காவிரி உரிமையை பாதுகாக்க தமிழகமே வீதியில் இறங்கி போராட வேண்டும்: கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளை பாலைவனமாக்கும் நோக்கத்தோடு காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராகதொடர்ந்து செயல்படும் கர்நாடக அரசு மேலும் காவிரியின் குறுக்கே புதிதாக இரு அணைகள் கட்ட முயற்சிகள்மேற்கொள்வதை கண்டித்து திருவாரூர் மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் வரும் நவம்பர் 22ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம், சாலை மறியல், இரயில் மறியல் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர்மணி வெளியிட்டுள்ள அறிக்கை:
“ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகம், கர் நாடகம் ஆகிய இரு மாநிலங்களும் ஏற்றுகொள்ளும் வகையில், 1924ஆம் ஆண்டு காவிரி ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி கர்நாடகம் கிருஷ்ண ராஜசாகர் அணையையும், தமிழகம் மேட்டூர் அணையையும் கட்டிக் கொண் டது. 1934இல் மேட்டூர் அணை திறக்கப்பட்டதிலிருந்து 1974 வரை சராசரியாக ஒரு ஆண்டுக்கு 363.5 டி.எம்.சி. நீர் கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வந்தது.
அதன் பின்னர் கர்நாடகம் ஒப்பந்தங்களை மீறி பல்வேறு இடங்களில் புதியதாக அணைகளை கட்டி தண்ணீரை தேக்கி வைத்துக் கொண்டு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை தரமறுத்து வந்தது. இந்த பிரச்சனை குறித்து விவாதிக்க காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அது அளித்த தீர்ப்பின்படி கர்நாடகம், தமிழகத்திற்கு ஆண்டுக்கு 193 டி.எம்.சி. தண்ணீர் கொடுக்க வேண்டுமென தனது இறுதி தீர்ப்பில் கூறியது. ஆனால் கர்நாடக அரசு அந்த தீர்ப்பை கூட ஏற்க மறுத்தது. 2007ஆம் ஆண்டு வெளியான காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிடாமல் 6 ஆண்டுகள்காலதாமதபடுத்தியது. தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த பிறகு தான் 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. அப்போதும், தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய அமைப்புகளானகாவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகிய இரண்டையும் அமைக்காமல் வெறும் ஏட்டு சுரைக்காயாக மத்திய அரசு செயல்பட்டது.
ஒரு கண்ணில் வெண்ணையையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பதுபோல் கர்நாடக அரசு செய்யும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும், இனவெறி செயல்களுக்கும் மத்திய அரசு துணை போகிறது. சட்டத்தை மதித்து நடக்கும் தமிழகத்திற்கு எதிராக தொடர்ந்து செயல்படுகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இடையே ஓடும் கிருஷ்ணா நதி நீர் பிரச்சினையிலும், குஜராத், மத்திய பிரதேசம் நடுவே
ஓடும் நர்மதை ஆற்று பிரச்சினையிலும் நடுவர் மன்ற தீர்ப்பு சரியாக செயல் படுத்தப்படுகிறது. ஆனால் தமிழக கர்நாடக இடையே ஓடும் காவிரி நதி நீர் பிரச்சினையில் காவிரி இறுதி தீர்ப்பை செயல்படுத்த இந்திய கர்நாடக அரசுகள் தொடர்ந்து மறுத்து வருகின்றன.
காவிரி ஆறு டெல்டா பகுதி விவசாயத்திற்கு மட்டுமல்லாது தமிழகத்தில்
12 மாவட்டங்களில் 26 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி செய்து தருகிறது. இராமநாதபுரம், திருப்பூர், வேலூர், சென்னை மாநகரம் உட்பட 17 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இருக்கிறது. வீராணம் ஏரியில் எடுப்பது மட்டுமல்லாது, மேட்டூரிலிருந்து குழாய் மூலம் சென்னைக்கு ஆண்டுக்கு 12 டி.எம்.சி. குடிநீர் எடுக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. காவிரி தமிழகத்தின் தேசிய ஆறாகும்.
இந்த சூழ்நிலையில் கர்நாடக அரசு தமிழக எல்லையான பில்லி, குண்டுலுக்கு மேலே மேகதாட்டு, ராசி மணல் ஆகிய இரு இடங்களில் புதியதாக இரு அணைகளை கட்டி ஆண்டுக்கு 50 டி.எம்.சி. நீரை தேக்கி வைக்க முயற்சியை மேற்கொள்கிறது. இந்த அணைகள் கட்டப்பட்டால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட காவிரியிலிருந்து கிடைக்காது. இது தமிழகத்திற்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும். எனவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு கர்நாடகம் புதிய அணைகளை கட்டுவதை தடுக்க வேண்டும். மேலும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைத்து காவிரி நீரில் தமிழகத்திற்கு உரிய பங்கினை, உரிய நீதியினை வழங்கிட வழி செய்ய வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நவம்பர் 22 அன்று தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு திராவிடர் விடுதலைக்கழகம் தனது முழு ஆதரவையும் அளிப்பதோடு மட்டுமல்லாது போராட்ட களத்தில் இணைந்து போராடும். தமிழகத்தின் தேசிய ஆறான காவிரியில் நமது உரிமையை பாதுகாக்க தமிழகமே வீதிக்கு வந்து போராட வேண்டியது அவசியமானது” என கூறியுள்ளார்.

பெரியார் முழக்கம் 27112014 இதழ்

You may also like...

Leave a Reply