நவம்பர் 27 மாவீரர் நாள் நினைவாக…

பிரபாகரன் ஆற்றிய முதல் மாவீரர் நாள் உரை இதுதான்.
இந்திய தமிழிழப் போர் உக்கிரம் அடைந்து கொண்டிருந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் தினமும் தம்முயிரை தமிழீழ விடுதலைக்காக அர்ப்பணித்துக் கொண்டிருந்தனர். 1989, நவம்பர் 27 அன்று அடர்ந்த தமிழீழக் காடு ஒன்றில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், முதலாவது விடுதலைப் புலிப் போராளி வீரச்சாவு நாளான – நவம்பர் 27ஐ – மாவீரர் நாளாகப் பிரகடனப்படுத்தி உரையாற்றும்போது –
“எமது போராட்டத்தில் இன்று ஒரு முக்கிய நாள், இதுவரை காலமும் எமது புனித இலட்சியமான தமிழீழ இலட்சியத்துக்காக உயிர்த் தியாகம் செய்த 1207 போராளிகளை நினைவுகூரும் முகமாக இந்த மாவீரர் நாளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். முதல்முறையாக இன்று இந்த மாவீரர் நாளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். எத்தனையோ உலக நாடுகளில் அந்த நாடுகளின் விடுதலைக்காகப் போரிட்ட படை வீரர்களின் பாதுகாப்புக்காக போரிட்ட படை வீரர்களின் நினைவாகவும் இப்படிப்பட்ட மாவீரர் நாள்களைக் கொண்டாடுவது வழக்கம். உங்களுக்குத் தெரியும், இதுவரை காலமும் எமது இயக்கத்தில் வீரச்சாவு அடைந்த ஒவ்வொரு போராளிக்குமாகத் தனிப்பட்ட நினைவு நாள்களைக் கொண்டாடுவது வழக்கம்.
ஆனால், இந்த வருடத்தில் இருந்து வீரச்சாவு அடைந்த எல்லோரையும் மொத்தமாக வருடத்தில் ஒரு நாள் நினைவு கூர்ந்து அந்த நாளையே – மாவீரர் நாளாகப் பிரகடனப்படுத்தி உள்ளோம். அதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. அதாவது, எங்களது விடுதலைப் போராளிகளில் முதலாவதாக வீரச்சாவு அடைந்த – சங்கரின் நினைவு தினமாக இன்று அந்த மாவீரர் நாளை நாங்கள் பிரகடனப்படுத்தி உள்ளோம். அத்தோடு வழமையாக மக்களில் ஒரு பழக்கம் உண்டு. உயர்ந்த பதவிகள், வசதியானவர்கள் இப்படிப்பட்டவர்களைத்தான் பெரிதாக பார்க்கும் பழக்கம் உண்டு. அதுபோல் எமது விடுதலைப் போராட் டத்திலும் தலைவர்களை மட்டும் பிரித்து அவர்களது செய்கைகளை மட்டும் பெரிதாகப் பார்க்கக் கூடாது என்பதற்காகவும் எல்லாப் போராளிகளும் சமம் என்னும் ஒரு நோக்கத்துடனும் இந்த நாளை நாம் கொண்டாட முடிவு எடுத்துள்ளோம்.
அதாவது எமது போராளிகளை நினைவுகூரும் தினத்தை ஒரே நாளில் வைப்பதால் எமது இயக்கத்தில் இருந்து வீரச்சாவு அடைந்த தலைவர்களில் இருந்து சாதாரணமாகப் போராடி வீரச் சாவு அடைந்த உறுப்பினர் வரை எல்லோரையும் சமமாகத்தான் கருதுகிறோம். வீரச்சாவு அடைந்த எல்லா போராளிகளின் நினைவு நாள்களையும் ஒன்றாக நினைத்து மாவீரர் நாளாக இன்று கொண்டாடுகிறோம். இல்லா விட்டால் காலப்போக்கில் குறிப்பிட்ட சில ஆட்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அந்த மரியாதைகள் குறிப்பிட்ட சில ஆட்களுக்குப் போவதை தடுத்து, எல்லோருமே சமமாக ஒரே நாளில் நினைவுகூரப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாவீரர் நாளைக் கொண்டாட முடிவெடுத்தோம். ஓர் இனத்தைப் பொறுத்த வரை வீரர்களையும் அறிவாளிகளையும் பெண்களையும் மதிக்காத இனம் ஒரு காட்டுமிராண்டி இனமாக மாறி அழிந்துவிடும். எங்களுடைய இனத்தில் அறிவாளிகள் இருக்கிறார்கள். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது எங்கள் இனத்தில் பெண்கள் புனிதமாக மதிக்கப்படுகிறார்கள். அதே வேளை வீரர்களுக்குத்தான் பஞ்சமாக இருந்தது. ஆனால், இன்று இந்த மாவீரர் நாளில், ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டோம். ஆம், எமது வீரர்களைக்கூட நாம் கௌரவிக்க ஆரம்பித்துள்ளோம்.
இதுவரைக் காலமும் எங்களுடைய இனத்தில் வீரர்கள் என்றால் யார் என்று கேட்கும் நிலை இருந்தது. ஆனால், இன்று நாம் எம் இனத்தின் வீரர்களை நினைவு கூரும் நாள் ஒன்றை உருவாக்கியுள்ளோம். எனவே, இனி எமது இனம் நிச்சயமாக அழியாது. இன்று எமது இனம் உலகிலேயே தலைநிமிர்ந்து இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் எமது 1207 போராளிகளின் உயிர்த் தியாகம்தான். அவர்களுடைய வீரமான, தமது உயிரையே மதியாது போராடிய உண்மையான தியாகம் தான் எங்களுக்கு இன்று உலக நாடுகளில் ஒரு மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த மாவீரர் நாளை நாங்கள் எங்களுடைய வாழ்நாளில் முக்கியமான விழாவாக கருதி இன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் கொண்டாட உள்ளோம்” என்றார்.

பெரியார் முழக்கம் 27112014 இதழ்

You may also like...

Leave a Reply