ஆச்சாரியார் இதற்கென்ன பதில் சொல்லுவார்?

 

சென்னையில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி செய்து சிறைப்பட்ட பெண்களது வழக்கு விசாரணையில் முடிவு சொன்ன நீதிபதி அவர்கள் எழுதிய தீர்ப்பு ்விடுதலை”யில் பிரசுரிக்கப்பட்டிருப்பதை வாசகர்கள் படித்திருக்கலாம். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:-

்கிளர்ச்சி செய்த பெண்களில் இருவர் கவுரவமான பெண்கள்; மற்றும் சிலர் வயதானவர்கள். ஆதலால் அவர்கள் சொல்லுவதை நான் நம்புகிறேன். அதாவது அவர்கள் ்ராஜகோபாலாச்சாரியார் ஒழிக” என்றும் ்பார்ப்பனர் ஒழிக” என்றும் சொல்லி இருக்கமாட்டார்கள் என்றே கருதுகிறேன். அன்றியும் ்இந்தி ஒழிக” ்தமிழ் வாழ்க” என்று கோஷிப்பதாலும் குற்றமில்லை என்றும் அந்த வார்த்தைகள் குற்றமானவை அல்ல என்றும் ஒப்புக்கொள்ளுகிறேன்” என்பதாகும்.

இதிலிருந்து நீதிபதி அவர்கள் போலீசாரை நம்பவில்லை என்பதும் போலீசார் சொன்ன சாòயம் உண்மை அல்ல என்பதும் நன்றாய்க் காணக்கிடக்கின்றது. இந்தப் போலீசார்தான் இதுவரை அனேகத் தொண்டர்கள் மீது இதே மாதிரி சாò சொல்லி தண்டிக்கச் செய்திருக்கிறார்கள் என்பதை பொதுமக்கள் உணர்வார்களாக.

அதோடு மாத்திரமல்லாமல் சில பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர்கள் தம் அடிமைகளும் இந்தி எதிர்ப்புக்காரர்கள் யோக்கியமான முறையில் கிளர்ச்சி செய்யவில்லை என்றும் கெட்ட வார்த்தைகள் சொல்லி பிறர் மனதை நோவச் செய்கிறார்கள் என்றும் துராக்கிரகம் செய்கிறார்கள் என்றும் சொன்னதும் சொல்லி வருவதும் முழுப்பொய் என்பதும் அயோக்கியத்தனமாகவும் அற்பத்தனமாகவும் வேண்டுமென்றே செய்யும் விஷமப்பிரசாரமே ஒழிய சிறிதும் உண்மையல்ல என்றும் கருத இடம் தருகிறது.

இவை மாத்திரமல்லாமல் வாக்குச் சுதந்திரமும் நியாயமான கிளர்ச்சி சுதந்திரமும் மக்களுக்கு அளித்திருப்பதாய் கூறும் காங்கரஸ்காரர்கள் யோக்கியதையும் அவர்களது ஆட்சி யோக்கியதையும் எப்படிப்பட்டது என்பதும் நன்றாய் விளங்குகிறது.

கவுரவமான பெண்கள் வயது முதிர்ந்த பெண்கள், தெருவில் நின்று ்இந்தி ஒழிக” ்தமிழ் வாழ்க” என்று சொல்வது கிரிமினல் அமெண்டுமெண்ட் ஆக்ட்டுப்படி எப்படிக் குற்றமாகிறது என்பதை பொதுமக்கள் தான் யோசித்து முடிவு செய்ய வேண்டும். இந்தக் காரியங்களைச் செய்யும்படித் தூண்டுவது தானாகட்டும் எப்படி உடந்தைக் குற்றமாகின்றது என்பதும் நமக்கு விளங்கவில்லை.

ஆகவே காங்கரஸ் ஆதிக்கமானது தனது அபிப்பிராயத்துக்கு மாறுபட்டவர்கள் அதை எந்த விதமான முகாந்திரத்தைக் கொண்டும் வெளியிடக் கூடாது என்பதும் காங்கரசுக்கு விரோதமாக யாரும் நினைக்கவும் பேசவும் கூடாது என்பதுமான காட்டுராஜா ஆதிக்கம் செலுத்துகிறது என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

தோழர் கனம் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் மேல் குறிப்பிட்ட நீதிபதி தீர்ப்புக்கு என்ன பதில் சொல்லுகிறார் என்று கேட்கின்றோம்.

நீதிபதி அவர்கள் ்கிளர்ச்சி செய்தவர்கள் கவுரவமானவர்கள்; அவர்கள் கோஷம் செய்த வார்த்தைகளும் குற்றமானவை அல்ல” என்று சொல்லிவிட்டார்.

மேலும் பள்ளிக்கூடத்திற்கு சென்ற பிள்ளைகளையும் செல்லாமல் தடுக்கவில்லை என்றும் விசாரணையில் தெரியவருகிறது. சாட்சி சொல்லுவது என்னவெனில் இவர்கள் கூட்டத்தால் பிள்ளைகள் பள்ளிக் கூடத்திற்குள் போக முடியவில்லை என்றும் உள்ளே இருக்கிற பிள்ளைகள் இந்த சத்தம் கேட்டு வெளியில் வருகிறார்கள் என்றும் சொல்லி இருக்கிறார். இதைப்பற்றி ஒரு பையனாவது ஒரு உபாத்தியாராவது சாò சொல்லவே இல்லை. அப்படியே இருப்பதாகவே வைத்துக்கொண்டாலும் அதற்கும்கிரிமினல் அமெண்டுமெண்ட் ஆக்ட்டுக்கும் என்ன சம்மந்தம் என்றும் பிரிட்டிஷ் சர்க்கார் தங்கள் ஏகபோக ஆட்சியில் இந்த மாதிரியான காரியங்களுக்காக இந்த ஆக்டை உபயோகித்தார்களா என்றும் யோசித்துப்பார்த்தால் காங்கரஸ் ஆட்சியின் யோக்கியதை யாருக்கும் புலப்படாமல் போகாது.

தவிரவும் நீதிபதி அவர்கள் தீர்ப்பில், மறியல் செய்த பெண்மணிகள் கவுரவமானவர்கள் டாக்டர்கள் என்று எழுதியிருந்தும்கூட போலீசார் அவர்களுக்கு அன்று பகல் முழுதும் பட்டினி போட்டு இங்குமங்குமாய் இழுத்தடித்திருக்கிறார்கள் என்றால் காங்கரசின் நீதி எங்கே என்று கேட்கின்றோம்.

காங்கரஸ்காரர்கள் இக்கிளர்ச்சியை அழிப்பதற்காக இதுவரை எத்தனையோ வித சூழ்ச்சிகள் செய்து பார்த்துவிட்டார்கள். இனிமேற் கொண்டு பெண்கள் இதில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்காக ஏதேதோ சூழ்ச்சி செய்வதாகவும் அதற்கு சில பெண்களை விலைக்கு வாங்குவதாகவோ வாங்கி இருப்பதாகவோ நம்பத்தகுந்த இடத்திலிருந்து சேதிகள் வருகின்றன. இது உண்மையானால் ஒரு உண்மையான இயக்கத்தின் கிளர்ச்சியை ஒடுக்க இம்மாதிரி இழிவான முயற்சிகளைக் கையாளுகின்ற ஒரு இயக்கமும் அதன் தலைவர்களும் யோக்கியமானவர்கள் என்று சொல்ல முடியுமா என்று கேட்க வேண்டியிருக்கிறது.

காங்கரஸ் பத்திரிகைகள் மிக்க இழிவான முறையில் இவ்வுண்மை களையும் கிளர்ச்சியின் உண்மையான நடவடிக்கைகளையும் மறைக்கவும் திரித்துக் கூறவும் விஷமத்தனம் செய்யவுமான காரியங்கள் சிறிதும் கைகூசாமல் மான வெட்கமின்றி செய்து வருகின்றன. பாமர மக்கள் இப்பத்திரிகைகளின் உண்மை யோக்கியதையை உணர முடியாத நிலையில் இருப்பதால் இப்பத்திரிகைகளின் அட்டூழியங்கள் செலவணியாகிக் கொண்டு வருகின்றன.

ஆதலால் இனிமேல் மக்களுக்கோ நாட்டுக்கோ ஒழுக்கத்துக்கோ நீதிக்கோ செய்ய வேண்டிய அருந்தொண்டு என்னவென்றால் இவ்வற்ப அயோக்கியப் பத்திரிகைள் ஒழிக்கப்பட வேண்டியதே முதல் கடமையாகும் என்றுகூட கருத வேண்டியதாய் இருக்கிறது.

பொதுவாகச் சொல்ல வேண்டுமானால் சில சூழ்ச்சிப் பத்திரிகைகளுக்கும் சில துரோகக் கூலிப் பத்திரிகைகளுக்கும் நாட்டில் செல்வாக்கேற்பட்டதன் பயனே நாட்டில் இவ்வளவு அக்கிரமங்களும் அநீதிகளும் கொடுமைகளும் ஏற்படவும் அதுபோன்றவைகளுக்கு அதற்கேற்றதுமான மக்கள் ஏற்படவும் இடமேற்பட்டதென்பதே நமதபிப்பிராயமாகும்.

கூலிப் பத்திரிகைகளும் மலிந்துவிட்டன. என்ன எழுதியாவது எந்த இழிவான காரியம் செய்தாவது வயிறு வளர்க்கலாம் உயிர் வாழலாம் என்ற இழிகுண மக்களே பெரிதும் பத்திரிகையாளுபவர்களாக ஆகிவிட்டார்கள். இந்த நாட்டின் ஈனநிலைக்கு இவர்கள் இருப்பதே ஒரு மாபெரும் உதாரணமாகும். இதைப் பொதுமக்கள் உணருங் காலம் வரும் போதுதான் மக்களுக்கு மானமுண்டு, மான உணர்ச்சி உண்டு என்று சொல்லக்கூடும் என்பதே நமதபிப்பிராயமாகும்.

ஆகவே மக்கள் உண்மையை உணர வேண்டுமானால் பார்ப்பனரல்லாதாராலும் பார்ப்பனக் கூலிகளுமல்லாதவர்களுமானவர் களாலும் நடத்தப்படும் பத்திரிக்கைகளைப் பார்த்தால் தான் உண்மையை உள்ளபடி அறியலாம் என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்தி எதிர்ப்பு விஷயத்திலும் அதன் கிளர்ச்சி விஷயத்திலும் காங்கரஸ் பத்திரிகைகள் செய்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல என்று சொல்லுவோம். இவைகள் என்ன செய்தும் இந்தி எதிர்ப்பு தினத்துக்கு தினம் மேலோங்கிக் கொண்டு வருவதுடன் அது கூடிய சீக்கிரத்தில் இன்னமும் புதிய புதிய முறையில் கிளம்பப் போகிறது என்பதை இப்பொழுதே ்ஜோசியம்” கூறுகிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 20.11.1938

You may also like...