ஜாதிவாரிக் கணக்கெடுப்பைத் தடுக்கும் பார்ப்பன சக்திகள்

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இந்தியாவில் ஜாதிவாரியாக உள்ள மக்களின் கணக்கெடுப்பையும் எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றத்தின் தீபக் மி°ரா தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. இது அரசின் கொள்கை சார்ந்த பிரச்சினை. எனவே சென்னை உயர்நீதிமன்றம் இதில் தலையிட்டு தீர்ப்பு வழங்கியது முறையல்ல என்கிறது உச்சநீதிமன்றத்தின் தீhப்பு. தமிழ்நாட்டின் சமூக நீதி உணர்வுகளையே சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் வழியாக வெளி பட்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பெரியார் உருவாக்கிய சமூக நீதிக்கான மண் தமிழ் நாடு என்ற உண்மை மேலும் உறுதியாகியுள்ளது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி வாரி கணக்கீட்டையும் இணைத்துக் கொள்ள 2010, மே மாதம் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உறுதிப் படுத்தியது. இதை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறை யீட்டில்தான் உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்துள்ளது.
ஜாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பிரிட்டிஷ் ஆட்சியில் 1931 ஆம் ஆண்டில்தான் கடைசியாக எடுக்கப்பட்டது. ‘சுதந்திர’ இந்தியாவில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது. அதே நேரத்தில் ‘சுதந்திர’ இந்தியாவின் அரசியலமைப்பு – ஜாதி களைத் தடை செய்துவிடவில்லை. அவரவர் ஜாதி மதத்தைப் பின்பற்றுவதை அடிப்படை உரிமையாக்கி யுள்ளது.
ஜாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்துவதை எதிர்ப்பவர்கள் யார்? இது ஒரு முக்கிய கேள்வி. பட்டியல் இனப்பிரிவில் அடங்கியுள்ள தாழ்த்தப்பட் டோர், பழங்குடி யினருக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதற்கு தடை போட முடியாது. அது அரசியல் சட்டம் வழங்கி யுள்ள உரிமை. ஏனைய ஜாதிப் பிரிவினர் கணக் கெடுப்புதான் இப்போது எதிர்ப்புக்குள்ளாக்கப்படு கிறது. பார்ப்பன சக்திகள் இந்த விவரங்கள் வெளிவந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இந்திய அதிகார மய்யங்களில் குவிந்து கிடக்கும் தங்கள் ஆதிக்கம் அசைக்கப்பட்டு விடக்கூடாது என்பதே அவர்களின் ஒரே நோக்கம்.
இந்தப் பிரச்சினையில் கடந்தகால ஆட்சிகளின் கொள்கை முடிவுகள் அரசு நியமித்த ஆணையங்கள் ஜாதிவாரியான இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவே இருந்திருக்கின்றன.
1953இல் நேரு பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்ட காகாகலேல்கர் தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மொரார்ஜி பிரதமராக இருந்தபோது 1978இல் நியமிக்கப்பட்ட மண்டல் ஆணையம் இரண்டுமே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றே பரிந்துரை செய்திருந்தன. ஆனால், பார்ப்பன அதிகார வர்க்கம் தனது அதிகார வலிமையைப் பயன்படுத்தி பரிந்துரைகளை முடக்கியது.
பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுவரும் நிலையில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டிய நிலையில் 1999 ஆம் ஆண்டு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்த விவாதங்கள் தொடங்கின. அப்போது தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் உற்துறை அமைச்சராக இருந்த அத்வானி ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார். பார்ப்பன ஏடுகள் ஜாதிவாரிக் கணக்கீடு கூடாது என்றும், அத்வானியை எதிர்த்தும் கடுமையாக எழுதின. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தலைமை அதிகாரி ஜே.ஜே. பாண்டியா, தமிழக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் கி.சந்திரமவுலி (இருவரும் பார்ப்பனர்கள்) ஆகியோர் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அவர்கள் அத்வானியை நேரில் சந்தித்து முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி சம்மதிக்க வைத்தனர். புது டில்லியிலிருந்து வெளிவரும் டி.என்.ஏ. நாளேட்டில் பி.இராதாகிருட்டிணன் எழுதிய கட்டுரையில் இந்த உண்மையை பதிவு செய்துள்ளார்.
2011 ஜூலை 12 ஆம் தேதி வெளிவந்த அக்கட்டுரை இவ்வாறு குறிப்பிடுகிறது:
“தேசிய ஜனநாயக முன்னணியில் உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி, 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு என்ன காரணம் என்பது அவருக்குத்தான் தெரியும். இதை எதிர்த்து ‘இந்தியன் எக்°பிர°’ நாளேட்டில் (டிசம். 9, 1999) நான் எழுதிய கட்டுரையைத் தொடர்ந்து, சென்னை தலைமை அதிகாரி ஜே.ஜே.பாண்டியா, தமிழக சென்ச° ஆணையர் கி.சந்திரமவுலி இருவரும் என்னை சந்தித்தனர். அத்வானியை நேரில் சந்தித்து அவரது கருத்தை மாற்றிக் கொள்ளுமாறு எடுத்துக் கூறி, அவரிடம் சம்மதம் பெற்றுவிட்டதாக என்னிடம் தெரிவித்தனர். எது நடந்ததோ எனக்கு தெரியாது. 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எப்படியோ கைவிடப்பட்டது” – என்று எழுதியுள்ளார்.
மீண்டும் 2011இல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தபோதும் இதே விவாதங்கள் தொடங்கின. அகில இந்திய காங்கிர° கட்சித் தலைவர் திக்விஜய்சிங், இந்திய கம்யூனி°ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.இராஜா இருவரும் இணைந்து ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி 2010 ஆக°டு 5ஆம் தேதி கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டனர். (இப்போது அதே இந்திய கம்யூனி°ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டாம் என்று கூறுகிறார்) இது குறித்து பல மட்டங்களில் நடந்த விவாதத்துக்குப் பிறகு, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சரவைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு அந்தக் குழு ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தலாம் என்று முடிவு செய்தது. 2010 ஆக°டு 12 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜியே இதை அறிவித்தார். அந்தக் கணக்கெடுப்பை எந்த வழிமுறைகளில் நடத்தலாம் என்பதை மட்டுமே இனி தீர்மானிக்க வேண்டும் என்றார், அமைச்சர்.
அரசின் கொள்கை முடிவு இப்படி இருந்தாலும் பார்ப்பன அதிகாரவர்க்கம் மீண்டும் தனது செல் வாக்கைப் பயன்படுத்தி ஜாதிவாரிக் கணக் கெடுப்பைத் தடுத்தது. பார்ப்பன அதிகார வர்க்கத்துக்கு துணைப் போனவர், மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரம். அப்போது அவர் தான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வாரியத்தின் தலைவர். இந்த வாரியத்தின் சார்பில் அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக 2012இல் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த முறையீட்டு வழக்கின் தீர்ப்பு தான் இப்போது வெளி வந்துள்ளது.
இந்த வழக்கில், உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க. அரசு சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஆர்.எ°.சூரி, ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த தற்போதைய மோடி அரசு விரும்பவில்லை என்று தெரிவித் துள்ளார்.
ஆக, ஜாதியமைப்பை நியாயப்படுத்தி அதைக் காப்பாற்றத் துடிக்கும் பார்ப்பன சக்திகள், ஜாதிவாரியான மக்கள் தொகை எண்ணிக்கை வெளியே வரக்கூடாது என்பதில் உறுதி காட்டுகின்றனர். உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்திரா சகானி வழக்கிலும் (1992), எம். நாகராஜ் எதிர் இந்திய ஒன்றியம் (2006) வழக்கிலும், அசோக் தாகூர் எதிர் இந்திய ஒன்றியம் (2008) வழக்கிலும் இடஒதுக்கீட்டை எதிர்த்து வாதாடியவர்கள் எல்லாம், ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படாததையே தங்களின் முதன்மையான வாதமாக முன்வைத்தனர். ‘இந்திரா சகானி’ வழக்கில் உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பின் ஆணையை ஏற்று இந்திய அரசு 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையச் சட்டம் ஒன்றை நாடாளு மன்றத்தில் நிறைவேற்றியது. அந்த சட்டத்தின் 11ஆவது பிரிவு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை ‘சேர்த்தல்-விலக்கல்’ அடிப்படையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. இந்த சட்டப்பிரிவை நிறைவேற்ற, ஜாதியடிப்படையிலான விவரங்கள் அவசியத் தேவையாகின்றன.
உச்சநீதிமன்றம் இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ளத் தயாராக இல்லை. நாட்டின் பெரும்பான்மை மக்களான ‘சூத்திரர்கள்’ தங்கள் சமூக அவலங்களைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று – அவர்கள் எண்ணிக்கைப் பற்றி அறியாமல் இருப்பதுதான் என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறுகிறார். ‘சூத்திரர்கள் யார்?’ (1946) என்ற நூலில் அம்பேத்கர் கூறுகிறார்:
“சூத்திரர்களின் பிரச்சினையின் ஆழம் குறித்து மக்கள் சரிவர உணராமல் போனதற்குக் காரணம் சூத்திரர்களின் மக்கள் தொகை எண்ணிக்கைக் குறித்து அவர்கள் அறிந்திடாமல் இருப்பதே ஆகும். கெட்ட வாய்ப்பாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் அவர்களின் கணக்கை தனியாக எடுக்கவும் இல்லை” – என்கிறார்.
பிற்படுத்தப்பட்ட பிரிவில் அதிக எண்ணிக்கைக் கொண்ட ஜாதிக்குழுவினர், தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட, இந்தக் கணக்கெடுப்பு பயன்படும் என்று இவர் வாதிடுவதில் நியாயமில்லை. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள எத்தனையோ ஜாதிப் பிரிவினர், அரசியல், பதவி, கல்வியில் முழுமையாக வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களாக, ஏன், ஒரு பஞ்சாயத்து உறுப்பினராகக்கூட வர முடியாத நிலையில் கிடப்பதை இவர்கள் ஏன் மறந்து விட்டு பேசுகிறார்கள்? (இது குறித்து, திராவிடர் விடுதலைக் கழகம் நிறைவேற்றிய தீர்மானத்தை வேறு இடத்தில் வெளியிட்டிருக்கிறோம்.)
“ஜாதிவாரியான கணக்கீடு வேண்டாம்” என்று எழுகிற எதிர்ப்புக் குரலுக்குள் ஜாதியப் பார்வையே அடங்கியிருக்கிறது. அதே நேரத்தில் ஜாதி ஒழிப்புக்கான முதல்படி ஜாதிகளுக்கிடையிலான சமத்துவம் என்ற பார்வை கொண்டோர், ஜாதியடிப்படையிலான இடஒதுக்கீட்டை வலியுறுத்துகிறார்கள். இதுதான் உண்மை!
எனவே, மோடி ஆட்சி சட்டத்தைத் திருத்தி இந்தச் சமூக நீதி கோரிக்கையை செயல்படுத்த வேண்டும்; அதற்காக ஒடுக்கப்பட்ட மக்கள் போராட வேண்டும்.

குரலற்ற மக்கள்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் பட்டியல் இனப் பிரிவில் அடங்கியுள்ள எண்ணிக்கையில் சிறுபான்மை யினரான புதிரை வண்ணார், காட்டு நாயக்கர், நரிக்குறவர், குயவர், வண்ணார், நாவிதர், போயர் போன்ற பல்வேறு சமுதாயப் பிரிவினர் ஒரு ஊராட்சி மன்ற உறுப்பினராகக்கூட வர முடியாத நிலையே உள்ளது. உயர்கல்வி, உயர் பதவிகளில் கற்பனையில்கூட எட்டிப்பிடிக்க முடியாத, ‘குரலற்றவர்களாக’ உள்ள இந்த சமூகத் தினருக்கு, சட்டம் வலியுறுத்தும் ‘போதுமான பிரதிநிதித்துவம்’ (Adequate Representation) என்ற இலக்கை சென்றடைவதற்கு தற்போதுள்ள இடஒதுக்கீட்டு முறையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டிய அவசியத்தை – இம் மாநாடு சுட்டிக்காட்டுகிறது. குரலற்ற இந்த மக்களின் நியாயமான உரிமைகளுக்குத் திராவிடர் விடுதலைக் கழகம் வலிமையாகக் குரல் கொடுத்துப் போராடும் என்ற அறிவிக்கிறது.
2013 டிசம்பர் 24இல் ஈரோட்டில் நடந்த திராவிடர் விடுதலைக் கழகப் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

பெரியார் முழக்கம் 13112014 இதழ்

You may also like...

Leave a Reply