புற்று நோய்க்கு காரணமாகும் அணுக் கதிர் வீச்சு

அணுமின் திட்டங்கள் பாதுகாப்பானவை என்கிறார்கள் அணுசக்தி விஞ்ஞானிகள். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மக்கள் எதிர்ப்பையும் மீறி 4 பிரிவுகளைக் கொண்டு வந்துவிட்டார்கள். முதல் இரண்டு பிரிவுகளை ஆதரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தி.மு.க போன்ற கட்சிகளே, 3 மற்றும் 4ஆவது பிரிவுகளை எதிர்க்கத் தொடங்கியிருக் கிறார்கள். இப்போது அணுக்கதிர் வீச்சால் புற்று நோய் பரவி வருகிறது என்ற அதிர்ச்சியளிக்கக் கூடிய செய்திகள் வந்துள்ளன.
1995 ஆம் ஆண்டிலிருந்து 2014 மார்ச் வரை, 19 அணுசக்தி மய்யங்களில் பணியாற்றும் 3887 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் 70 சதவீத மரணங் களுக்கு காரணம் புற்றுநோய். அதாவது 2600 பேர் புற்றுநோய்க்கு உள்ளாகி மரணமடைந்துள்ளனர். இதே காலகட்டத்தில் இந்த நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்ட விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் எண்ணிக்கை 258. ஒவ்வொரு மாதமும் சராசரியாக ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். புற்றுநோய் அல்லாமல், இருதயம் பாதிப்பு, ஒரே நேரத்தில் பல உறுப்புகள் பாதிப்பு, ஆஸ்த்மா, காசநோய், கல்லீரல் வீக்கம், மன அழுத்தம் காரணமாக இந்த 19 அணுசக்தி மய்யங்களில் 1287 பேர் மரணமடைந்துள்ளனர். சேட்டன் கோத்தாரி என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இத் தகவலைப் பெற் றுள்ளார். தகவல்தந்துள்ளது பாபா அணு ஆராய்ச்சி மய்யம் என்பது குறிப்பிடத் தக்கதாகும். இந்த மய்யம் அணுசக்தித் துறையின் கீழ் இயங்குவதாகும்.

திருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனை
திருமணம் நிச்சயிக்கப்படும்போது ஒரே ஜாதிக்குள் மணமகனையோ மணமகளையோ தேடத் தொடங்குகிறார்கள். ஒரே ஜாதிக்குள் தான் தேட வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. அடுத்து ‘மணப் பொருத்தம்’ சரியாக இருக்கிறதா என்று ‘ஜாதகம்’ பார்க்கிறார்கள். இப்படி ஜாதகம் பார்த்தாக வேண்டும் என்ற சட்டம் ஏதுமில்லை. ஒரு சோதிடர் நினைத்தால் எந்த திருமணத்தையும் அனுமதிக்கவும் முடியும்; தடைபடுத்தவும் முடியும். இதற்கான காரணங்களை அறிவியல் ரிதியாக விளக்க வேண்டும் என்று சோதிடர்களை நாடுவோர் அவர் களிடம் கேட்பதும் இல்லை. ஆனால், வரதட்சணை வாங்கக் கூடாது என்று தடைச் சட்டம் இருக்கிறது. சட்டத்தை பலரும் மதிப்பது இல்லை. வாங்குவதும் கொடுப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் திருமணம் சட்டப்படி குற்றம். ஆனால் சட்டத்தை மீறி குழந்தைகளுக்கு திருமணம் நடக்கிறது. அண்மையில் சமூக நலத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள், காவல்துறை உதவியுடன் சிவகங்கை மாவட்டத்தில் 6 குழந்தைத் திருமணங் களையும், இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு குழந்தைத் திருமணத்தையும் தடுத்து நிறுத்தியுள்ளதாக செப்டம்பர் 8 ஆம் தேதி ஏடுகளில் செய்திகள் வந்துள்ளன.
குழந்தைத் திருமணங்கள் இரத்த உறவுகளுக் குள்ளே நடக்கின்றன. மணப்பெண்ணை விட மணமகன் 10 ஆண்டுக்கு மேல் வயது வித்தியாசம் இருக்கிறது. குழந்தைத் திருமணம் பார்ப்பனிய மதத்தின் வழியாக சமூகத்தில் திணித்த ஒரு பழக்கம். இதைத் தடுக்க பிரிட்டிஷ் காலத்தில் சட்டங்கள் வந்தபோது கடுமையாக எதிர்த்தவர்கள் பார்ப் பனர்கள்தான். ஆனால், பார்ப்பனர்கள் குழந்தைத் திருமணங்களை அதன் பாதிப்புகள் கருதி கைவிட்டா லும் பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட மக்கள்தான் ‘ஜாதிப் பழக்கமாக்கி’க் கொண்டு பின்பற்றுகிறார்கள். ஆனால் இந்தத் திருமணங்கள் வேண்டாம் என்று பார்ப்பனர்கள் கூறுவதே இல்லை. இதுதான் பார்ப்பனர்களின்

“சமூக நேர்மை”.
திருமணங்கள் குறித்து பல முற்போக்கான கருத்துகளையும் தீர்ப்புகளையும் நீதிமன்றங்கள் முன் வைத்து வருகின்றன. ஜாதி ஒழிப்புக்கு வெவ்வேறு ஜாதிகளுக்கிடையிலான திருமணங்கள் நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. இப்போது திருமணத்துக்கு முன், மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனையைக் கட்டாயமாக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நீதிபதி கிருபாகரன் ஒரு முற்போக்கான கருத்தை முன் வைத்திருக்கிறார். மணமுறிவுக்கான காரணங்களில், “ஆண்மையின்மை” என்ற பிரச்சினை அதிகம் இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, திருமண சட்டங்களில் மருத்துவப் பரிசோதனையை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என்று மத்திய மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு தாக்கீது பிறப்பித் துள்ளார். வரவேற்கத்தக்க சிந்தனை. ஆனாலும், சட்டங்கள் வந்தாலும் ஜாதி, மதங்கள் கட்டமைத் துள்ள மடமையிலிருந்து மக்கள் விடுபட்டால் ஒழிய சட்டங்கள் எந்தப் பயனையும் ஏற்படுத்தப் போவ தில்லை. சுயமரியாதை திருமணங்கள் கருத்தரங்குகள் வழியாக பெண்ணுரிமை கருத்துகளைப் பரப்பி வருவது அனேகமாக பெரியார் இயக்கங்களும், வெகு சில சமூக இயக்கங்களுமாகத்தானே இருக்கின்றன?

பூணூல் போடாத பார்ப்பனர்
“நான் பூணூல் அணிவதில்லை. ஊர் அறிந்த பார்ப்பனருக்கு பூணூல் எதற்கு?” என்று கூறுகிறார் சுப்ரமணியசாமி. ‘தந்தி’ தொலைக்காட்சி, சுப்ரமணிய சாமியின் நேர்காணல் ஒன்றை கடந்த வாரம் ஒளி பரப்பியது. ‘கிழக்கு’ பதிப்பகத்தின் உரிமையாளர் சேஷாத்திரி, அவரை கேட்டி கண்டார். “விடியற் காலை நான்கு மணிக்கு எழுந்து சில ‘யோகா’ பயிற்சி களை முடித்து, அதன் பிறகு சமஸ்கிருத மந்திரங்களை அன்றாடம் உச்சரிப்பாராம். அப்போதுதான் அவருக்கு புதிய புதிய சிந்தனைகள் உருவாகுமாம்”. தனது மனைவி ‘பார்சி’ சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் அந்த சமூகத்தைச் சார்ந்த திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் தொடர்பு தமக்கு உண்டு என்றும், தான் தொடரும் வழக்குகளில் அவர்களது ஆலோசனைகளைப் பெறுவதாகவும் கூறிய அவர், தனக்கு சீனா, தாய்லாந்து, மெக்சிக்கன் நாட்டு உணவுகளே பிடிக்கும் என்கிறார். சேது சமுத்திரத் திட்டம் கைவிடப்பட்டுவிட்டது என்று தன்னிடம் மோடி கூறிவிட்டதாகவும், ஈழத் தமிழர் பிரச்சினை யில் தனக்கும் மோடிக்கும் ஒரு ஒப்பந்தம் இருக்கிறது என்றும், அதை நேரம் வரும்போது வெளியிடுவேன் என்றும் கூறிய அவர், தமிழக மீனவர்கள் படகுகளை பறிமுதல் செய்யுங்கள் என்ற யோசனையை இராஜபக்சேயிடம் முன் வைத்தது, நான் தான் என்று மீண்டும் இந்தப் பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார்.
தமிழக பா.ஜ.க.வினர் பற்றி தனக்கு கவலை இல்லை என்றும், மோடியுடன் தான் நேரடியாக தொடர்பு கொண்டு செயல்படுவதாகவும் கூறிய சுப்ரமணிய சாமி, மதசடங்குகளில் மூடநம்பிக்கைகளில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும், ஆனால் இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்கள் என்றும் கூறினார். மு°லிம், கிறி°துவர்களின் மரபணுவிலும் இந்துக்கள் அடையாளமே இருக்கிறது என்று கூறியதோடு தாம் மிகவும் மதிக்கும் சாமியார் தயானந்த சரசுவதி என்றும் அவருக்கு நிகரான அறிவாளி வேறு எவரும் இல்லை என்றும் கூறினார். பா.ஜக.வின் அதிகாரப் பூர்வ பிரதிநிதியாக தம்பட்டம் அடித்து வருகிறார் இந்த பார்ப்பனர். அது உண்மையா இல்லையா என்பதை பா.ஜ.க. தலைமையும் சரி; மோடியும் சரி; தெளிவுபடுத்தாமல் மவுனம் காக்கின்றனர். சுப்ரமணிய சாமி ஒரு பார்ப்பனர் என்பதால் இப்படி எல்லாம் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ள முடிகிறது.

பில்லி-சூன்யம் மோசடி
தவ்ஹீத் ஜமா அறார்த் என்ற முஸ்லிம் அமைப்பு, பில்லி, சூன்யம், பேய், பிசாசு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அவை இஸ்லாமுக்கு எதிரானது என்று பரப்புரை செய்து, பில்லி சூன்யக்காரர்களுக்கு சவால் விட்டு வருகிறது. திருச்சியைச் சேர்ந்த அகோரி மணிகண்டன் என்ற ‘மந்திரவாதி’ சவாலையேற்று, ‘தவ்ஹீத்’ அமைப்பின் தலைவர் பி.ஜே.வுடன் ஒப்பந்தம் போட்டார். 48 நாட்களில் தன்னால் சூன்யம் வைக்கப்பட்ட அவரது உடல்நலம் படிப்படியாக பாதிக்கத் தொடங்கி விடும் என்று ‘சூன்யவாதி’ ரூ.50 லட்சம் பந்தயமும் கட்டினார். 24 நாட்கள் முடிந்த பிறகும், ‘சூன்யம்’ எந்த வேலையும் செய்யாத நிலையில், திருச்சியில் மேற்குறிப்பிட்ட இஸ்லாமிய அமைப்பு 23.8.2014 அன்று சூன்ய ஒழிப்புப் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தி அதன் மோசடிகளை அம்பலப்படுத்தியது. கொட்டும் மழையிலும் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். மூடநம்பிக்கை களுக்கு எதிராக களமிறங்கி செயல்படும் தவ்ஹீத் அமைப்பை பாராட்ட வேண்டும்.
இதேபோல், இந்து மதத்தின் ஆர்வலர்களாக புறப்பட்டிருப்பவர்கள் மக்களிடம் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யாதது ஏன்? பகுத்தறிவு பிரச்சாரம் செய்யும் பெரியார் இயக்கத்தினரையும் இந்து விரோதிகள் என்றும், பகுத்தறிவு பிரச்சாரத்துக்கு தடை போட வேண்டும் என்றும் அலறுவது ஏன்? மக்களை எப்போதும் மூடநம்பிக்கையிலேயே மூழ்கடித்திருக்க வேண்டும் என்பதால் தானா?

ஆடம்பர திருமண எதிர்ப்புகள்
பெரும் பொருட் செலவில் நடத்தப்படும் ஆடம்பரத் திருமணங்களுக்கு கடிவாளம் போடக் கூடிய சட்டத்தை கருநாடக அரசைப் பின்பற்றி தமிழக அரசும் கொண்டு வரவேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் அதன் செயலவையில் தீர்மானம் நிறைவேற்றியது. 5 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிடப்படும் திருமணங்களுக்கு வரி விதித்து, அந்தப் பணத்தை ஏழை மக்களின் திருமணங்களுக்கு உதவிடுவதே கர்நாடக அரசின் சட்டம். சுயமரியாதை திருமணங்களின் நோக்கங் களில், ஆடம்பரமற்ற சிக்கன திருமண முறையும் அடங்கும். இந்தக் கருத்தின் நியாயம் இப்போது மக்களால் வரவேற்கப் படுகிறது என்பதற்கு சான்றாக இராஜ°தானிலிருந்து ஒரு செய்தி வந்திருக்கிறது. ஆடம்பரத் திருமணங் களை செய்வதை வழக்கமாகக் கொண்ட மார்வாடி கள், இப்போது அத்தகைய திரு மணங்களுக்கு சமூகத் தடைகளை விதித்துள்ளார்கள். குறைந்தது 100 கோடி ரூபாயை மார்வாடிகள் ஒரு திருமணத்துக்கு செலவிடுவார்களாம். வசதியற்ற மார்வாடிகள், அந்த அளவுக்கு தங்கள் பெண்களை திருமணம் செய்து கொடுக்க முடியாமல் திணறு கிறார்கள். எனவே, திருமணத்துக்கு செலவிடுவது வீண்விரயம் என்று கூறி, இராஜ°தானில் தக்கட்கார், பாலி, சத்ரி மாவட்டங்களைச் சார்ந்த மார்வாடி சமூகத்தினர் ஆடம்பரத் திருமணங்களுக்கு சமூகத் தடை விதித்துள்ளனர். தடையை மீறி திருமணம் நடத்தும் மார்வாடிகள் வீட்டுத் திருமணங்களை புறக்கணிப்பதோடு, ரூ.50,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அந்த சமூகத்தின் மூத்த தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
குறிப்பாக, மாப்பிள்ளை ஊர்வலம், ஆடம்பர விருந்துகளுக்கு செலவிடப்படுவதை குறைப்பதோடு நகரங்களில் நடத்துவதைத் தவிர்த்து சொந்த கிராமங் களிலேயே நடத்தலாம், இரவு நேர வரவேற்புகளை நிறுத்தலாம் என்று மார்வாடிகள் அமைப்பு ஆலோசனை கூறியுள்ளதோடு, மிக ஆடம்பர திருமணங்களை நடத்துவோர் அதில் பங்கேற்போர் குடும்பத்து விழாக்களை 3 ஆண்டுகள் புறக்கணிக்க வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஜாதி சங்கம் நடத்தும் தலைவர்கள் ஜாதி வெறியை உசுப்பி விடுவதற்கு பதிலாக இதுபோன்ற சமூக சீர்திருத்தங்களையாவது சமூகத்துக்குள் கொண்டு வர முயற்சிக்கக் கூடாதா?

கர்நாடக சங்கீதமும் பார்ப்பனர்களும்
‘கர்நாடக சங்கீதம்’ பார்ப்பனர்களுக்கான இசையாகவே இருக்கிறது. எனவே, கருநாடக இசை பார்ப்பனர்களிடம் மட்டுமே தங்கிவிடாமல் அனைத்து ஜாதியினருக்கான இசையாக விரிவுபடுத்த வேண்டும் என்று கருநாடக இசைப் பாடகரான டி.எம். கிருஷ்ணன் என்பவர், ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் (ஆக. 22) ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இதற்கு பார்ப்பனர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கோவிந்தராஜன் பார்த்தசாரதி என்பவர், “மேற்கத்திய இசையைப் போன்றது அல்ல கருநாடக இசை. மேற்கத்திய இசையை மதச் சார்பின்மை உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்த முடியும். ஆனால், கருநாடக இசை ‘ஆன்மிக’த்துக்கு மட்டுமே உரியது. கருநாடக இசை “பிரம்மத்தை” அடையும் ஒரு வழியாக உபநிஷத்துகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ‘தேவகானம்’ என்று அழைக்கப்படும கருநாடக இசையின் நோக்கம், பக்தி மார்க்கம் ஒன்றுதான்” என்று எழுதி, பார்ப்பனர்களின் இசையாகவே இது இருப்பதை நியாயப்படுத்தியிருக்கிறார். “இசையைப் பற்றிய பெரிய அறிவு இருக்கிறது; ஆற்றல் இருக்கிறது என்பது முக்கியமல்ல. இசையுடன் உள்ள ஆன்மிகத் தொடர்பே முக்கியம்” என்று தியாகய்யரே கூறியிருப்பதாகவும் அந்தப் பார்ப்பனர் கூறுகிறார். பார்ப்பன ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் கலைகளை பார்ப்பனர்கள் இன்று வரை அப்படியே தக்க வைத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள். ட

பெரியார் முழக்கம் 11092014 இதழ்

You may also like...

Leave a Reply