1. தாழ்த்தப்பட்டோர் முன்னேற வழி பெரியார் பேசினது
சுமார் 15- – வருடங்களுக்கு முன் சென்னை ராயபுரத்தில் கண்ணப்பர் வாசகசாலையைத் திறந்துவைக்கையில் பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு இன்று நாட்டில் கிளப்பப்பட்டிருக்கும் தாழ்த்தப்பட்டோர் பிரச்சினைக்குப் பொருத்தமானதாகயிருப்பதால் அதன் சில பகுதிகளைக் கீழே தருகிறோம்:? ஆதிதிராவிட மக்களாகிய நீங்களும் மனிதர்களேயாயினும் சமூக வாழ்க்கையில் மிருகங்களைவிடக் கேவலமாகத் தான் நடத்தப்படுகின்றீர்கள் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். உங்களுக்குள் சிலர் ராவ்பகதூர்களாயும், ராவ்சாகிப்களாயும், மோட்டார் வாகனங்களிலும், கோச்சுகளிலும் செல்லத்தக்க பணக்காரர்களாயுமிருக்கலாம். மற்றும் உங்களுள் ஞானமுள்ள அறிவாளிகளும், படிப்பாளிகளுமிருக்கலாம். எவ்வாறிருந்தாலும் அத்தகையவர்களையும் பிறந்த ஜாதியையொட்டித் தாழ்மையாகத்தான் கருதப்பட்டு வருகின்றதென்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். அதற்கு ஒரே ஒரு காரணந்தான் இருக்கிறதென்று சொல்ல வேண்டும். அது ஜாதி வித்தியாசக் கொடுமையேயாகும். ஆதிதிராவிடர்கள் என்றால் கோயிலருகிலும் வரக்கூடாதெ- ன்கிறார்கள். (இப்பொழுது ஒரு சில இடங்களில் தாழ்த்தப்பட்டோர் கோவிலுக்குள் அனுமதிக்கப்டுகின்றார்கள் என்றால், அது அரசாங்கத்தாரின் சட்டபலத்தைக் கொண்டு. ஆனால், பொதுவாகத் தாழத்தப்பட்டோர் அனுமதிக்கப் படுகிறார்களா என்பதையும் இந்துக்கள்...