சிரிக்க வைத்தார்: மக்களை சிந்திக்க வைத்தார் என்.எஸ்.கிருஷ்ணன்

திரையுலகில் ஜாதி ஒழிப்புப் பகுத்தறிவுக் கருத்து களைப் பரப்புவதையே இலட் சியமாகக் கொண்டவர் கலை வாணர் என்.எஸ்.கிருஷ்ணன். ‘நாகரிகக் கோமாளி’ என்று தன்னை அவர் அடை யாளப் படுத்தினாலும் அதற்குள்ளே சமுதாய மறுமலர்ச்சிக்கான சிந்தனைகளே மணம் வீசிப் பரப்பின. அவரது திரைப்படத் திலிருந்து சில காட்சிகள்.
காமெடியன் என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கோமாளி என்று பொருள். கலைவாணரும் தன்னை ஒரு கோமாளி என்றே ஒப்புக் கொண்டார். ஆனால் அவர் வெறும் கோமாளி என்று தன்னைக் கூறி கொள்ளவில்லை., “சிரிக்க வைத்து நாட்டைச் செழிக்க வைக்கும் சீர்திருத்தக் கோமாளி வந்தேனய்யா” என்று கூறிக் கொண்டார். இது அவர் ‘நல்ல தம்பி’ என்ற திரைப்படத்தில் கோமாளி வேடம் புனைந்து நடிக்கும்போது பாடுகின்ற பாடல். ஆம்! அவர் ஒரு சீர்திருத்தக் கோமாளிதான்.
பழைமைக் கொள்கைகள், கடவுள், மதம் பற்றிய கண்மூடிப் பழக்க வழக்கங்கள் ஆகியன குறித்துப் பகுத்தறிவு இயக்கத்தினர் மேடையேறிப் பேசிய நேரத்தில் பக்த கோடிகள் சீற்றம் கொண்டு பலத்த எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்த காலம் அது. ஆனால் கலைவாணர் அதே கருத்துக்களை நயம்பட கலைத் துறை மூலம் புகுத்தியபோது கண்டவர்களும் கேட்டவர்களும் சீற்றம் கொள்ளவில்லை; ஆனால் சிரித்து மகிழ்ந்தார்கள். கல்லால் அடிக்கவில்லை; ஆனால் கை தட்டிக் களிப்பினைப் புலப்படுத்தினார்கள். பிள்ளையாருக்கு ஆனைமுகம் ஏன்? பானை வயிறு ஏன்? அவருக்குக் கொழுக் கட்டை படைப்பதேன்? கலைமகள் பிரம்மாவின் நாவில் குடியிருப்பதாகக் கூறுவது அறிவுக்குப் பொருந்துமா? – இவையெல்லாம் பகுத்தறிவு கேள்விக் கணைகள். இப்படிக் கேட்டதற்காகப் பக்திமான்கள் பகுத்தறிவு இயக்கத்தவரைப் பார்த்து, “கடவுளை நிந்திக்கும் கயவர்கள் இவர்கள்” என்று கண்டனம் தெரிவித்த துண்டு. ஆனால் இதே கருத்துக்களைக் கலைவாணர் திரைப்படக் காட்சியில் நடித்துக் கொண்டே புகுத்தினார். ஒரு படத்தில் டேப் அடித்துக் கொண்டு லாவணி பாடும் காட்சியொன்றினை அமைத்து அதில்,
“அந்தக் கணபதிக்குத் தொந்தி
பெருத்த விதம்
என்ன? என்ன?”
என்று வினா தொடுத்தார். இந்த வினாவிற்கு விடையாக அமைந்த பாடல் என்ன தெரியுமா?
“அந்தக் கணபதிக்குத் தொந்தி பெருத்தவிதம்
கொழுக்கட்டைத் தின்னதினால்
அண்ணே அண்ணே”
என்பதாகும்.
அடுத்து, கலைமகள் எங்கே இருக் கிறாள் என்று வினா தொடுக்க, எதிர்கட்சிக் காரர் “அவள் பிரம்மாவின் நாக்கில் குடியிருக்கிறாள்” என்று கூறுகிறார். உடனே கலைவாணர்,
“மறையவன் நாவில் அவள்
உறைவது நிஜமானால்
மலஜலம் கழிப்பது எங்கே? எங்கே?”
என்று பாடுகிறார்.
ஞானசம்பந்தர் சமயகுரவர்களிலே ஒருவர். பார்வதி தேவியார் தந்த ஞானப் பால் உண்டதால் பச்சிளம் வயதிலேயே பாடல் எழுதும் ஆற்றல் பெற்று நாளும் இன்னிசை யால் சைவத் தமிழ் பரப்பினார் ஞான சம்பந்தர் என்று கூறப் படுகிறது. இவர் விளைத்த அற்புதங்களிலே ஒன்றாகக் கூறப்படுவது இவர் எலும் புருவைப் பெண்ணாக்கியது பற்றிய கதையாகும். இக்கதை “பூம்பாவை” என்ற பெயரில் படமாக்கப்பட்டது. இதில் கலைவாணர் ஞானசம்பந்தர் பற்றிக் கூறப்படும் மகத்துவத்தின் அடிப் படையையே ஆட்டங்காண வைக் கின்றார், அப்படத்தில் வரும் ஒரு காட்சி மூலம். நண்பர்கள் சிலர் கலைவாணரிடம் வந்து ஞானசம்பந்தரைத் தரிசிக்க அழைக் கிறார்கள். கலைவாணர் ஞானசம்பந்தர் யார்? அவரை ஏன் தரிசிக்க வேண்டும்? என்று கேட்கிறார். நண்பர்கள் ஞான சம்பந்தர் ஆண்டவனின் அருட் பிரசாதம் பெற்ற அடியவர் என்றும், அதனால் பச்சிளம் வயதில் பாடல் எழுதும் ஆற்றல் பெற்று “தோடுடைய செவியன்” என்று தொடங்கும் பாடலைப் பாடினார் என்றும் கூறுகிறார்கள். கலைவாணரோ, பச்சிளம் சிறுவன் இத்தகைய பழுதற்றப் பாடலைப் பாடியிருக்க முடியாது. எனவே அந்த மகத்துவத்தை நம்ப முடியாது என்று கூறுகிறார். நண்பர்கள் விட்ட பாடில்லை. “அவராகப் பாட முடியாதுதான். ஆனால் பார்வதி தந்த பால் குடித்ததால்தானே பாடினார்” என்று மறுப்பு கூறுகிறார்கள். இதுவும் ஒரு கட்டுக் கதை என்பதை எள்ளி நகையாடும் முறையில் “பார்வதியா? யாரு, நம்ம பக்கத்து வீட்டிலே இருக்காங்களே ஒரு பார்வதி அந்த அம்மாவா பால் கொடுத்தாங்க?” என்று கேட்கிறார். நண்பர்களோ தாங்கள் கூறும் பார்வதி பரமசிவக் கடவுளின் மனைவி என்று கூறுகிறார்கள். உடனே கலைவாணர், “இதோ பாருங்க, சின்னப் பையன் இவ்வளவு நல்ல பாடலை சொந்தமாப் பாடியிருப்பாங்கறதை முதல்லே நான் நம்பத் தயாராயில்லே. பாடினது தான் பாடினான், அதென்ன தோடுடைய செவியன்? சிவபெருமான் செவிக்குத் தோடு எதற்கு? அப்படிப்பட்ட ஞான சம்பந்தனை நான் பார்க்க வர முடியாது என்று மறுத்து விடுகிறார். இந்த உரையாடலிலே உள்ள கிண்டலும் கேலியும் ரசிகர்களைச் சிரிக்கத் தூண்டுவதோடு புராணக் கதைகளில் உள்ளவை எத்துணைப் பொருந்தாக் கூற்றுகள் என்பதையும் உணர்த்துகின்றன.
‘சாலிவாகனன்’ என்ற படத்தில் நகைச்சுவை மன்னர் சாதி ஒழிப்புக் கொள்கையைப் பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் மிகப் பக்குவமான காட்சி மூலம் சித்திரித்துக் காட்டினார்.
கலைவாணர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். அவருடைய தாயாரோ மிகவும் வைதீக உணர்வு உள்ளவர். எனவே கலப்புத் திருமணத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனாலும் கலைவாணர் அந்தப் பெண்ணை மனைவியாக ஏற்றுக் கொண்டு தன் வீட்டிற்கே அழைத்து வந்து குடும்பம் நடத்துகின்றார். அன்று முதல் கலைவாணரின் தாய் அதே வீட்டில் தனக்கு மட்டும் தனியே உணவு தயாரித்து உண்டு தனிக் குடித்தனம் செய்து வருகிறார். ஒரு நாள் கலைவாணர் தன் தாயிடம் வந்து, “அம்மா, இப்படி வாயேன்” என்று அழைக்கிறார். தாயார் வரத் தயங்கியதும் அவரே தாயின் கைகளைப் பற்றி சமையல் அறைக்குள் கூட்டி வந்து விடுகிறார். அங்கே அந்தத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் அம்மியின் மிளகாய் அரைத்துக் கொண்டிருக்கும் போதே கலைவாணர் அம்மியில் அரைபட்ட மிளகாய்ச் சாந்தில் ஒரு பட்டாணி அளவினை எடுத்துத் தாயாரை வாய் திறக்குமாறு சொல்லி அந்த அம்மையாரின் வாயினுள் போடுகிறார். அவருடைய தாயார் “காரமான மிளகாய்ச் சாந்தை ஏண்டா என் வாயில் போட்டே” என்று கேட்கிறார். “ஆம்மா, அவள் தாழ்ந்த ஜாதிப் பெண் என்று சொல்லித் தனியே ஒதுக்கி வீட்டீர்களே! அவள் தொட்ட மிளகாய் காரம் இல்லாமல் ஆகிவிட்டதா! அவள் தொட்ட மிளகாய் உறைக்கின்றது. அவள் தொட்ட புளி புளிப்பாக இருக்கின்றது. அவள் தொட்ட உப்பு கரிக்கின்றது. அதிலெல்லாம் ஒரு மாறுதலையும் காண முடிய வில்லையே. பிறகு ஏனம்மா தாழந்த ஜாதி என்று ஒதுக்க வேண்டும்?” என்று கேட்கிறார். ஜாதிப் பிரிவு அடிப்படையில் உயர்வு தாழ்வு என்ற பேத நிலை கூடாது என்ற கருத்தினைக் கலைவாணர் எவ்வளவு எளிமையாக்கிக் காட்டியுள்ளார் பார்த்தீர்களா?
(ஆகஸ்டு 30 கலைவாணர் நினைவு நாள். கட்டுரை:மறைந்த பகுத்தறிவுப் பேராசிரியர் ஜி.கலியராஜுலு – ‘உண்மை’ 14.8.1972 இதழில் எழுதியது)

பெரியார் முழக்கம் 04092014 இதழ்

You may also like...

Leave a Reply