வினாக்கள்… விடைகள்…!

குஜராத் கலவரத்துக்காக எங்கள் கட்சித் தலைவர் ராஜ்நாத் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை.  – பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்  முக்தார் அப்பாஸ்

அப்படி மன்னிப்புக் கேட்டிருந்தால் அதற்காக மன்னிச்சுடுங்கன்னு சொல்ல வர்ரீங்களா…

அந்தமான் சிறையிலே அடைக்கப்பட்டிருந்தார் பகத்சிங்.  – அகமதாபாத்தில் மோடி பேச்சு

மோடிஜி! பகத்சிங் இருந்தது டில்லி சிறை; அந்தமான் சிறையிலிருந்தது வி.டி. சவர்க்கார். அட விடுங்கப்பா; ஏதோ ஒரு சிறை என்கிறீர்களா? ஹி…. ஹி….

அய்.நா.வில் அமெரிக்க தீர்மானத்தை பார்ப்பன ஊடகங்களும் ‘அசல் திராவிடர் இயக்கமும்’ சேர்ந்து ஆதரிக்கின்றன.  – ‘தமிழ்நெட்’ இணையதளம்

இப்படியும் கூறலாமே! அதே தீர்மானத்தை ‘அசல் தமிழ் ஈழம்’ பேசும் ‘தமிழ் நெட்’டும் இராஜபக்சேவுடன் சேர்ந்து கொண்டு எதிர்க்கிறது.

சென்னை ‘பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு’ அரசு மருத்துவமனiயிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் மாற்றப்பட்டு விட்டதால் அரசு மருத்துவமனைகளில் பணிகள் பாதிப்பு.  ‘தினமலர்’ செய்தி

விடுங்க…. பொது மருத்துவமனைகளை எல்லாம் அரசு செயலகங்களாக மாற்றி அம்மா அறிவிச்சுடுவாங்க!

ஓட்டுக்கு பணம் வாங்காதீர் என்று ‘சத்யாகிரகா’ அமைப்பினர், பொது மக்கள் காலில் விழுந்து பிரச்சாரம்.  – செய்தி

18 வயதுக்குக் கீழே உள்ளவர்களாகப் பார்த்து காலில் விழுவார்களானால் கோரிக்கை முழு வெற்றி. இது உறுதி!

அரசியல் கட்சியின் நிர்வாகிகள் நடத்தும் கூட்டத்தில் பிரியாணி வழங்குவது தவறு இல்லை; அது தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.  – தேர்தல் ஆணையம்

சிக்கன் பிரியாணியா? மட்டன் பிரியாணியா? அல்லது வெறும் முட்டை பிரியாணியா என்று தெளிவுபடுத்தி விட்டால் அதிகாரிகள் பிரியாணியை சோதனை போடும் வேலையைக் குறைக்கலாமே!

தேர்தல் முடியும் வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அலுவலகங்கள் இயங்கக் கூடாது.  – தேர்தல் ஆணையம்

இது தேர்தல் முடியும் வரை தான். தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றமே இயங்காமல், வெற்றி பெற்ற வர்களே கவனமாக பார்த்துக் கொள்வார்கள். கவலை வேண்டாம்!

தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது ‘இறைவன்’ கொடுத்த வரம்.   – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்

அப்படியே போட்டியிடுவதற்கு வேட்பாளர்களையும் ‘வரமாக’ தரச் சொல்லுங்க! ஆட்களே கிடைக்க மாட்டேங்குது!

ஜி.கே.வாசன், தங்கபாலு, ஜெயந்தி, ப.சிதம்பரம் தேர்தலில் போட்டியிட மறுப்பு.    – செய்தி

கடைசியில் ‘போட்டியிடாத வேட்பாளர்கள்’ பட்டியலைத்தான் காங்கிரஸ் அறிவிக்கும் போல!

மோடி பிரதமராக – காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் “வேத விற்பன்னர்கள்” நடத்திய சிறப்பு யாகத்தில் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் முரளிதர் ராவ் பங்கேற்றார்.   – ‘தினமலர்’ செய்தி

யாகத்துக்கான செலவை யார் கணக்கில் எழுதுவது? மோடி கணக்கிலா? ‘காமாட்சியம்மன்’ கணக்கிலா?

காங்கிரசிலிருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கியுள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் கட்சியின் தேர்தல் சின்னம் செருப்பு. – செய்தி

வாக்குச் சாவடிக்கு செருப்பு போட்டு வருவதற்கு ஆணையம் தடை விதிக்குமே! அது பரவாயில்லை, ‘சட்டை’ அல்லது ‘பேண்ட்’டை தேர்தல் சின்னமாக்கி விடாதீர்களய்யா!

பெரியார் முழக்கம் 20032014 இதழ்

You may also like...