ஏது சாதி? முனைவர் ஆ. ஜீவானந்தம்

சங்ககாலப் பெருமையெல்லாம் என்னாச்சு-உன்

சாதிச்சங்கச் சண்டையில் மண்ணாச்சு

நீதிநேர்மை ஞாயமெல்லாம் போயாச்சு-இப்ப

நீயாநானா போட்டியின்னு ஆயாச்சு.

அம்பேத்கரு கொள்கையைத்தான் வித்தாச்சு-சனங்க

அடிமாடுபோல இப்ப செத்தாச்சு

பெரியாரு தந்தபுத்தி பித்தாச்சு-அவரு

பேரத்தவிர மத்ததெல்லாம் சொத்தாச்சு!

கார்ல்மார்க்சு மூலதனம் வீணாச்சு-நாடு

கார்ப்பரேட்டுக் கம்பெனிக்கே தூணாச்சு

இந்தியாவ ஆளுறதே நூலாச்சு-அதுக்கு

இத்துப்போன மனுதருமம் கோலாச்சு!

காதலைத்தான் சாதிவெறி பிச்சாச்சு-ஆனா

கலப்புமணம் மனசுகளைத் தச்சாச்சு

எங்களுக்கு தன்மானம் வந்தாச்சு-எங்க

எதிரிகளோ பயந்துபோயி நொந்தாச்சு!

காட்டிக்கொடுத்த பயலுகளாம் மேல்சாதி-ஆரியனக்

கட்டோட எதுத்தவங்க கீழ்சாதி

இருக்குறதோ ஆண்சாதி பெண்சாதி-இதுல

எங்கிருக்கு என்சாதி உன்சாதி!

பெரியார் முழக்கம் 01052014 இதழ்

You may also like...