தலையங்கம் – மோடியின் பார்ப்பன ஆட்சி

மோடியின் அமைச்சரவை பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் நிரம்பி வழிகிறது. முக்கிய துறைகளின் பொறுப்பை திறம்பட நிர்வகிக்கும் ஆற்றல், பார்ப்பனர்களுக்கு மட்டுமே உண்டு என்று மோடி முடிவுக்கு வந்துவிட்டார் போலும்! 21 புதிய அமைச்சர்கள் நியமனத்துக்குப் பிறகு அமைச்சரவை யின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி பிற்படுத்தப்பட்டவர் என்று சொல்லப்பட்டாலும் அவர் பிறந்த ‘வைசிய’ சமூகம் முன்னேறிய ஜாதிப் பிரிவிலிருந்து பிறகுதான் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அடுத்த நிலையில் உள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘இராஜபுத்திர’ முன்னேறிய சமூகத்தைச் சார்ந்தவர். இவர்களைத் தவிர முக்கியப் பொறுப்புகளின் அதிகாரம் பார்ப்பனர்களுக்கே ‘தாரை’ வார்க்கப்பட்டுள்ளது. ஆர்.எ°.எ°. அமைப்பு, ‘பார்ப்பனர்-வைசியா-இராஜபுத்திரர்’ என்ற சமூக மேலாதிக்கக் குழுவினரின் கட்டுப்பாட்டில் அவர்கள் நலனையே பிரதிபலிக்கக்கூடிய அமைப்புதான். அதுவே அமைச்சரவையிலும் எதிரொலிக்கிறது.
வெளிநாட்டுத் துறை அமைச்சராக உள்ள சுஷ்மா சுவராஜ், நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி, கப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் கல்ராஜ் மி°ரா, இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அனந்த் குமார், பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், தொடர்வண்டித் துறை அமைச்சர் சுரேஷ் பாபு, சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா ஆகிய அனைவரும் ‘கேபினட்’ பொறுப்புள்ள பார்ப்பன அமைச்சர்கள். 26 காபினட் அமைச்சர்களில் 30 சதவீதம் பார்ப்பனர்களிடம்! அத்தனையும் முக்கிய துறைகள்!
இது தவிர மகாராஷ்டிர மாநில முதல்வர் ஆர்.எ°.எ°.சில் பயிற்சிப் பெற்ற தேவேந்திர பட்நாவி° ஒரு பார்ப்பனர். இதற்கு முன் இவ்வளவு எண்ணிக்கையில் மத்திய அமைச்சரவையில் பார்ப்பனர்கள் இடம் பெற்றது இல்லை. இது தவிர, பிரதமர் அலுவலகம், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர், பொருளாதார ஆலோசகர், ரிசர்வ் வங்கி ஆளுநர் என ஆட்சி நிர்வாகமே ‘அவாளின்’ பிடியில்தான்! எப்படி மராட்டியத்தில் ‘சிவாஜி’ என்ற பார்ப்பனரல்லாத மன்னருக்கு முடிசூட்டிவிட்டு பார்ப்பனர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி இருந்தார்களோ, அதே வரலாறுதான் மோடியின் ஆட்சியிலும் திரும்பி யுள்ளது.
அமைச்சரவையின் விரிவாக்கத்தில் இடம்பெற்ற
4 கேபினட் அமைச்சர்களில் 3 பார்ப்பனர் இடம் பெற்றவுடன் இராஜ்தீப் சர்தேசாய் எனும் பிரபலமான பார்ப்பன பத்திரிகை ஆசிரியர் “சர°வதி பிராமணர்களுக்கு – இது வரலாற்றில் ஒரு சிறந்த நாள்” என்று ஆனந்தக் கூத்தாடி முக நூலில் எழுதினார்.
சுப்பிரமணியசாமி இன்னும் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். “வரலாற்றில் ராஜாக்களுக்கு பிராமணர்கள்தான் ஆலோசகர்களாக இருந்தனர். இப்போது மோடி எனும் ராஜாவுக்கும் நான் ஆலோசகராக இருக்கிறேன். இதையும் தாண்டி, எனக்கு அமைச்சர் பதவி எதற்கு?” – இது ஏடுகளிலும் வெளிவந்திருக்கிறது.
இதையெல்லாம் கண்டு கொள்ளாத பார்ப்பன ஊடகங்கள், பீகார் முதல்வர் ஜித்தன் ராம்மஞ்சி, “இந்தியாவில் அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆரியர்கள்; அவர்கள் வேறு நாட்டிலிருந்து வந்தவர்கள்; பட்டியலின மக்களும் பழங்குடியினரும் தான் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள்” என்று பேசியதற்கு கூப்பாடு போடுகிறார்கள்.
“பெரும்பான்மை சூத்திரர்கள்” ஓட்டுகளை வாங்கி, “சிறுபான்மை பிராமணர்கள்” ஆட்சிக் கடிவாளத்தைக் கையில் எடுத்துக் கொண்டு விட்ட பிறகு, பார்ப்பனர் என்ற சொல்ல உச்சரிப்பதற்குக்கூட இன்று பார்ப்பன ரல்லாத கட்சிகளின் தலைவர்கள் தயங்குகிறார்கள்.
இந்த நிலையில் பீகார் முதல்வர் துணிவாகவே பேசியிருப்பதை பாராட்ட வேண்டும்.
ஜனநாயகம் பார்ப்பன நாயகமாகிவிடும் என்று
90 ஆண்டுகளுக்கு முன் பெரியார் சுட்டிக் காட்டினார். அதே நிலைதான் இப்போதும்! பார்ப்பன எதிர்ப்பு இயக்கம் வீரியம் பெற்றாக வேண்டாமா?

பெரியார் முழக்கம் 20112014 இதழ்

You may also like...

Leave a Reply