காலித்தனம்
காங்கிரசுக்கு கொள்கையற்று நாணையமற்று செலவுக்கு பணமும் அற்றுப்போன பின்பு அது தனது உயிர் வாழ்வுக்கு காலித்தனத்தையே குறையா பொக்கிஷமாய்க் கருதி இருக்கிறது என்பதை சமீப தேர்தல்களில் அவர்கள் நடந்துகொண்ட மாதிரிகளால் நன்றாய் உணர்ந்து கொண்டோம்.
இது விஷயமாய் சர்க்காருக்கும் முன்பு பல தடவைகளில் வலியுறுத்தி பத்திரிகைகளில் எழுதி இருக்கிறோம். சர்க்கார் சிறிதும் கவனித்ததாக தெரியவில்லை.
சமீபத்தில் மந்திரிகள் சென்ற இடங்களிலும் தேர்தல் கூட்டங்கள் நடந்த இடங்களிலும் தேர்தல்கள் நடந்த இடங்களிலும் காங்கிரசுக்காரர்கள் நடந்துகொண்ட காலித்தனங்கள் சர்க்காரார் அறிந்திருக்கமாட்டார்கள் என்று யாராலும் சொல்லி விட முடியாது.
அதிகாரிகள் பெரும்பாலோர்கள் பார்ப்பனர்கள் ஆனதினாலும் குறிப்பாக போலீஸ் இலாக்கா பார்ப்பன ஆதிக்கமாய் இருந்து வருவதாலும் காங்கிரஸ் பார்ப்பன ஆதிக்க ஸ்தாபனமானதினாலும் காங்கிரசுக்காரருக்கு காலித்தனம் செய்ய வசதியும் தைரியமும் அதிகமாக இருந்து வருகிறது என்று கருதவேண்டி இருக்கிறது.
ராமநாதபுரம் ஜில்லாவில் விருதுநகர் தேர்தலிலும் தேர்தல் கூட்டங்களிலும் காலிகள் செய்த அட்டகாசத்திற்கு அளவே இல்லை என்பதோடு எல்லாப் பொறுமைகளும் தீர்ந்து போக வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டது.
சிறு பையன்களைப் பிடித்து கொடிகளை கொடுத்து எதிர் அபேட்சகர்களை வையச் சொன்ன காட்சி மிகவும் சகிக்கக் கூடாதாகவே இருந்திருக்கிறது என்று தெரிகிறது.
கூட்டங்களில் அவர்களைக் கொண்டு தொல்லையும் கலவரமும் செய்த காட்சியும் கடுமையான பொறுமை காட்டாமல் இருந்திருந்தால் கொலைகளே நடந்திருக்கும்படியான நிலையை உண்டாக்கின.
இவற்றை சர்க்காரார் கவனியாமலிருப்பதன் இரகசியம் இன்னது என்று நமக்கு இன்னும் விளங்கவில்லை.
ஆகையால் இனியாவது அரசாங்கம் சற்று கவலை கொண்டு கூட்டங்களிலும் தேர்தல்களிலும் காலித்தனம் நடைபெறாமல் இருப்பதற்கு ஏதாவது முயற்சி செய்வார்கள் என்று எண்ணுகின்றோம்.
குடி அரசு கட்டுரை 29.11.1936