி மக்களை மயக்கச்சொன்னதும், ஏமாந்த சோணகிரிகளை ஏமாற்றி பட்டம் பரிவட்டம் விடச்சொன்னதும் தான் மீதி ஆகப்போகிறதே தவிர முடிவில் காரியம் ஆகப்போவது ஒன்றும் இல்லை என்று இப்போதே எழுதி வைத்துக்கொள்ளலாம்.
எலக்ஷன் முடிந்த உடன் கவர்னர் காங்கிரசுக்கு எத்தனை பேர் வந்தார்கள்? காங்கிரசு அல்லாதவர்களில் எத்தனை பேர் வந்தார்கள்? என்று தான் கேட்கப் போகிறாரே ஒழிய சத்தியமூர்த்தியாரே எத்தனை பேர் உங்கள் ஆட்களும் அடிமைகளும் என்று கேட்கப்போவதில்லை.
அப்போது எப்படியோ காங்கிரஸ் அல்லாதவர்கள் தான் மெஜாரிட்டியாய் இருக்கப்போகிறார்கள். கவர்னர் பிரபு அவர்கள் (காங்கிரஸ் அல்லாதவர்களை) எல்லாம் ஒன்று சேர்த்து ஐரோப்பியருக்கு ஒரு மந்திரி, தாழ்த்தப்பட்டவருக்கு ஒரு மந்திரி, முஸ்லீம்களுக்கு ஒரு மந்திரி ஆக மூன்று மந்திரி போக மீதி நான்கோ ஐந்தோ நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுகிறீர்களா நான் தீர்மானிக்கட்டுமா என்று கேட்கப்போகிறார். அதிலும் எப்படியாவது பொப்பிலி ராஜாவுக்கு ஒரு மந்திரி பதவியும் செட்டி நாட்டு குமாரராஜாவுக்கு ஒரு மந்திரி பதவியும் கண்டிப்பாய் கிடைத்துவிடும். ஆகவே மூன்றும் இரண்டும் கூடி ஐந்து போக பாக்கி மூன்று ஸ்தானங்கள் மீதி கட்சி பலத்துக்கோ அல்லது ஜாதி பலத்துக்கோ ஆள் பலத்துக்கோ கொடுக்கப் பட்டுவிடும். இந்த 8 மந்திரிகள் எப்படியும் சட்டசபையில் எப்போதும் மெஜாரிட்டியாகவே இருந்துவரத் தக்கவர்களாக ஆகி விடுவார்கள்.
இந்த நிலை தெரிந்த உடன் காங்கிரசுக்காரர்கள் சீ அந்தப்பழம் புளிக்கும் என்கின்ற மாதிரியில் பதவி மறுப்பு, சீர்திருத்த உடைப்பு, முட்டுக் கட்டை ஆகிய நாமாவளி சொல்லிக்கொண்டு வெளியில் நின்று பஜனை பாடி மறுபடியும் பிச்சைக்கு வரப் போகிறார்கள். இதற்குள் காங்கிரஸ்காரர்களில் சிலர் ஏதோ ஒரு நொண்டிச் சாக்கை சொல்லிக்கொண்டு ஒவ்வொருவராய் காங்கிரசில் இருந்து விலகி சுயேச்சைவாதியாகி மற்ற கட்சிகளின் அனுதாபிகளாகி ஆதரவாளர்களாகி வெட்கம் எல்லாம் தீர்ந்த உடன் ஜஸ்டிஸ்கட்சி ஜோதியில் இரண்டறக் கலந்துவிடப் போகிறார்கள். இதுதான் நடக்கக்கூடுமே தவிர காங்கிரஸ்காரர்கள் மெஜாரிட்டி வந்து கோட்டைக்குள் புகுந்து காங்கிரஸ் கொடியை பறக்கவிட்டு காரியதரிசிகளையும் கவர்னரையும் கதர் கட்டச் சொல்லப் போகிறோம் என்பதும் போலீஸ்காரர்களை தலை வணங்கச் சொல்லப்போகிறோம் என்பதும் பட்டாளத்தை திருப்பிச் சுடச் சொல்லப் போகிறோம் என்பதும் வெட்டி அளப்பும் ஏதோ சில பார்ப்பனர்களையாவது சட்ட சபைக்குள் நுழையச் செய்யும் சூழ்ச்சியுமேயாகும்.
ஆதலால் ஆங்காங்குள்ள சொந்த செல்வாக்குள்ளவர்களும் சொந்த பணவசதி யுள்ளவர்களுமான பார்ப்பனரல்லாதார்கள் இந்த தோழர் சத்தியமூர்த்தி கூட்டத்தாரின் பித்தலாட்டங்களுக்கு ஆளாகி மானங்கெடாமல் சுயமரியாதை இழக்காமல் ஜாக்கிரதையாய் இருந்து தங்கள் சொந்தத்தில் சுயேச்சையில் நின்று வெற்றிபெற வேண்டுமாய் யோசனை கூறுவதுடன் பின்னால் ஏமாந்துவிட்டோமே இனி எப்படி கட்சி மாறி அவமானமடைவது என்று வருத்தப்படாமல் இருக்க எச்சரிக்கை செய்கிறோம்.
மற்றும் வீணாக நமது பணத்தை 10000, 150000, 200000 என்று செலவு செய்து நாம் ஆலாய்ப் பறந்து அவதிப்பட்டு ஓட்டு சம்பாதித்து ஸ்தானம் பெற்று “திருப்பதிக்குப் போயும் பறத்தாசன் காலில் தானா விழுக வேண்டும்?” என்கின்ற வைதீக பழமொழிப்படி இந்தப் பார்ப்பனர்கள் பின்னாலும் அவர்களுடைய கூலிகள் பின்னாலும் கபாத்து பழக வேண்டுமா என்பதையும் நிதானமாய் சொந்த புத்திகொண்டு ஆராய்ந்து பார்க்கும்படி வேண்டுகிறோம்.
குடிஅரசு தலையங்கம் 13.12.1936