‘ஆனந்த விகடனு’க்கு பெரியார் பேட்டி: “ஆட்சி அமைக்க என்னை அழைத்தார்கள்! ”

மறைந்த பத்திரிகையாளர் சாவி, தந்தை பெரியாரை திருச்சி பெரியார் மாளிகையில் சந்தித்து எடுத்த இந்தப் பேட்டி, 4.4.1965 ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளி வந்துள்ளது. அப்பேட்டியை மீண்டும் 29.1.2014இல் அந்த ஏடு மறு வெளியீடு செய்துள்ளது. பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய அந்த சந்திப்பை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. (சென்ற இதழ் தொடர்ச்சி)

“ராஜாஜி உங்களை ஜெயில்ல போட்டாரே, அது எப்போ?”

“முப்பத்தேழுலே நடந்த எலக்ஷன்ல ஜஸ்டிஸ் கட்சி தோத்தது. அப்ப அந்தக் கட்சிக்கு பொப்பிலி ராஜாதான் தலைவர். பொப்பிலி, பெத்தாபுரம் எல்லாரும் தோத்துப் போனாங்க. காங்கிரஸ் ஜெயிச்சுட்டுது. ராஜாஜி, மந்தரிசபை அமைச்சாரு. அப்பத்தான் கட்டாய இந்தியைக் கொண்டு வந்தாங்க. நான் எதிர்த்தேன். புரோகிபிஷனைக் காரணம் காட்டி விற்பனை வரிபோட்டாங்க. என்னை ஜெயில்ல போட்டாங்க. ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்களைப் பழிவாங்க ஆரம்பிச்சாங்க. நான் ஜெயிலுக்குள்ளே இருக்கிறபோதே பொப்பிலி எல்லாம் சேர்ந்து, என்னை ஐஸ்டிஸ் கட்சித் தலைவனாக்கிட்டாங்க.”

“அப்புறம் எப்ப ஜெயில்லருந்து வந்தீங்க?”

“அஞ்சாறு மாசத்துக்கெல்லாம் என்னை விட்டுட்டாங்க. ஆனா, இந்தியை மட்டும் விடாம வெச்சுட்டிருந்தாங்க…..”

“எப்பத்தான் விட்டாங்க?”

“இதுக்குள்ளே காங்கிரசிலேயே தகராறு. ‘பட்டாபி சீதாரமய்யா தோல்வி, என் தோல்வினு காந்தி சொன்னாரே ஞாபகம் இருக்குதா? அந்தத் தகராறுதான். தலைவர் தேர்தல்ல பட்டாபி தோத் துட்டாரு… சுபாஷ் போஸ் ஜெயிச்சிட்டாரு. போஸ் கட்சியைச் சேர்ந்தவங்க, ‘காங்கிரசுக்குப் பதவி மோகம்’னு சொன்னாங்க. கொஞ்ச நாளைக்கெல் லாம் ராஜாஜி மந்திரிசபை ராஜினாமா செய்ய வேண்டி வந்துட்டுது. அந்தச் சமயத்திலே கவர்னர் என்னைக் கூப்பிட்டு ‘மந்திரிசபை’ அமைக்கச் சொன்னாரு.

சீமையிலே இப்படித்தான் வழக்கம்; ஒரு கட்சி விலகிட்டுதுனா, அடுத்த பெரிய கட்சியைக் கூப்பிட்டு மந்திரிசபை அமைக்கச் சொல்லு வாங்க. இப்ப காங்கிரசுக்கு அடுத்த பெரிய கட்சி, ஜஸ்டிஸ் கட்சி தான், ‘நீ என்ன சொல்றே’னாரு. நான் ‘மாட்டேன்’ னேன். மந்திரிசபை அமைச்சா, அதோடு ஜஸ்டிஸ் கட்சியே போயிடும். வேண்டாம்னு வந்துட்டேன். சண்முகம் செட்டி, குமாரராஜா, பன்னீர்செல்வம் எல்லாரையுமே கூப்பிட்டுப் பேசினாரு கவர்னர்.”

“அவங்களெல்லாம் என்ன சொன்னாங்க?”

“அவங்கள்ல சில பேருக்கு ஆசைதான். எங்களுக்குள்ளே விவாதம் நடந்தது. ‘ஜஸ்டிஸ் கட்சிக்கு நோ எலக்ஷன்; நோ மந்திரிசபை…. இதுதான் என் கொள்கை’ன்னேன். எல்லோரும் அப்போஸ் பண்ணாங்க. என் மேலே ரொம்பக் கோபம் அவங்களுக்கு. சௌந்தர பாண்டியன்கூட ‘ஏன் இப்படி முரட்டுத்தனமா இருக்கீங்க?’னு கேட்டாரு.”

“நீங்க என்ன சொன்னீங்க?”

“‘என்னைத் தலைவனாப் போட்டதுக்கு இதுதான் பலன்னு’ சொன்னேன். ‘வேணும்னா என்னைத் தோற்கடிச்சுடுங்க’ன்னேன். பன்னீர் செல்வத்துக்கு மட்டும் என்னை விட்டுடறதுல இஷ்டமில்லே. அவருக்குத் தெரியும், நான் இல்லாட்டி கட்சி ரொம்ப வீக்காப் போயிடும்னு…”

“உங்களை மந்திரிசபை அமைக்கச் சொன்னாரே, அவர் பேரு என்ன?”

“காளை மாடு, விவசாயம்னு சொல்லிக்கிட் டிருப்பாரே, ஒருத்தர்… யாரது?”

“லின்லித்கோ…”

“ஆ. லின்லித்கோ! அவனேதான். கிண்டிக்குக் கூப்பிட்டுப் பேசினான். நான் சென்னேன், ‘மந்திரி சபை அமைச்சா யார் யாருக்கு மந்திரிங்கிறதுலேயே எங்களுக்குள்ளே சண்டை வந்துடும். கொள்கை அடிபட்டுப் போகும். ‘முடியாது’ன்னேன். அப்புறம் வேவல்கூட என்னைக் கூப்பிட்டு சம்மதிக்கச் சொன்னாரு. ‘முடியவே முடியாது’ன்னுட்டு வந்துட்டேன்.  அப்புறம் தான் ரொம்ப முக்கியமான சங்கதி ஒண்ணு நடந்தது. கவனிக்கணும்.”

“சொல்லுங்க…”

“ராஜாஜி வந்தாரு. மெதுவா எங்கிட்டே வந்து, ‘நாயக்கரே, நல்ல சமயம்… கஷ்டப்பட்டுப் பிடிச்ச சர்க்காரை வெள்ளைக்காரன்கிட்டே விட்டுடக் கூடாது. நீங்க மந்திரிசபையை ஒப்புக்கணும். நிலைச்சு நிக்கும்; கவலைப்படாதீங்க. வேணுமானா காந்தி, காங்கிரஸ் எல்லார்கிட்டேயும் நான் சம்மதம் வாங்கித் தர்றேன். இதிலே உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா, நீங்களும் இஷ்டப்பட்டா, என்னையும் ஒரு மந்திரியாச் சேர்த்துக்குங்க; நானும் உங்ககூட இருந்து பக்க பலமா வேலை செய்யறேன்னாரு…”

“ராஜாஜிக்கு என்ன பதில் சொன்னீங்க?”

“நீங்க சொல்றதுலே சந்தோஷம்தான். ஆனா, யார் யாரோ சொல்லியும் மாட்டேன்னுட்டேன். இப்ப நீங்க சொல்றதுனாலே யோசனை பண்ணிப் பாக்கறேன்னேன். ‘நல்லா யோசிச்சுச் சொல்லுங்கனு’ போயிட்டாரு. எங்க ஆளுங்களோட யோசிச்சேன். முதல்ல மந்திரிசபையை ஒப்புக்கணும்னு சொன்ன ஆசாமிங்க எல்லாம், ராஜாஜி மந்திரிசபைக்கு வர்றார்னு சொன்னதும், ‘வேணவே வேணாம்’னுட் டாங்க.”

“அப்புறம் என்ன நடந்தது?”

“ஒரு வேடிக்கை நடந்தது. என்ன வேடிக்கைனா… வாருக்கு (யுத்தம்) அப்புறம் வெள்ளைக்காரன் பவரை ஹேண்ட்ஓவர் பண்றப்போ, நான் போய்க் கேட்டேன்… ‘நாங்க பாடுபட்டோம், சர்க்காரோடு ஒத்துழைச்சோம். கடைசியிலே பவரை அவங்க கையிலே கொடுக்கறது என்ன நியாயம்?’னு கேட்டேன்.

“வெள்ளைக்காரன் அதுக்கு ‘வி நோ ஹிண்டு அண்டு முஸ்லிம் ஒன்லி. ரெண்டே ரெண்டு பார்ட்டிதான் எங்களுக்குத் தெரியும். பிராமின், நான் பிராமின் இந்த விஷயமெல்லாம் தெரியாது(‘னு பதில் சொல்லிட்டான்.”

“அதோடு நீங்க திரும்பி வந்துட்டீங்களா?”

“வருவேனா? ‘இதுதான் வெள்ளைக்காரன் யோக்கியதையா?’னு கேட்டேன்.”

“என்ன பதில் சொன்னாங்க?”

“என்னத்தைச் சொல்லுவான். சிரிச்சு மழுப்பிட் டான். சரி… இத்தோட விட்டுடக்கூடாதுன்னு ஜின்னாவைப் பார்த்துப் பேசறதுக்காக, பம்பாய் போயிருந்தேன். அவரைக் கண்டு எல்லா சங்கதியை யும் பேசினேன். நான் சொல்றதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கிட்டு, ‘சரி, நான் மெட்ராஸுக்கு வர்றப்போ முஸ்லிமும் ஜஸ்டிஸ் பார்ட்டியும் சேர்ந்து சப்ஜெக்ட்டை ஒண்ணா டேபிள் பண்ணுவோம்’னு சொன்னாரு.”

“அப்புறம் ஜின்னா வந்தாரா?”

“வந்தாரு. ‘உன் கட்சி விஷயம் என்னா?’னு கேட்டாரு. ‘என் கட்சியிலே முக்கியமா ஒன்பது பேரு இருக்கோம். ஒன்பது பேரும் ஒன்பது ஜாதி. ஆனா, ஆல் நான் பிராமின்ஸ்’னேன். ஜின்னா சிரிச்சுட்டு, ‘என்ன நினைச்சு இப்படி ஒரு கட்சி வெச்சிருக்கீங்க? நல்ல கட்டில்தான். ஆனா, கால் இல்லாக் கட்டிலாயிருக்குதே’ன்னு கேலி பண்ணாரு.

‘என்ன செய்யறது? எப்படியோ இதைத்தான் ஒரு கட்டிலா வெச்சு ஓட்டிட்டிருக்கோம்’னேன்.”

“ரெண்டு பேரும் சேர்ந்து டேபிள் பண்ணலாம்னு சொன்ன விஷயம் என்ன ஆச்சு?”

“‘உன் பிரச்சினையைத் தனியாவே எடுத்துச் சொல்லிக்கோ’னுட்டுப் போயிட்டாரு. ‘அப்பத்தான் ராமசாமி மூஞ்சியிலே ஜின்னா கரியைப் பூசிட்டார்’னு பத்திரிகையிலே எழுதினாங்க.”

“52-லே ஜெனரல் எலக்ஷன் நடந்ததே, அப்ப நீங்க யாரை ஆதரிச்சீங்க?”

“காங்கிரஸை எதிர்த்துப் பிரச்சாரம் செஞ்சேன். காங்கிரஸ் தோத்தது. நல்லபடியாத் தோத்தது. மந்திரிசபை அமைக்கிறாப்ல எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கலே. மறுபடியும் ராஜாஜி வந்தாரு. படையாச்சி, கவுண்டரு எல்லாரையும் சரிபண்ணிக்கிட்டு மந்திரிசபை அமைச்சாரு. குலக் கல்வி, ஒரு நேரப் படிப்புன்னாரு. 6000 பள்ளிக் கூடங்களை மூடினாரு. எதிர்த்தோம்… அதுக்குப் பின்னாலதான் காமராஜ் முதல் மந்திரியா வந்தாரு. தமிழர் நலனுக்காக நல்ல காரியமெல்லாம் செய்ய ஆரம்பிச்சாரு. அதிலிருந்து வெளிப்படையா நான் காங்கிரசை ஆதரிக்க ஆரம்பிச்சுட்டேன்.”

“காமராஜை நீங்க எப்பவாவது சந்திச்சிருக் கீங்களா?”

“எப்பவோ ஒரு சமயம் நான் ஜெனரல் ஆஸ்பத்திரியில படுத்திருக்கப்போ, அவராகவே வந்து, ‘எப்படி இருக்கீங்க?’னு விசாரிச்சாரு. அந்த நேரம் சி.சுப்பிரமணியமும் அதே ஆஸ்பத்திரியிலே படுத்திருந்தாரு. அவரைப் பார்க்க வந்தப்போ, என்னையும் பார்த்துட்டுப் போனாரு.”

“அந்தக் காலத்துலே இந்தியை எதிர்த்துப் போராட்டமெல்லாம் நடத்தினீங்களே, இப்ப ஏன் சும்மா இருக்கீங்க?”

காதை வலது கையால் அணைத்து நான் சொல்வதை உற்றுக் கொண்ட பெரியார் கோபத்தை வெளியே காட்டாமல், “அப்படியா? மன்னிக்கணும்; இப்ப இந்தி எங்கு இருக்குது? தெரியாமத்தான் கேக்கறேன். சொல்லுங்கோ?”

“இந்திதான் ஆட்சி மொழியா வந்துட்டுதே…”

“எங்கே வந்துட்டுது? உனக்குத்தான் இங்கிலிஷ் இருக்குதே. இந்தியா ஒண்ணா இருக்கணும்னா, பொதுவா ஒரு ஆட்சி மொழி வேணும்தானே? இந்திக்காரன் உங்களை மாதிரி இங்கிலீஷை நினைக்கலையே. இங்கிலீஷை அவமானம்னு நினைக்கிறானே. தமிழ்நாட்டுக்காரன் சொல்றபடி, இந்தியா நடக்குமா? அது ஜனநாயகமா?”

“ஒரு நாளைக்கு இல்லாவிட்டால் ஒரு நாளைக்கு இந்தி வரத்தானே போகுது?”

“நல்லாருக்குதே! ஒரு நாளைக்கு இல்லாட்டி ஒரு நாளைக்குச் சாவு வரத்தானே போகுதுன்னு எவனாவது இப்பவே போய் கிணத்துலே விழுவானா? அப்படியே ஒரு வேளை இந்தி வந்ததுன்னா, உயிரோடு இருந்தா… அதை எதிர்க்கப் போறவன் நான் தானே?”

“மத்திய சர்க்கார்ல உத்தியோகம் கிடைக்கிறதுக்கு இந்தி அவசியம் இல்லேன்னாலும், உத்தியோகத் துலே சேர்ந்தப்புறம் படிக்கச் சொல்றாங்களே…”

“படிச்சிட்டுப் போயேன். தாசில்தார் உத்தியோகம் படிக்கப் போறவங்க, ‘சர்வே’ படிப்பு படிக்கிற தில்லையா? அந்த மாதிரி இந்தியைப் படிச்சுக்கிறது. உனக்கு இதிலே என்ன கஷ்டம்? இல்லே நஷ்டம்? அவன் நேரத்துல அவன் கொடுக்கிற சம்பளத்துல, நீ இன்னொரு மொழியைப் படிச்சுத் தெரிஞ்சுக்கப் போறே… இது லாபம் தானே?”

(நிறைவு)

பெரியார் முழக்கம் 27022014 இதழ்

You may also like...