இதுதான் கெயில் நிறுவனம்!
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கெயில் நிறுவனம், தனியார் மின் உற்பத்தி நிறுவனத் துக்குக் குழாய் வழியாக கொண்டு சென்ற எரிவாயு வெடித்து, 19 பேர் உயிரிழந்துவிட்டனர். எளிதில் தீப்பற்றக்கூடிய வாயுவை குழாய் மூலம் கொண்டு செல்வதில் மிகுந்த கவனமும் பராமரிப்பும் தேவை. ஆனால், வழமையான அதிகாரிகள் அலட்சியம்தான் மனித உயிர்களைப் பலிவாங்கியிருக்கிறது. இத்தகைய ஆபத்தான திட்டங்களை மக்கள் எதிர்த்துப் போராடினால் வளர்ச்சியை விரும்பாதவர்கள், வெளிநாட்டுப் பணம் பெறும் தொண்டு நிறுவனங்களால் தூண்டி விடப்படுகிறவர்கள் என்று குற்றம் சாட்டும் ஆட்சிகள், இந்த சாவுக்கு என்ன பதிலை கூறப் போகின்றன?
தமிழ்நாட்டில் மக்கள் எதிர்ப்பால் இந்த ஆபத்தான திட்டத்தை தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது சரியான முடிவு என்பதை இந்த விபத்து உறுதிப்படுத்தியிருக்கிறது.
‘கூடங்குளம்’ திட்டத்தை நியாயப்படுத்தும் ஆட்சியும், அதிகார வர்க்கமும் இந்த ஆபத்துகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளுமா?
மவுலிவாக்கம் அவலம்!
சென்னை மவுலிவாக்கத்தில் ஏரிக்கரை மீது எழுப்பப்பட்ட
11 அடுக்கு மாடிக் குடியிருப்புக்கள் சடசடவென்று சரிந்து விழுந்து, ஏழைத் தொழிலாளிகளைப் பிணமாக்கிவிட்டதே! இதற்கு யார் காரணம்? இடி மின்னல் மீது பழி போடுகிறார்கள் கட்டிட ஒப்பந்தக்காரர்கள். பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் (சி.எம்.டி.ஏ.) மீது தவறு இல்லை என்று அவர்களைக் காப்பாற்றத் துடிக்கிறது – தமிழக அரசு. இத்தகைய பெரும் கட்டுமானங்களுக்கு துறையில் ஒவ்வொரு நிலையிலும் அதிகாரிகளை “கவனிக்க வேண்டும்” என்றும், ஒரு சதுர அடிக்கு 30 ரூபாய் வரை லஞ்சம் வாங்கப்படுகிறது என்றும் கூறுகிறார், ஓய்வு பெற்ற ‘சிம்.எம்.டி.ஏ.’ அதிகாரி ஒருவர்.
“விதி மீறி கட்டப்படும் கட்டிடங்களைக் கண்காணிக்க உயர்நீதிமன்றம் ஒரு குழு அமைத்தது. இந்தக் குழு சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. ஊழல் அதிகாரிகள் இருக்கும் வரை, விதிமீறல்களை தடுக்கவே முடியாது” என்கிறார், குழுவின் உறுப்பினரான முன்னாள் அய்.ஏ.எ°. அதிகாரி தேவசகாயம். அடித்தட்டு மக்களின் உயிரோடு விளையாடுவது ஆளும் அதிகாரக் கும்பலுக்கு ஒரு பிரச்சினையே இல்லை போலும்!என்னே கொடுமையடா!
மனித உரிமை மீறல் : அய்.நா. விசாரணைக் குழு
இலங்கையில் ராஜபக்சே ஆட்சி நடத்திய மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்த மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. பின்லாந்து நாட்டின் முன்னாள் அதிபரும் நோபல் பரிசு பெற்றவருமான மார்ட்டி ஆட்டி சாரி (77), நியூசிலாந்து நாட்டின் முன்னாள் ஆளுநர் சில்வியா கார்ட்ரெட் (70), பாகிஸ்தானின் முன்னாள் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் ஆஸ்மா ஜஹாங்கீர் (62) ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இரு தரப்பிலும் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் தொடர்பாக, இவர்கள் இலங்கைக்குச் சென்று 10 மாதங்கள் விசாரணை நடத்துவார்கள். விசாரணைக் குழுவை வரவேற்றுள்ள அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவி பிள்ளை. குழுவினர் மூவரும் நேர்மையானவர்கள், சுதந்திர மானவர்கள், பாரபட்சமின்றி செயல்படக் கூடியவர்கள் என்று பாராட்டியுள்ளார். இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, ஒத்துழைப்பு இல்லாவிடினும் விசாரணை தொடரும் என்று கூறியுள்ளார்.
பெரியார் முழக்கம் 03072014 இதழ்