தலையங்கம் – வரலாற்றுப் புரட்டு
இந்துத்துவம் – புனைவுகளை வரலாறுகளாக கட்டமைக் கும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்தியாவில் வர்ணாஸ்ரம சமூக அமைப்பை நிலைப்படுத்தியவர்கள் பார்ப்பனர்கள். வர்ணக் கலப்பில் பிறந்தவர்கள் மீண்டும் வர்ணத்தின் கீழ்கொண்டுவரப்பட முடியாததால், ஜாதிகளாக பிரிக்கப்பட்டனர். ஜாதிப் பிரிவுகள் ஜாதியமைப்பாகி அதுவே தீண்டாமைக்கும் வழி வகுத்தது. இந்த வரலாற்று உண்மைகளை புறந்தள்ளிவிட்டு, ‘தீண்டாமை’ உருவாக்கியதே இஸ்லாமியர்கள் என்ற புதிய கதைகளை கட்டமைக்கிறார்கள். உ.பி.யில் பா.ஜ.கவைச் சார்ந்த விஜய் சாங்கர் சாஸ்திரி என்ற முன்னாள் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் (இவர் ஒரு தலித்), பட்டியல் இனப் பிரிவினரின் “வரலாறுகளை” மூன்று தொகுதிகளாக எழுதியுள்ளார். வால்மீகி, காதிக்ஸ் மற்றும் சாம்கர் ஆகிய தலித் மக்களின் வரலாறாக முன் வைக்கப்பட்ட மூன்று தொகுதிகளை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வெளியிட்டுள்ளார். அந்த நிகழ்வில்தான் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கிறது என்ற கருத்தை முதன்முதலாக வெளியிட்டார். முஸ்லிம் மன்னர்கள ஆட்சியில் கட்டாய மத மாற்றத்தை ஏற்க மறுத்தவர்களே “தீண்டப்படாதவர்களாக” ஒதுக்கி வைக்கப் பட்டதாக புதிய கண்டுபிடிப்பை செய்திருக்கிறார்கள்.
இஸ்லாமியர் ஆட்சிகளுக்கு முன்பே மனு சாஸ்திரத்திலேயே ‘சூத்திரர்’ – தீண்டப்படாத மக்களாக்கப்பட்டு விட்டனர். அந்த ‘மனு சாஸ்திரத்தை’ ஆர்.எஸ்.எஸ். எதிர்க்கவில்லை. வெளிப் படையாக கோல்வாக்கர் ஆதரித்து எழுதியுள்ளார். இப்போதும் கூட மனிதர்களை பிறவியால் பாகுபடுத்தி இழிவுக்குள்ளாக்கும் ‘மனு சாஸ்திரம்’ தங்களுக்கு உடன்பாடானது அல்ல என்று அறிவிக்க ஆர்.எஸ்.எஸ். தயாராக இல்லை.
இஸ்லாமியர் ஆட்சியில்தான் சிதறிக் கிடந்த பல்வேறு குழுக்களை தங்கள் ‘பிராமண மத’ கட்டுப்பாட்டுக்குள் பார்ப் பனர்கள் கொண்டு வந்தார்கள். “முகலாயர் ஆட்சியில்தான் பிராமண மதம் எத்தகைய தயக்கமும் இன்றி சர்வ வல்லமையுடன் முன்னேறியது” என்கிறார் வரலாற்று ஆய்வாளர் ராதா முகுந் முகர்ஜி.
இந்த காலத்தில் தான் பார்ப்பனர்கள் ஜாதிச் சட்டங்களை கடுமையாக்கியதோடு, கொல்லர், தச்சர், வண்ணார், ஆசாரி போன்ற பிரிவினரை தீண்டப்படாத சாதிகள் என்று அறிவித்தனர். முகலாய மன்னர்கள் முகலாயர் அல்லாத மக்களின் சமூக வழக்கங்களில் தடையில்லாமல் ஒதுங்கிக் கொண்டபோது சமூகத்தின் மீதான அதிகாரங்களை பார்ப்பனர்கள் தங்கள் வசம் எடுத்துக் கொண்டார்கள் என்பதே வரலாறு. குழந்தைத் திருமணம், உடன் கட்டை ஏறுதல், விதவைகள் மறுமணத் தடை போன்ற சமூகக் கொடுமைகளை முஸ்லிம் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனர்கள் திணித்தனர்.
முஸ்லிம் மன்னர்கள்தான் இந்த சமூகக் கொடுமைகளுக்கு காரணம் என்று வரலாற்றைப் புரட்டிப் போடுகிறவர்கள், ஒரு கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். முஸ்லிம் மன்னர் ஆட்சிக் காலம் முடிந்த பிறகு, இந்த சமூகக் கொடுமைகளை ஒழிக்க வேண்டும் என்று பார்ப்பனர்களோ அல்லது இந்துத்துவ வாதிகளோ குரல் கொடுத்ததாக வரலாறு உண்டா? இன்னும் சொல்லப் போனால் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நீதிமன்றங்களில் ‘மெக்காலே’ அறிமுகப்படுத்திய பொது கிரிமினல் சட்டம் வரும் வரை வர்ணாஸ்ரம அடிப்படையிலேயே தண்டனை வழங்குவதை ஆதரித்தவர்களும் பிரிட்டிஷ் நீதிபதிகளுக்கு அதற்கான ஆலோசகர்களாக இருந்தவர்களும் பார்ப்பனர்கள்தான். ‘பால்ய விவாகம்’, ‘விதவை மறுமணம்’, ‘தேவதாசி முறை’ போன்ற சமூகக் கொடுமைகளுக்கு எதிராக பிரிட்டிஷார் சட்டம் கொண்டு வந்தபோது அதை எதிர்த்து கூப்பாடு போட்டதும் பார்ப்பனர்கள்தான்!
இந்துமதத்தின் ஜாதி அமைப்புதான் முஸ்லிம் மன்னர்கள் ஆட்சிக்குப் பிறகும்கூட இந்து மதத்தை உறுதியாக ஆடாமல் அசையாமல் காப்பாற்றியது, என்கிறார், ஆர்.எஸ்.எஸ்.சுக்கு கொள்கையை உருவாக்கித் தந்த கோல்வாக்கர்.
இந்த வரலாறுகளை புறந்தள்ளிவிட்டு தீண்டாமைக்கு காரணமே இஸ்லாமியர்கள்தான் என்று நூல் எழுதுவது வரலாற்றுப் புரட்டு அல்லவா?
அதே தொகுப்புகளில் “‘சமத்துவம்’ என்ற கொள்கை இந்து கலாச்சாரத்துக்கு ஏற்புடையது அல்ல. சமத்துவ சமூகத்தில் போட்டிகளும் சண்டைகளும் இருக்கும். எனவே சமூக வேறுபாடுகளை அங்கீகரித்து சமூக நல்லிணக்கம் பேணுவதே இந்து கலாச்சாரம் என்றும் வெளிப்படையாகவே எழுதப்பட் டிருக்கிறது!” – என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.
பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவு வலைவீசி இஸ்லாமிய, கிறிஸ்துவத்துக்கு எதிராக அணி திரட்டுவதற்கு இத்தகைய வரலாற்றுப் புரட்டுகள் இந்துத்துவத்துக்கு இப்போது தேவைப்படுகிறது.
பெரியார் முழக்கம் 16102014 இதழ்