தடை உடைந்தது; திரண்டனர் தோழர்கள் மேட்டூரில் நாத்திகர் பேரணி
மராட்டிய மாநிலத்தில் உள்ளது போல் நாத்திக இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டிய தந்தை பெரியார் பிறந்த தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென மேட்டூரில் சுட்டுக்கொல்லப்பட்ட போராளி தபோல்கர் நினைவாக கழகம் நடத்திய நாத்திகர் விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நாத்திகர் விழா மற்றும் மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி ஆகஸ்ட் 23ம் தேதியன்று மேட்டூர் சதுரங்காடியில் மாலை 5 மணியளவில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது.
“மராட்டியத்தைப் பின்பற்றி மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டமியற்று” என்ற கோரிக்கையை வலியுறுத்தும் ‘பேனருடன்’ – மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்வுகளுடன் பேரணி புறப்பட்டது.
பேரணியின் துவக்கத்தில், “பறை சாவுக்கான கலை அல்ல, அது வாழ்வுக்கான கலை; பறை ஒரு ஜாதிக்கான கலை அல்ல, அது ஜாதி ஆதிக்கத்தை அறுக்கவந்த ஆதிக் கலை” என்ற முழக்கத்தோடு சுயமரியாதை கலைபண்பாட்டுக் கழக பல்லடம் தோழர்களும், மேட்டூர் காவிரி கிராஸ் பகுதியைச் சேர்ந்த ஏ.ஆர். குழுவினரும் எழுப்பிய பறை முழக்கம் மேட்டூர் பகுதியை அதிரவைத்தது. தொடர்ந்து தீச்சட்டி தூக்குவது என்பது கடவுளின் சக்தி அல்ல என்பதை வலியுறுத்தும் வகையில் நூற்றுக்கணக்கான கழக தோழியர்கள் தங்கள் கைகளில் தீச்சட்டிகளை ஏந்திக்கொண்டு, “தீச்சட்டி இங்கே, மாரியாத்தாள் எங்கே?” என்ற முழக்கங்களை முழங்கியபடி வந்தனர்.
“கடவுள் உண்டு என்று சொல்லி அலகு குத்தி தேர் இழுக்கும் பக்தனே! கடவுள் இல்லை என்று சொல்லி நாத்திகர்கள் கார் இழுப்பதை பார்த்தாயா?” என்ற முழக்கங்களோடு மேட்டூர் பூவழகன், இளம்பிள்ளை தனசேகரன், மேட்டூர் ஆனந்த், நங்கவள்ளி மாதே°வரன், நங்கவள்ளி சக்திவேல் ஆகியோர் தங்கள் முதுகுகளில் அலகுகுத்தி கார்களை இழுத்து வந்தனர். காவிரி கிராஸ் ரத்தினசாமி திருப்பூர் நகுலன், குட்டிமணி ஆகிய தோழர்கள் தங்கள் கன்னங்களில் நீண்ட வேல்கள் குத்திக்கொண்டு கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று முழக்கம் இட்டனர். கழக தோழர்கள் அரிவாள் மேல் ஏறி நின்று கடவுள் மறுப்பு வாசகங்களை முழங்கியபடி வந்தனர். பல்லடம் மணிகண்டன், காவை அவினாசி ஆகியோர் மண்ணெண்ணெய் மூலம் வாயிலிருந்து தீயை வரவழைத்து சாகசங்களை நிகழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து மேட்டூர் முத்துராசு 6 அடி நீளம் 3 அடி அகலம் உள்ள ஆணிப் படுக்கையில் படுத்து வந்தது குழுமியிருந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இளம்பிள்ளை சந்திரசேகரன், நங்கவள்ளி இராஜேந்திரன் ஆகிய தோழர்கள் உயரமான கிரேனில் அலகு குத்தி பறவை காவடியில் தொங்கியவாறு கடவுள் மறுப்பு வாசகங்களை முழக்கமிட்டு வந்தனர்.
கலக்கியது வீதி நாடகக் குழு
ஊர்வலத்திற்கு முன்பாக சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் கொளத்தூர் குமார் தலைமையில் மின்வாரிய குடியிருப்பு, மாதாகோவில் சிக்னல், காவிரி நகர், சிறிய பூங்கா, மார்கெட், மேட்டூர் பேருந்து நிலையம் ஆகிய 6 இடங்களிலும் நடை பெற்ற வீதி நாடகத்தில் கோபி அர்ச்சுணன், கொளத்தூர் குமரேசன், நங்கவள்ளி கிருஷ்ணன், சேலம் பிரபு, திருப்பூர் பிரசாந்த், திருப்பூர் மணிகண்டன், திருப்பூர் வேணி, திருப்பூர் சங்கீதா, உடுமலை கவிதா, சூலூர் நாராயணமூர்த்தி ஆகியோரின் வீதி நாடகம் பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி முக்கிய கடைவீதிகளை கடந்து நாத்திகர் விழா நடைபெறும் மேட்டூர் சதுரங்காடி திடலுக்கு வந்தது.
திராவிடர் விடுதலைக்கழகத்தின் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி மேட்டூர் நகரத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
மாலை 6 மணியளவில் மேட்டூர் சதுரங் காடியில் மறைந்த சேலம் மேற்கு மாவட்ட பொருளாளர் தோழர் மேட்டூர் இரா.பெ. ஆசைத் தம்பி நினைவு மேடையில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராசு தலைமையில் நாத்திகர் விழா தொடங்கியது. மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் வரவேற்றார். துவக்கத்தில் பள்ளத்தூர் நாவலரசன், கோவை இசைமதி குழுவினரின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கழக மாவட்டச் செயலாளர் கொவிந்தராசு தனது தலையையும் கால் பாதத்தையும் மட்டுமே இரு நாற்காலிகளில் வைத்துக் கொண்டு படுத்திருக்க அவரது இடுப்புப் பகுதியில் 95 கிலோ எடை கொண்ட தூத்துக்குடி இரவி ஏறி நின்று காட்டினார்.
சாமியார்களின் மோசடிகளை தோல் உரித்துக் காட்டும் வகையில் பெரம்பலூர் மாவட்ட கழகத் தலைவர் துரை. தாமோதரன் “மந்திரமல்ல தந்திரமே” என்ற நிகழ்ச்சியை நடத்தினார். அதில் மேசை அந்தரத்தில் பறப்பது, நீர் ஊற்றிக் கொண்டிருக்கும் போது குவளை அந்தரத்தில் மிதப்பது, உடைத்துப் போடப்பட்ட கண்ணாடி துண்டுகள் மேலேறி மிதிப்பது, குதிப்பது போன்றவை பார்வையாளர்களை நாற்காலியின் நுனியில் உட்காரச் செய்தது.
சேலம் மண்டல அமைப்பு செயலாளர் சக்திவேல்-அனிதா ஆகியோரின் மகன் பெரியாரிய விழுது இளமகன் பெரியார், புரட்சி கவிஞர் பாரதிதாசன் குறித்து சிற்றுரையாற்றினார். தொடர்ந்து, சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் துரை.அருண் சோதிடம் என்ற தலைப்பிலும், சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் இரா. திருமூர்த்தி உலகம்-உயிர்கள்-தோற்றம் என்ற தலைப்பிலும், கழகப்பரப்புரை செயலாளர் தூத்துக்குடி பால்பிரபாகரன் வா°து-பேய்-பில்லி சூன்யம் என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
சுயமரியாதை கலைபண்பாட்டுக் கழக வீதிநாடகத் தோழர் கொளத்தூர் குமரேசன்-பகவதி இணையரின் ஆண் குழந்தைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி பலத்த கரவொலிக்கு இடையே ‘அறிவன்’ எனப் பெயர் சூட்டினார்.
“மதமும் மனிதனும்” என்கிற தலைப்பில் கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், “எது நாத்திகம்?” என்கிற தலைப்பில் கழக தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியில் சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சு.குமரப்பா நன்றி கூறினார்.
நாத்திகர் விழாவில், கழகப் பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, மாநில அமைப்புச் செயலாளர் திண்டுக்கல் தாமரைக் கண்ணன், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஈரோடு சிவக்குமார், ஈரோடு மண்டல அமைப்பு செயலாளர் கோபி இராம. இளங்கோவன், திருச்சி மண்டல அமைப்பு செயலாளர் புதியவன் உள்பட பல்வேறு பொறுப்பாளர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். கோவை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, பல்லடம், குமாரபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் தோழர்கள் பங்கேற்றனர்.
காவல் துறையினரின் இடையூறுக்கு இடையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெற்று மேட்டூரில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியும், நாத்திகர் விழாவும் கழக வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமையும் என்பது உறுதி. சேலம் மேற்கு மாவட்டத் தோழர்கள் மேட்டூர் நகரம் முழுவதும் கழக கொடி களையும், கழகக் கொடித் தோரணங்களையும் கட்டியும், நாத்திகர் விழா விளம்பர பதாகைகள் அமைத்தும் விழாவிற்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்தனர். செய்தி : மன்னை இரா. காளிதாசு
பெரியார் முழக்கம் 28082014 இதழ்