தலையங்கம் மதவெறிக்கு எதிராக விஞ்ஞானிகள் – படைப்பாளிகள்
மோடியின் பார்ப்பனிய மத ஆட்சி -குறுகிய காலத்திலேயே பின்னடைவுகளை சந்திக்கத் தொடங்கி விட்டது. மக்களாட்சி முறையைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் – அந்தக் கட்டமைப்புக்குள் மதவெறி ஆட்சியை நிறுவிட முயலும் முயற்சிகளும் அதற்கான வெறுப்புப் பேச்சுகளும் உலகம் முழுதும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.
சுமார் 40 எழுத்தாளர்கள், கலைஞர்கள் தங்களின் கலை படைப்புகளுக்காக கிடைத்த விருதுகளை திருப்பி அளித்து எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளனர். மதரீதியாக மக்களை பிளவுபடுத்துவது அணுகுண்டைவிட ஆபத்தானது என்று 120 விஞ்ஞானிகள் கூட்டாக கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு மனு அளித்துள்ளனர். உயிரியல் துறையின் தலைசிறந்த விஞ்ஞானியும், ‘தேசிய அறிவு ஆணையம்’ என்ற அமைப்பில் தலைவராக இருந்தவருமான ‘பத்மபூஷன்’ விருது பெற்ற பி.எம். பார்கவா, தனது விருதை திருப்பி அனுப்பிவிட்டார். “இந்த அரசுக்கு சகிப்புத் தன்மை இல்லை; பகுத்தறிவு மீதும் அறிவியல் மீதும் தாக்குதலை நடத்துகிறது” என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
“மதத்தை அரசியலோடு கலக்கக் கூடாது. நம்பிக்கைகள் வீட்டிற்குள்ளேயே இருக்கட்டும். எதைச் சாப்பிட வேண்டும்? எப்படி உடை அணிய வேண்டும்? யாரை காதலிக்க வேண்டும்? என்று எவரும் கற்றுத் தர வேண்டாம்” என்று நெற்றியில் அடித்தாற்போல் கூறியிருக்கிறார், கணித அறிவியல் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி டி.ஆர். கோவிந்தராஜன். இ வர் இணையதளம் வழியாக, மதவெறி சக்திகளுக்கு எதிரான இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார்.
“புனைவுகள் – வெறுப்புகள் – மூடத்தனங்கள் அதிகரித்து வருகின்றன. அறிவியல் – பகுத்தறிவு சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டும். நேரு அதைத்தான் வலியுறுத்தினார். ‘பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை’ புராண காலங்களிலேயே இருந்தது என்பது போன்ற மோடியின் கருத்துகளுக்கு அடிப்படை அறிவியல் சான்றுகள் ஏதும் இல்லை” என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலிருந்தும் ‘இன்போசிஸ்’ போன்ற தொழில் நிறுவனங்களிலிருந்தும் சர்வதேச பொருளாதார ஆய்வு மய்யங்களிலிருந்தும் எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. பார்ப்பனர்களின் பிற்போக்குத்தனமான வேதகால காட்டுமிராண்டி கருத்துகளை பெரியார் இயக்கம் எதிர்த்து, மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியும் போராடியும் வருகிறது. அப்போதெல்லாம் பெரியார் இயக்கங்கள் முன் வைத்த மதவெறி மூடநம்பிக்கை எதிர்ப்பு கருத்துகளுக்கு வெளிப்படையாக அறிவியல் சிந்தனையாளர்கள் படைப் பாளிகள் ஆதரவுக்கரம் நீட்டவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில குரல்கள் மட்டுமே கேட்டன. இப்போது படைப்பாளிகளும் விஞ்ஞானிகளும் சமூக அக்கறை கொண்ட கலைஞர்களும் மதவெறிக்கும் பார்ப்பனியத்தின் பாசி பிடித்த பழமைவாத கருத்துகளுக்கும் பகுத்தறிவாளர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் எதிராக வெளிப்படையாக வெளியே வந்து விட்டார்கள். மதத்தின் அடிப்படையில் சமூகத்தைப் பிளவுபடுத்த மேற்கொண்ட முயற்சிகள் இப்போது மதவெறிக்கு எதிராகவே திரும்பி நிற்கிறது. இது வரவேற்கத்தக்க திருப்பம்.
வரலாறுகளை அகற்றிவிட்டு, புராணங்களின் கற்பனை களையும் அறிவியலை நீக்கிவிட்டு மூடநம்பிக்கைகள் புனைவுகளையும் பேனாவை முடக்கிவிட்டு துப்பாக்கியையும் கடப்பாறைகளையும் தூக்கிக் கொண்டு திரியும் பார்ப்பனியத்தின் கோரமுகத்தை ‘இந்து’ என்று தங்களை கருதிக் கொண்டிருக்கிற பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட மக்கள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட சமூக ‘இந்து’க்கள் சாப்பிடும் மாட்டிறைச்சிக்கு தடை போட்டு பார்ப்பனிய உணவு முறையை – பார்ப்பனரல்லாத ‘இந்து’க்கள் மீது திணிப்பவர்கள் – ‘இந்து’க்களின் பாதுகாவலர்களா? பார்ப்பனிய பாதுகாவலர்களா? என்று கேட்கிறோம். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ‘இந்து’க்களின் சமூக சமத்துவத்தை உறுதி செய்யும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை எதிர்ப்பவர்களும் தலித் குழந்தைகள் எரிக்கப்படுவதை நாய் கல்லடிபடுவதோடு ஒப்பிட்டு திமிராகப் பேசுகிறவர்களும், எப்படி ‘இந்து’க்களின் காவலர்களாக இருக்க முடியும் என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
இப்போது மதவெறியை எதிர்த்து வெளியே வந்திருக்கும் விஞ்ஞானிகள், படைப்பாளிகளிலும்கூட பெரும்பான்மை யோர் ‘இந்து’ என்ற அடையாளத்துக்குள் திணிக்கப் பட்டவர்கள்தான் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
மதவெறி எதிர்ப்பு – பகுத்தறிவு சிந்தனை – ஜாதி எதிர்ப்பு என்ற பெரியாரியம் சுட்டிக்காட்டிய சமூகத் தளங்கள் தான் இன்றைய சமூகத்தின் விவாத மேடையாக மாறி நிற்கிறது. பெரியாரியத்துக்கு பெருகி வரும் ஆதரவுகள் – நம்பிக்கை ஒளியை பிரகாசப்படுத்தியுள்ளன.
இந்த களத்தை மேலும் விரிவுபடுத்தி பெரியாரியலை முன்னெடுக்க தயாராவோம்!
பெரியார் முழக்கம் 04112015 இதழ்