நாகம்மையார் மறைவும், கிறிஸ்துவ திருமணமும் – பெரியார் வரலாற்று நூலில் பிழையான தகவல்கள் (தா.செ. மணி)
திராவிடர் கழகம் வெளியிட்டு வரும் ‘தமிழர் தலைவர்’ பெரியார் வரலாற்று நூலில் திரிக்கப்பட்ட பிழைகளை நேர் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இக்கட்டுரை வெளியிடப் படுகிறது.
பெரியாரின் வாழ்வில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாக, நாகம்மையார் மறைவுக்கு (11-5-1933) அடுத்த நாள் திருச்சியில் 144 தடையை மீறி, இரு கிறிஸ்துவர்களுக்கு சுயமரியாதைத் திருமணம் செய்து வைத்தார் என்பது ஒன்றாகும். திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள சாமி சிதம்பரனார் எழுதிய ‘தமிழர் தலைவர்’ எனும் 1939 ஆம் ஆண்டு வரையிலான வாழ்க்கை வரலாற்று நூலிலும் “11-5-1933 இல் நாகம்மையார் காலஞ்சென்றார். 12-5-1933 இல் ஈ.வெ.ரா திருச்சி சென்று அங்கு ஒரு கிறிஸ்துவ விவாகத்தை 144 வது செக்ஷனை மீறி நடத்தி வைத்து அரஸ்டு செய்யப்பட்டார். பிறகு, சர்க்காரால் இந்த வழக்கு வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைப் பின்பற்றியே தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள “பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்” இரு பதிப்புகளிலும் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது.
திராவிடர் கழகம் வெளியிட்டு வரும் சாமி சிதம்பரனாரின் ‘தமிழர் தலைவர்’ என்ற நூலை பெரியாரின் அதிகாரபூர்வமான வாழ்க்கை வரலாறாக நம்பியே, அந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்திகளை எவ்வித ஆய்வுக்கும் உட்படுத்தாமல் ஏற்றே, தொடர்ந்து இந்த செய்தியை அனைவரும் பதிந்து வந்திருக்கிறார்கள்.
ஆனால் நாம் 15-5-2014 நாளிட்ட ‘பெரியார் முழக்கம்’ ஏட்டில் வெளியிட்டுள்ள 7-5-1933 குடிஅரசு ஏட்டின் 12ஆம் பக்கத்தில் தமிழ்நாடு புரோகித மறுப்பு சங்க உறையூர் கிளை இத் திருமணத்திற்காக வெளியிட்டிருக்கும் அழைப்பிதழிலும், மணமகனின் தந்தை அச்சிட்டிருந்த ஆங்கில அழைப்பிதழிலும், மேற்குறித்த தடையை மீறி நடந்த கிருஸ்துவ சுயமரியாதை திருமணத்தின் மணமகன் எழுதிய பதிவிலும், 14-5-1933 தான் திருமண நாளாகக் குறிப்பிட்டிருக்கும் போது ‘தமிழர் தலைவர்’ நூலை எழுதிய சாமி.சிதம்பரனார் ஏன் திட்டமிட்டே 12-5-1933 என்று தவறுதலாகப் பதிவு செய்ய வேண்டும் என்று யார் ஒருவரும் அய்யுறக்கூடும்.
அது குறித்து சில செய்திகள்…
பெரியார் 1938 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைதாகிறார். 6-12-1938 இல் ஓராண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம்; அபராதம் – செலுத்தாவிடில் மேலும் ஆறு மாதம் சிறை என்று தண்டனை வழங்கப்படுகிறது. ஆனாலும் அவரது மோசமான உடல் நிலையைக் கண்டு, சிறைக்குள் ஏதாவது நடந்துவிட்டால் தேவையற்ற சிக்கல் வரும் எனக் கருதிய அரசு 6-6-1939 அன்று அவரை விடுவித்து விடுகின்றது.
பெரியார் சிறை செல்வதற்கு முன்னரும், சிறை செல்லும் போதும் அவரது வாழ்க்கை வரலாற்றை அவரையே எழுதச் சொல்லி பலரும் வற்புறுத்தியும், சிறை வாழ்க்கையிலும் அவர் எழுதவில்லை என்பதைக் கண்ட சாமி. சிதம்பரனார் பெரியாரது வாழ்க்கை வரலாற்றை எழுதத் தொடங்குகிறார். எழுதியவற்றை 1939 ஜூன் மாதம் விடுதலையான பெரியாரிடம் காட்டி திருத்தங்களைப் பெற்று 1939 ஜூலையில் அவ்வரலாற்று நூல் வெளியாகிறது.
அந்த ஆண்டு செப்டம்பரோடு பெரியாருக்கு வயது 60 முடிகிறது. அந்த காலத்தில் 60 ஆண்டுகளே ஒரு மனிதனின் ஆயுள்காலம் என்று எண்ணிய காலம். அதனால் தானே தமிழ் வருடங்கள் என்று சொல்லப்படும் தமிழல்லாத பெயர்களையே முழுதும் கொண்ட ஆண்டுக் கணக்கில் 60 ஆண்டுப் பெயர்கள் மட்டுமே வைத்துள்ளனர்.
இடையில் ஒரு செய்தி…
‘காங்கிரஸ் மகா சரித்திரம்’ எழுதிய பட்டாபி சீத்தாராமையா, 1919, ஏப்ரல், 13 அன்று நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பற்றி எழுதும் போது, இந்து ஆண்டுப் பிறப்பு நாளையொட்டி, அந்த துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்ட பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டதாகக் கூறுகிறார். சித்திரை முதல் நாள் (ஏப்ரல் 13) தமிழ் ஆண்டுப் பிறப்பல்ல – இந்து ஆண்டு பிறப்பு என்கிறார் அவர்.
ஆக, பெரியாரின் மணி விழா (60 ஆவது ஆண்டு நிறைவு விழா) வெளியீடாக ‘தமிழர் தலைவர்’ என்ற அவரது வாழ்க்கை வரலாற்று நூலை குத்தூசி குருசாமி அவர்கள் தனது மாமனார் திரு. சுப்பிரமணியம் அவர்களது திருவல்லிக்கேணி வீட்டு முகவரியிட்டு நடத்தி வந்த “தமிழ் நூல் நிலையத்தின்” சார்பாக வெளியிட்டுள்ளார்.
ஆசிரியர் முன்னுரையில் சாமி. சிதம்பரனார் 1939 ஜூன் தொடக்கத்தில், பெரியார் விடுதலையான பின், ‘தமிழ் நூல் நிலையத்தார்’ பெரியாரிடம் படித்துக் காட்டிப் பல திருத்தங்கள் செய்யப்பட்டதாகவும் கூறி, 10-7-1939 –இல் முன்னுரை எழுதியுள்ளார். சோமசுந்தர பாரதியாரிடம் 31-8-1939 அன்றும், திரு.வி.க.விடம் 1-9-1939 அன்றும், சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியாரிடம் 7-9-1939 அன்றும் நூலுக்கு சிறப்புரைகள் பெறப்பட்டுள்ளன.
அந்நூலின் அன்பிதழாக (ஊடிஅயீடiஅநவேயசல ஊடியீல) அப்போது கொச்சி திவானாக இருந்த சர்.ஆர்.கே சண்முகம் செட்டியார் அவர்களுக்கு வெளியீட் டாளரான குத்தூசி குருசாமி அவர்கள் தனது கைப்பட ஊடிஅயீடiஅநவேயசல ஊடியீல கூடி ளுசை. சு.மு.ளுhயnஅரபயஅ ஊhநவவயைச யஎட, முஊஐநு னுநறயn டிக ஊடிஉhin றுiவா வாந நௌவ ஊடிஅயீடiஅநவேள கசடிஅ வாந ஞரடெiளாநசள என்று 19-9-1939 அன்று எழுதியனுப்பிய நூல் சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியாரின், கோவை கே. °ரீரங்கம்மாள் கல்வி நிலைய நூலகத்திலிருந்து எம்மால் படி எடுக்கப்பட்டு எம்மிடம் உள்ளது. ஆக, அந்நூல் பெரியாரின்
61-ஆவது பிறந்த நாளான 17-9-1939 அன்று வெளியிடப் பட்டிருக்கலாம்.
அந்த நூல் ஹடட சுiபாவள சுநளநசஎநன என்ற குறிப்புடனேயே வெளியாகியுள்ளது. அதன் பின்னர் 1942 இல் குத்தூசி குருசாமி அவர்களின் தமிழ் நூல் நிலையமே இரண்டாவது பதிப்பை வெளியிட்டுள்ள தாகவும் தெரிய வருகிறது.
1939 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள முதல் பதிப்பின் 141 ஆம் பக்கத்தில் பெரியார், நாகம்மையார் உயிர் ஊசலாடிருக்கும் நிலையில், திருப்பத்தூரில் நடக்கவிருந்த வட ஆற்காடு ஜில்லா சுயமரியாதை மாநட்டுக்கு செல்ல வேண்டாம் என்று தடுத்தும் கேட்காமல் போன செய்தியும், அம்மாநாட்டில், “…………, வருணாசிரமம் இருக்க வேண்டும்; ஜாதி இருக்க வேண்டும்; முதலாளிகள் இருக்க வேண்டும்; மதம் இருக்க வேண்டும்; வேதம், புராணம், இதிகாசம் இருக்க வேண்டும்; இன்றைக்கிருக்கிறவைகள் எல்லாம் இருக்கவேண்டும்” என்று சொல்லிக் கொண்டு, இவைகளையெல்லாம் பலப்படுத்த நிலைக்க வைக்க வேண்டி – “வெள்ளைக்காரன் மாத்திரம் போகவேண்டும்” என்கின்ற காங்கிரசோ, சுயராஜ்யமோ, தேசியமோ, காந்தியமோ, – சுயமரியாதை இயக்கத்துக்கு வைரியே (எதிரியே) ஆகும். ஆகையால் சுயமரியாதை இயக்கத்தாரால் அழிக்கப்பட வேண்டியவைகளில் இந்தக் காங்கிரசும் காந்தீயமும் முதன்மையானவைகளாகும்” என்று திருப்பத்தூர் மாநாட்டில் பேசினார். இவ் வுண்மையை எல்லோரும் ஒப்புக்கொண்டனர். பின்னர் 11-5-1933-ல் நாகம்மையார் காலஞ் சென்றார் என்று தான் உள்ளது.
ஆனால், அடுத்து, ஈரோடு குடிஅரசு பதிப்பகம் 1960 –ஆம் ஆண்டு வெளியிட்ட நான்காம் பதிப்பே நம் பார்வைக்குக் கிடைத்தது. அப்பதிப்பின் 151 ஆம் பக்கத்தில் “பின்னர் 11-5-1933 இல் நாகம்மையார் காலஞ்சென்றார். 12-5-1933 இல் ஈ.வெ.ரா திருச்சி சென்று அங்கு ஒரு கிறிஸ்துவ விவாகத்தை 144வது செக்ஷனை மீறி நடத்தி வைத்து அரஸ்டு செய்யப் பட்டார். பிறகு, சர்க்காரால் இந்த வழக்கு வாபீஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது” என்பதாகக் காணக் கிடக்கிறது.
அடுத்ததாக வெளியிடப்பட்டுள்ள அய்ந்தாம் பதிப்பை நம்மால் காணமுடியவில்லை. திருச்சி பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தால் 1971 இல் வெளியிடப்பட்ட ஆறாம் பதிப்பு நம்மிடம் உள்ளது. அந்நூலின் 139ஆம் பக்கத்திலும் நான்காம் பதிப்பில் உள்ளவாறான செய்தியே காணக் கிடக்கிறது.
அடுத்து 1983 –இல் வெளியிடப்பட்ட எட்டாம் பதிப்பு, 1992 –இல் வெளியிடப்பட்டுள்ள ஒன்பதாம் பதிப்பு; 1997 இல் வெளியிடப்பட்டுள்ள பத்தாம் பதிப்பு என அனைத்துப் பதிப்புகளிலும் அவ்வாறே காணப்படுகிறது. ‘வாபஸ்’ என்ற சொல் மட்டும் ‘வாபஸ்’ என மாற்றப்பட்டுள்ளது.
ஆக, பெரியாரின் வரலாற்றில் நடந்த ஒரு முக்கிய செய்தியை, ஏற்றத்தாழ்வை இந்து மதமல்ல எந்த மதம் சொன்னாலும் அதைக் கடுமையாக எதிர்ப்பது என்ற நோக்கில் கத்தோலிக்க கிறிஸ்துவர்களுக்கு இடையே பெருந்தடைகளை மீறி நடத்தப்பட்ட கிறிஸ்துவ சுமரியாதைத் திருமணத்தின் நாளை கூட ஒப்பு நோக்காமல் தொடர்ந்து பிழையாகவே அச்சிட்டு வரும் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனச் செயலாளர் நாம் 1925 முதல் 1938 முடிய ‘குடிஅரசு’ இதழில் வெளிவந்திருந்த பெரியாரின் எழுத்துக் களையும் பேச்சுகளையும் தொகுத்து வெளியிடுவதை அறிவித்தவுடன், உயர் நீதிமன்றத்தை அணுகி தடை வாங்கி வழக்கு நடத்தினார். உயர் நீதிமன்றத்தில் தோற்றதும், உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்து அதிலும் வெற்றி பெறமுடியாத போதும், டெல்லி உச்ச நீதிமன்றத்துக்கும் ஓடோடி சென்று மேல் முறையீடு செய்தார். அங்கு மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கவும் தகுதி யற்றது என்று தள்ளுபடி செய்த பின்னர்தான் ஓய்ந்தார்.
அதோடு விட்டாரா? எங்களைத் தவிர எவர் வெளி யிட்டாலும் பெரியார் கருத்தை திரிபு செய்து விடுவார்கள் என்று வித்தாரம் வேறு பேசினார்கள். ஆனால் அவர்கள் தான் 1925, மே 2ஆம் நாளிட்ட முதல் இதழின் தலையங்கத்தையே தப்பும் தவறுமாக வெளியிட்டு ‘திரிபுவாத திம்மன்’களாக வெளிப் படுத்திக் கொண்டார். அப்போது நமது பெரியார் முழக்கம் ஏட்டில் “திரிபுவாத திம்மன்கள் யார்?” என்று ஒரு தொடரே அவர்களது திரிபு வாதங்களை விளக்கி எழுதியிருந்தோம்.
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். இனி மேலாவது நாகம்மையார் மறைந்தது 11-5-1933; தடைகளைத் தாண்டி கத்தோலிக்க கிறிஸ்துவர் சுயமரியாதைத் திருமணம் நடந்தது 14-5-1933 என்று திருத்திக் கொள்வார்களாக !
மற்றுமொன்றையும் சுட்டிக் காட்டியாக வேண்டும்
1971 -ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட “தமிழர் தலைவர்” நூலின் ஆறாம் பதிப்புரை பிற் சேர்க்கையாக சேர்க்கப்பட்டிருப்பதில், 1943 –ல் பம்பாயில் ஜின்னா, டாக்டர் அம்பேத்கர் ஆகி யோர்களைச் சந்தித்து நாட்டு பிரிவினை குறித்தும், சமுதாய மதவியல் குறித்தும் தம் கருத்துக்களை எழுதி விளக்கினார்கள் என்றுள்ளதில் இருந்த ‘1943 இல் என்ற தவறானப் பதிவை பிந்தைய பதிப்புகளில் ‘8-1-1940 –இல்’ என்று திருத்தி கொண்டுவிட்டார்கள். ஆனாலும் ஜின்னா, அம்பேத்கரை சந்தித்த பெரியார் தம் கருத்துக்களை எழுதி விளக்கினார்கள் என்றே உள்ளது. நேரில் சந்தித்தவர் தம் கருத்துக்களை எடுத்து விளக்கியிருப்பாரா? எழுதி விளக்கியிருப்பாரா? சரி அதையும் விடுவோம்…
1960 ஆம் ஆண்டில் நான்காம் பதிப்பிலிருந்து பிற்சேர்க்கையாக 1959 பிப்ரவரி 1 முதல் 28 முடிய வடநாட்டு சுற்றுப் பயணம் உட்பட 1959 –ஆம் ஆண்டு வரையிலான வாழ்க்கைக் குறிப்பே 1971 –ஆம் ஆண்டின் ஆறாவது பதிப்பிலும் அடுத்த ஆண்டு களில் நிகழ்ந்த நிகழ்வுகளைச் சேர்க்காமல் தொடர்கிறது.
1959 பிப்ரவரி 1 முதல் 28 முடிய நடந்த பயணத்தில் பம்பாயில் பல இடங்களில் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியில் உரையாற்றியுள்ளார். அவற்றில்
- கடவுள் மதம் 2. ஜாதி 3. ஜனநாயகம் இம்மூன்றும் இந்நாட்டு மக்களைப் பிடித்துள்ள ‘பேய்கள்’. அதேபோல சட்டசபை, பத்திரிக்கை, பார்ப்பான், தேர்தல், சினிமா இவை இந்நாட்டைப் பிடித்துள்ள அய்வகை நோய்களாகும். என்ற கருத்தை விளக்கிப் பல மணி நேரம் விளக்கவுரை யாற்றி, அவர்களுக்குப் புதியதோர் உணர்வூட்டினார்’ என்ற செய்தி வெளியாகி உள்ளது.
ஆனால் பெரியாரின் மறைவுக்குப் பின்னர் வெளியாகியுள்ள பதிப்புகளின் வாழ்க்கைக் குறிப்புகளில் “19-5-1962 –ல் பக்கம் 262ல் வாழப்பாடியில் பெரியார் பேசும் போது, மூன்று ‘பேய்கள்’ பற்றியும், அய்ந்து ‘நோய்கள்’ பற்றியும் முதன் முதலில் பேசினார். எல்லோருக்கும் புதுமையாய்த் தோன்றிற்று பேய்கள் மூன்று : 1. கடவுள் 2. சாதி – மதம் 3. ஜனநாயகம்
நோய்கள் அய்ந்து : 1. பார்ப்பான், 2. பத்திரிக்கை, 3. அரசியல் கட்சி, 4. தேர்தல், 5. சினிமா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
1959 பிப்ரவரியில் பம்பாயின் பல பகுதிகளில் விளக்கிப் பேசிய அதே மூன்று பேய்களையும், அய்ந்து நோய்களையும் மீண்டும் 1962 –இல் முதல் முதலாக “பேசியிருப்பது”தான் எல்லோருக்கும் புதுமையாய்த் தோன்றுகிறது.
ஆனைக்கும் அடி சறுக்குமாம் !
இவர்களுக்கு அடிக்கடி சறுக்குமோ ? – தா.செ. மணி
பெரியார் முழக்கம் 19062014 இதழ்