மேதகு பிரபாகரன் பிறந்த நாள் பதாகை நிறுவியதற்காக காவல்துறையின் கொலை வெறித் தாக்குதலுக்கு உள்ளானார் ‘முழக்கம்’ உமாபதி முறையான சிகிச்சை தர நீதிமன்றம் உத்தரவு!

‘முழக்கம் உமாபதி’க்கு முறையான சிகிச்சைகளை அளித்து அறிக்கை தர வேண்டும் என்று அரசு மருத்துவமனை தலைவருக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ செய்தியாளர் திராவிடர் விடுதலைக் கழகச் செயல் வீரர் ‘முழக்கம்’ உமாபதி, காவல்துறையால் நவம்பர் 26 அன்று கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து கழக வழக்கறிஞர்கள் துரை. அருண், திருமூர்த்தி, உயர்நீதிமன்றத்தில் நவ.28ஆம் தேதி வழக்கு தொடர்ந்து, அவசர விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று நீதிபதியிடம் வலியுறுத்தினர். நீதிபதி வி. இராமசுப்பிரமணியன், வழக்கை விசாரணைக்கு அனுமதித்தார். கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான ‘முழக்கம்’ உமாபதிக்கு தமிழக அரசு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறையினர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது. உடனடி நடவடிக்கையாக உரிய மருத்துவ வசதிகளை செய்து தரவேண்டும் என்றும், வழக்கை சி.பி.சி.அய்.டி. விசாரணைக்கு மாற்றி, தாக்குதல் நடத்திய காவல்துறையினரை உடனடி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரப்பட் டிருந்தது.
இதைத் தொடர்ந்து நீதிபதி, இராஜீவ் காந்தி மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி தலைமையில் (டீன்) மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்றை நியமித்து, ‘முழக்கம்’ உமாபதிக்கு தேவைப்படும் சிகிச்சைகளை செய்ய வேண்டும் என்றும், தரப்பட்ட சிகிச்சை, சிகிச்சையின் முன்னேற்றம் குறித்தும், மருத்துவமனையில் ‘முழக்கம்’ உமாபதி அனுமதிக்கப்பட்டபோது அவரது உடல்நிலை குறித்தும், டிசம்பர் 3 ஆம் தேதி நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். வழக்கு மனுவில் கோரப்பட்டிருந்த ஏனைய பிரச்சினைகள் குறித்து விளக்கம் கேட்டு, காவல்துறை அரசு அதிகாரிகளுக்கு நோட்டீசு பிறப்பிக்க ஆணையிட்டார். வழக்கில் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை இயக்குனர், காவல்துறை ஆணையாளர் ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர். மனுவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
“அபிராமபுரம் விசாலாட்சி தோட்டப் பகுதி யிலுள்ள ‘டா°மாக்’ மது விற்பனைக் கடையினால் குடியிருப்புப் பகுதியில் வாழும் மக்கள் மிகவும் தொல்லைக்குள்ளாகிறார்கள். நள்ளிரவு வரை அங்குள்ள – மது குடிக்கும் ‘பாரில்’ விற்பனை நடக்கிறது. எனவே கடையை மூடவேண்டும்” என்று திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் மக்களை இணைத்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் பகுதி காவல்துறைக்கு கழகத்தினர் மீது ஆத்திரம் இருந்தது.
இதைத் தொடர்ந்து நவம்பர் 26ஆம் தேதி அப்பகுதி மக்கள் பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாட பதாகை வைத்தபோது சம்பவங்களை புகைப்படம் எடுக்க, ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டின் செய்தியாளர் ‘முழக்கம்’ உமாபதி அங்கே வந்தார். காவல்துறையினர், பிரபாகரன் பதாகையை கிழித்து அகற்றியதை எதிர்த்து பொது மக்கள் சாலை மறியல் செய்ததை உமாபதி படம் பிடிக்க முயன்ற போது, காவல்துறையினர் அவரைப் பிடித்துப் போய் தாக்கியுள்ளனர். அபிராமபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் இளையராஜா, மற்றொரு உதவி ஆய்வாளர் கலைச் செல்வி, காவலர் வடிவேலு மூவரும் இணைந்து தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று வழக்கு மனுவில் கூறப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் புகார் மனு
கொலை வெறித் தாக்குதலை நடத்திய மூவர் மீதும் காவல் நிலையத்தில் கழக சார்பில் புகார் தரப்பட்டது. அதைத் தொடர்ந்து குற்றத்தை மூடி மறைக்க முடியாத நிலையில் வேறு வழியின்றி இளைய ராஜா, கலைச்செல்வி, வடிவேலு ஆகிய மூவர் மீதும் பிணையில் வெளிவரக்கூடிய பிரிவுகளான இ.பி.கோ.341 (சட்டத்துக்குப் புறம்பாக தடுத்தல்), 324 (தன்னிச்சையாக செயல்பட்டு காயம் ஏற்படுத்துதல்) என்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு (எப்.அய்.ஆர்.) செய்தனர். பிரிவு 307இன்கீழ் கொலை முயற்சிக்கான வழக்கைப் பதிவு செய்யாமல் காவல்துறை இந்த கண்துடைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களை பணி இடை நீக்கம் செய்யும் அதிகாரம் காவல்துறை இயக்குனருக்கும், ஆணையருக்கும் இருந்தும், அவர்கள் அதைச் செய்யாமல், இடமாற்றம் மட்டுமே செய்திருப்பதாக கழக வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை. அருண் ஆகியோர் தெரிவித்தனர்.

கொலை வெறித் தாக்குதல்: நடந்தது என்ன?

நவம்பர் 26ஆம் நாள் மேதகு பிரபாகரன் பிறந்த நாளையொட்டி மயிலைப் பகுதி கழகத் தோழர்களும் பகுதி வாழ் பொது மக்களும் இணைந்து மேதகு பிரபாகரனுக்கு 60 ஆவது பிறந்த நாள் வாழத்துக் கூறும் பதாகையை நிறுவியபோது காலை 9 மணியளவில் பிரச்சினைகள் தொடங்கின. பதாகையை நிறுவக் கூடாது என்று தடுத்த உதவி ஆய்வாளர் இளையராஜா, உதவி ஆய்வாளர் கலைச்செல்வி மற்றும் காவலர் வடிவேலு பதாகையைப் பிடுங்கி வீசி அதை கிழிக்கத் தொடங்கினர். அப்போது அங்கே இருந்த காவல் ஆய்வாளர் சீனிவாசன் என்பவரே, உதவி ஆய்வாளர்களின் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை விரும்பா மல் அதை ஏன் கிழிக்கிறீர்கள் என்று எடுத்துக் கூறியும், உதவி ஆய்வாளர்கள் அதைப் புறக்கணித்து, ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் இறங்கினர். பகுதி வாழ் பொது மக்கள், பெண்கள், இதைத் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த இளையராஜா, கலைச்செல்வி, வடிவேலு மூவரும் பெண் களைப் பிடித்து கீழே தள்ளி இழிவாகப் பேசவே அங்கே புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த உமாபதி, பெண்கள் மீது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? என்று கேட்டார். ஏற்கெனவே இந்தப் பகுதியி லுள்ள ‘டா°மாக்’ மதுபானக் கடையால் குடியிருப்பில் வாழும் மக்களுக்கு நேரிடும் தொல்லைகளைக் கண்டித்து பொது மக்களுடன் கழகத் தோழர்கள் கடையை மூடக் கோரி சாலை மறியல் செய்துள்ளனர்.
நள்ளிரவு 10 மணிக்கு மேலும் அங்கே உள்ள ‘பார்’ செயல்பட காவல் துறை அனுமதித்துக் கொண்டிருந்தது, இதேபோல் மயிலாப்பூர் சாய்பாபா கோயில் நிர்வாகம். ஏழைக் குழந்தைகள் படித்து வரும் பள்ளியை இடித்து கோயிலை விரிவாக்கம் செய்ய முயன்றதை எதிர்த்தும் கழகத் தோழர்கள் பொது மக்களோடு இணைந்து போராடினர். இதனால் கழகத்தினர் மீது ஆத்திரம் கொண்டிருந்த காவல்துறை, மேதகு பிரபாகரன் பிறந்த நாள் பதாகை வைக்கும் நிகழ்வைப் பயன்படுத்தி, பழிவாங்க திட்ட மிட்டது. பொது மக்கள் எதிர்ப்புக்கிடையே ‘முழக்கம்’ உமாபதியை வலுக்கட்டாயமாக தூக்கி, காவல்துறை வாகனத்தில் ஏற்றி தங்களது சரகத்துக்கு வெளியே உள்ள கோட்டூர்புரம் காவல் நிலையத்துக்கு கொண்டு போய் 3 மணி நேரத்துக்கும் மேலாக இளைய ராஜா, கலைச்செல்வி, வடிவேலு மூவரும் சேர்ந்து கொலை வெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
உமாபதியை பிடித்துச் சென்ற அபிராமபுரம் பகுதி காவல்நிலையத்தில்தான் வைத்திருப்பார்கள் என்று கருதிய சென்னை மாவட்ட கழகச் செயலாளர் உமாபதி, மாவட்ட தலைவர் ஜான் உள்ளிட்ட தோழர்கள் உடனே அபிராமபுரம் காவல் நிலையம் விரைந்தனர். அங்கே இருந்த உதவி ஆணையர், தோழர்களுடன் நீண்ட நேரம் அமைதியாக பேச்சு வார்த்தை நடத்தினார். ‘முழக்கம்’ உமாபதி எங்கே? என்று கேட்டபோது, ஏதேதோ சமாதானம் கூறிக் கொண்டிருந்தார். சில மணி நேரங்களுக்குப் பிறகு, இரத்தம் சொட்ட சொட்ட நடக்க முடியாத நிலையில் மூன்று காவல்துறை யினரும் உமாபதியை அழைத்து வந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த தோழர்கள், 3 காவல்துறையினரை கைது செய்யக் கோரி, காவல் நிலையத்தை முற்றுகையிட்டும் சாலை மறியல் செய்தும் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து உமாபதியை இராயப்பேட்டை மருத்துவமனைக்கு காவல்துறை கொண்டு போனது. தோழர்கள் இராயப்பேட்டை விரைந்தனர்.
இராயப்பேட்டையிலும் கொலை வெறித் தாக்குதல் நடத்திய காவல்துறையைக் கைது செய்யக் கோரி சாலை மறியல் செய்தனர். கழக வழக்கறிஞர்கள் துரை அருண், திருமூர்த்தி மற்றும் வழக் கறிஞர்கள், மார்க்° ரவீந்திரன், சசிகுமார், எம்.மணிவண்ணன், நெப்போலியன், ஞானசேகரன் ஆகியோர் விரைந்து வந்தனர். உயர் அதிகாரிகள் தாக்கிய காவல்துறை யினர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, மறியலை கைவிட்டு அங்கிருந்து, காவல்துறையைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஊர்வலமாக இராயப்பேட்டையில் உள்ள பெரியார் படிப்பகத்தை வந்தடைந்தனர்.
பிரபாகரன் பிறந்த நாள்
உணர்ச்சிகரமான இந்த சூழலில் பிரபாகரன் படம் எழுதப்பட்ட பதாகையை வி.எம். சாலையில் வைத்து, பொதுச் செய லாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை யில் ஈழ விடுதலை ஒலி முழக்கங்களை எழுப்பி ‘கேக்’ வெட்டப்பட்டது. பெருமள வில் மக்கள் கூட்டம் திரண்டு வந்திருந்தது.
இதற்கிடையே இராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டிருந்த ‘முழக்கம்’ உமாபதியை மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு அனுப்ப, காவல்துறை அழுத்தம் தரும் செய்தியறிந்து பொதுச் செயலாளர் மற்றும் தோழர்கள் மருத்துவமனை விரைந்தனர். மருத்துவ அதிகாரியை சந்தித்து சிகிச்சையைத் தொடர வேண்டும் என்று தோழர்களும், வழக்கறிஞர்களும் வலியுறுத்தினர். உடல் நிலை மோசமடைந்த நிலையில் ‘°கேன்’ எடுக்க வேண்டியிருப்பதால், இராயப் பேட்டை மருத்துவர்கள் உடனடியாக இரவு 8 மணியளவில் இராஜீவ் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ‘°கேன்’ எடுக்கப்பட்டது. விடியற்காலை 5 மணியளவில் காவல்துறை யின் அழுத்தத்தால் ‘முழக்கம்’ உமாபதி, நடக்கக்கூட முடியாத நிலையில் மருத்துவ மனையிலிருந்து திடீரென்று விடுவிக்கப்பட் டார். செய்தியறிந்த தோழர்கள், கழக வழக் கறிஞர்கள் உடனடியாக மருத்துவமனை விரைந்து தலைமை மருத்துவ அதிகாரியை சந்தித்து முறையிட்டனர். மருத்துவமனை யில் தோழர்கள், உணர்வாளர்கள் என்று பெரும் கூட்டம் கூடி நின்றது. தலைமை மருத்துவ அதிகாரி, தொடர்புடைய மருத்துவப் பிரிவு பொறுப்பாளர்களை அழைத்து எச்சரித்து தன்னுடைய அனுமதி யின்றி ‘முழக்கம்’ உமாபதியை விடுவிக்கக் கூடாது என்றும், உரிய சிகிச்சைகளை செய்யுமாறும் உத்தரவிட்டார்.
உமாபதி தாக்கப்பட்ட காயங்களோடு இணைய தளங்களிலும் முகநூல்களிலும் வெளிவந்த படம் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. முகநூல்களில் நூற்றுக்கணக்கில் படங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் அதிர்ச்சியடைந்தனர். உயர்நீதிமன்றத்தின் ஆணையைத் தொடர்ந்து ‘முழக்கம்’ உமாபதி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று தேறி வருகிறார்.
– நமது செய்தியாளர்

தாக்குதலைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள்

‘முழக்கம்’ உமாபதி மீதான கொலை முயற்சித் தாக்குதலைத் தொடர்ந்து, “தாக்குதல் நடத்திய இளைய ராஜா, கலைச்செல்வி, வடிவேலு ஆகிய மூவர் மீதும் கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்” என்ற கோரிக்கையை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது. சேலம், நாமக்கல், கிருட்டிணகிரி, ஈரோடு, மன்னார்குடி, மயிலாடுதுறை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் எழுச்சியுடன் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
திருச்செங்கோட்டில்
நாமக்கல் மாவட்ட கழகத்தின் சார்பில் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு (நகர காவல் நிலையம் எதிரே) மாவட்ட செயலாளர் மா.வைரவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்வில் தமிழ் புலிகள், அருந்தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தந்தை பெரியார் தி.க., மறுமலர்ச்சி தி.மு.க. மற்றும் கழக ஆதரவாளர்கள் என 60க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சாமிநாதன், திருச்செங்கோடு நகர தலைவர் சோம சுந்தரம் இருவரும் காயக்கட்டு ஒப்பனையோடு கலந்து கொண்டது மக்களிடம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
மன்னையில்
மன்னார்குடியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய கழகத்தினர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். மன்னார்குடி ப° நிலையம் அருகே கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகக் கூறி கழக மாவட்ட செயலாளர் காளிதாசு, ஒன்றிய செயலாளர்கள் மன்னார்குடி சேரன் ரமேஷ், நீடாமங்கலம் நல்லிக்கோட்டை முருகன், வலங்கைமான் செந்தமிழன் உள்பட 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சேலத்தில்
கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறை யைச் சாhந்த இளையராஜா, கலைச்செல்வி, வடிவேலு மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வற்புறுத்தி சேலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட கழகத் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட கழகத் தலைவர் சூரியகுமார் முன்னிலை வகித்தார். கழகத் தோழர் டைகர் பாலன், வழக்கறிஞர் ஆனந்த ராஜ் (ம.தி.மு.க.), பூமொழி (மக்கள் உரிமை இயக்கம்), பிரதாபன் (அருந்ததியர் மக்கள் இயக்கம்), அண்ணாத் துரை (அம்பேத்கர் மக்கள் இயக்கம்), தங்கராசு (த.பெ.தி.க.), சிவப்பிரியன், பிந்து சாரன் (தமிழ்த் தேசிய பேரியக்கம்), மாரியப்பன், ஜெகதீசுவரன் (தமிழ்நாடு மாணவர் பேரவை), கண்ணன் (பகுஜன் சமாஜ் கட்சி) ஆகியோர் காவல் துறையின் கொலைவெறியைக் கண்டித்து கண்டன உரையாற்றினர். மாநகரப் பொறுப்பாளர் பாலு நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 04122014 இதழ்

You may also like...

Leave a Reply