சலிப்பற்ற சுயமரியாதைத் தொண்டு
என்ன காரணத்தாலோ நாம் சவுக்கியமாக உயிர் வாழ்கின்றோம். எப்படியோ உயிர் வாழ்வுக்கு மற்ற எவருடைய தயவையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லாத நிலைமையில் இருந்து வருகின்றோம். மனிதனுக்கு இந்த இரண்டு காரியந்தான் மேலான சம்பத்து ஆகும். அதாவது உழைக்க உறுதியும் ஆசையும் – அதாவது சோம்பறித்தனமும் கழிப்பிணித்தனமும் இல்லாத, திடம் உள்ள சரீரமும் தனது வாழ்வில் எந்தத் துறைக்கும் மற்றவர்களை எதிர்பார்க்கவோ, தனக்குச் சரியென்று தோன்றிய அபிப்பிராயங்களை – முடிவுகளை தனது வாழ்க்கைக்காக – வாழ்க்கை நலத்துக்காக – மற்றவர்களின் தயவுக்காக மாற்றிக் கொள்ளவோ வேண்டிய அவசியமில்லாத – சாகும் வரை சுதந்திர உணர்ச்சியுடன் இருக்கத் தகுந்ததிலே எதுவோ அதுவே மேல்கண்ட உயர்ந்த சம்பத்தாகும். அப்படிப்பட்ட நிலையில் நான் இருப்பதால் (இருக்கிறதாக நான் நினைத்துக் கொண்டிருப்பதால்) அந்த நிலையைப் பாழாக்குவதற்கு இஷ்டமில்லாமல் பயனுள்ள வேலையென்று எதைக் கருதுகின்றேனோ அதைச் செய்கிறேன் என்பதல்லாமல் வேறு எவ்விதப் பிடிவாதமும் எனக்குக் கிடையாது. நாளை நான் சாகும்போது...