1. தோழர்களே !
தோழர்களே, 1947-ம் ஆண்டு தொடங்கிவிட்டது யாருடைய விருப்பு வெறுப்பையும், எவருடைய தயவு தாட்சண்யத்தையும், எப்படிப்பட்டவருடைய போக்குவரவையும் இலட்சியம் செய்யாமல் ஆண்டுகள் வருவது நடந்துகொண்டே இருக்கின்றது என்பதானது நம் இயக்கத்தின் நடைமுறையை ஞாபகப்படுத்துகிறது. ஜாதி, மதம், கடவுள், சமுதாயம், அரசியல் துறைகளில் புரட்சி மாறுபாடுகள் ஏற்படவேண்டும் என்று கருதி அதாவது இவைகளில் உள்ள நடப்புகள் சீர்திருத்தம் செய்யப்படவேண்டும் என்று இல்லாமல் அடியோடு, அழித்து ஒரே தன்மையானதாக ஆக்கப்படவேண்டும் என்று போராடத் தோன்றிய ஒரு இயக்கம் சுயமரியாதை இயக்கமாகும். இந்த நாட்டின் தீண்டாமை ஒழிப்புச் சங்கம் இருக்கலாம் ஆனால் அது ஜாதியை ஒழிக்கச் சம்மதிக்காது, ஜாதி ஒழிப்பு சங்கம் இருக்கலாம். ஆனால் அது மதத்தை ஒழிக்க சம்மதிக்ககாது, அதுபோலவே இந்த நாட்டில் மதம் ஒழிப்பு சங்கம் இருக்கலாம். ஆனால் அது மதத்துக்கு ஆதாரமான கடவுள்களையும், கடவுள் சம்மந்தமான முரண்பட்ட உணர்ச்சிகளையும் மூடநம்பிக்கைகளையும் ஒழிக்க சம்மதிக்காது, கடவுள் சம்பந்தமான முரண்பட்ட தன்மை மூடநம்பிக்கை ஆகியவைகளை ஒழிக்கும்...