தலையங்கம் – குரு-உத்சவ்

 

‘சமஸ்கிருத வாரத்தை’த் திணித்த பா.ஜ.க. ஆட்சி, இப்போது ஆசிரியர் நாளை ‘குரு-உத்சவ்’ என்று சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்து மனிதவள மேம்பாட்டுத் துறை ஆணையிட்டுள்ளது. இந்தியாவை “சமஸ்கிருத மயமாக்கும்” முயற்சிகள் தீவிரமாகி வருகின்றன. ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆம் நாள் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன் நினைவாக ஆசிரியர் நாளாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் பெயரை இப்போது சமஸ்கிருதமாக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? வாஜ்பாய் ஆட்சி காலத்திலேயே நடந்த “திருப்பணிகள்”தான் இப்போது மீண்டும் தூசி தட்டி அமுல்படுத்துகிறார்கள். அப்போது ‘வித்யா பாரதி’ என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அரசு நிதி உதவியோடு நாடு முழுதும் ‘இந்துத்துவ’ கல்வித் திட்டத்தை செயல்படுத்தியது.

‘வித்யா பாரதி’யின் பொதுச் செயலாளராக இருந்த தீனானாத் பட்டா என்பவர், இந்துத்துவ கலாச்சாரத்தின் அடிப்படையிலான ஒரு மாற்றுக் கல்வி முறையை உருவாக்குவதுதான் இதன் நோக்கம் என்று வெளிப்படையாகவே அறிவித்தார். ‘வித்யாபாரதி’ நாடு முழுதும் நர்சரி முதல் கல்லூரி வரை, 14000 கல்வி நிறுவனங்களை நடத்துவதாக தீனானாத் பட்டா அறிவித்தார். அப்போது மனித வளத் துறை அமைச்சராக முரளி மனோகர் ஜோஷி, கல்வி அமைச்சர்கள் மாநாட்டைக் கூட்டி, ‘இந்துத்துவா’ அடிப்படையிலான பாடத் திட்டங்களை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார். வேத உபநிஷத்துகளை பாடத் திட்டத்தில் இணைத்து மூன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை சமஸ்கிருதத்தை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இப்படிப் பாடத் திட்டங்களை மதவாத சிந்தனைக்குள் கொண்டு வருவதே பா.ஜ.க. ஆட்சியின் கடந்தகால செயல் திட்டம். அப்போது நடந்த கல்வி அமைச்சர் மாநாட்டில் ‘சரசுவதி வந்தனம்’ – சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டதை எதிர்த்து, மாநாட்டிலிருந்து வெளி நடப்பு செய்தார், அன்றைய கல்வி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன், இவையெல்லாம் கடந்தகால வரலாறு. மீண்டும் அவற்றிற்கு உயிரூட்டுவதற்கான முயற்சிகள் தொடங்கியிருக்கின்றன.

வித்யார்த்தி கல்வி நிலையங்களில் மகாபாரதம் எழுதிய ‘வியாசர் ஜெயந்தி’ தான் ஆசிரியர் நாளாக கடைபிடித்தார்கள். குழந்தைகள் நாளை நேரு பிறந்த நாளுக்கு பதிலாக ‘கிருஷ்ண ஜெயந்தி’ அன்று பின்பற்றினார்கள். சமஸ்கிருதம்தான் இந்தியாவின் பொது மொழிக்கு தகுதியானது என்பதே அவர்களின் கொள்கை.

“மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வுதான் இருக்கிறது. சமஸ்கிருதம்தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். சமஸ்கிருதம் அந்த இடத்துக்கு வரும்வரை வசதிக்காக இந்தியை ஆட்சி மொழியாக வைத்திருக்க வேண்டும். ஆங்கிலம் அறவே ஒழிக்கப்பட வேண்டும்” என்று ஆர்.எஸ்.எஸ்.சுக்கு கொள்கைகளை வழங்கிய தனது நூலில் (ரெnஉh டிக வாடிரபாவள) கோல்வால்கர் எழுதியிருக்கிறார்.

அந்த அடிப்படையில்தான் அனைத்துப் பள்ளிகளிலும் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்றும், அதைப் பின்பற்றாத பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு அனுமதியை நீக்க வேண்டும் என்றும் ஓம் பிரகாஷ் என்ற பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர், கடந்த ஜூன் 6, 2014 அன்று நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதா ஒன்றைக் கொண்டு வந்துள்ளார்.

ஆசிரியர்களை மீண்டும் ‘குரு’வாக மாற்றுவதே இப்போது வந்துள்ள  ‘குரு உத்சவ்’ என்ற பெயர் மாற்றத்துக்குப் பின்னால் பதுங்கியிருக்கும் பார்ப்பனிய சூழ்ச்சியாகும். வகுப்பறைகள் மாணவர்களுக்கு தோழமையையும் கருத்துப் பகிர்வுகளையும் தன்னம்பிக்கையையும் உருவாக்குவதாக இருக்க  வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். வேத காலத்தில் நிலவிய “குரு-சிஷ்யன்” என்ற கல்வி முறை “ஆண்டான்-அடிமை” தத்துவத்தில் உருவானது. வேத காலத்தில் கல்வி என்றால் வேதத்தைப் படிப்பது மட்டும்தான்! எனவே ‘குரு சிஷ்ய’ கல்வி அமைப்பில் பார்ப்பனர்கள் மட்டுமே வேதம் படித்தனர். கைவினைஞர்களுக்கும் வணிகர்களுக்கும் தேவையான கலை, அறிவியல் கல்வியை அவரவர்களே பாரம்பர்யமாக மூத்த தலைமுறையினரிட மிருந்து கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.

‘குரு-குல’பார்ப்பனக் கல்வி முறைக்கு மாற்றாக பள்ளிக்கூடம், வகுப்பறை பாட நூல், பாடத் திட்டம், ஆசிரியர்கள், கரும்பலகை என்ற கல்வி அமைப்பு முறையைக் கொண்டு வந்ததே பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மெக்காலேதான்! மாறி வரும் சமூகச் சூழல்களை மாற்றங் களை புறந்தள்ளிவிட்டு, மீண்டும் வேத காலத்துக்குப் போய் ஆசிரியர் களை குருவாக்கும் பார்ப்பனிய சிந்தனைகளை திணிக்க முயல்வதே இத்தகைய பெயர் மாற்றங்களுக்குப் பின்னால் உள்ள சூழ்ச்சி.

உடனடியாக இந்த பெயர் மாற்றத்துக்கு தமிழ்நாட்டில் தலைவர்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்திருப்பது நல்ல நம்பிக்கையை தருகிறது. இந்த உணர்வுகளை ஒருங்கிணைத்து மதவாத அரசியலை முறியடிக்க அணியமாவோம்!

குறிப்பு: இந்தத் தலையங்கம் அச்சேறும்போது ‘குருஉத்சவ்’ என்ற பெயரில் கட்டுரைப் போட்டி மட்டுமே நடத்தப்படும் என்றும், ‘ஆசிரியர் தினம்’ பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்றும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்துள்ளார்.

பெரியார் முழக்கம் 04092014 இதழ்

You may also like...

Leave a Reply