விநாயகர் சதுர்த்தியை காரணம் காட்டி பொதுக் கூட்ட உரிமையை மறுக்கக் கூடாது காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

விநாயகர் சதுர்த்தியை காரணம் காட்டி திராவிடா விடுதலைக் கழகக் கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்ததை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்து, பொதுக் கூட்டத்துக்கு அனுமதிக்க உத்தரவிட்டது.
திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுதும் விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஜூலை 15இல் தொடங்கி இதுவரை 15 பொதுக் கூட்டங்கள் நடந்து முடிந்துவிட்டன. அடுத்தக் கட்டமாக 16 ஆம் தேதி கோவை மேட்டுப்பாளையத் திலிருந்து பொதுக் கூட்டங்கள் தொடங்க உள்ள நிலையில் மேட்டுப்பாளையம் காவல்துறை கூட்டத்துக்கு அனுமதி தராமல் காலதாமதம் செய்து வந்தது. கடைசி நேரத்தில் கூட்டத்துக்கு அனுமதியை மறுத்துவிட்டால், கூட்டத்தைத் தடைப்படுத்திவிட லாம் என்று காவல்துறை திட்ட மிட்டது. இதைப் புரிந்து கொண்டு, கழகத் தோழர்கள் எச்சரிக்கையுடன் கூட்டத்துக்கு அனுமதி தருவதை உறுதி செய்யக் கோரி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்தனர்.
கோவை வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் மேட்டுப் பாளையம் இராமச்சந்திரன், இந்த வழக்கைத் தாக்கல் செய்தார். காவிரிப் பிரச்சினைக்கு மேலாண்மை வாரியம் அமைத்தல், தஞ்சை மாவட்டத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிடுதல் போன்ற கழகத்தின் தீர்மானங் களை விளக்கிப் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட் டுள்ளது என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.
நீதிபதி வி.இராமசுப்பிரமணியம் முன்பு ஆக°டு 9 ஆம் தேதி வெள்ளிக் கிழமை வழக்கு விhசரணைக்கு வந்தது. வினாயக சதுர்த்தியை காரணம் காட்டி அனுமதி மறுத்ததாக அரசு தரப்பில் கூறப்பட்ட வாதத்தை ஏற்க நீதிபதி மறுத்தார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை வருமானால், அதைக் காப்பாற்ற வேண்டியது காவல் துறை கடமை என்றும், அதைக் காரணம் காட்டி, கூட்டம் நடத்தும் அடிப்படை உரிமையை மறுக்கக் கூடாது என்றும் தீர்ப்பில் கூறிய நீதிபதி, காவிரிப் பிரச்சினைப் பற்றி விளக்கும் கூட்டத்துக்கு அனுமதி வழங்கிட உத்தரவிட்டார். கடந்த ஆண்டில் 21,000 பொதுக் கூட்டங்கள், போராட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதித்துள்ளதாக சட்டசபையில் முதல்வர் கூறியுள்ள நிலையில், இதற்கு ஏன் அனுமதி மறுக்க வேண்டும்? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பெரியார் கருத்துகளைப் பரப்பி வரும் திராவிடர் விடுதலைக் கழகக் கூட்டங்களுக்கு காவல்துறை விருப்பு வெறுப்பின் அடிப்படையில் பல ஊர்களில் அனுமதி மறுத்து வருகிறது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்று, அனுமதி பெற்று கூட்டம் நடத்தும் நிலையே நீடிக்கிறது.
நாடு முழுதும் மடமையை பரப்பும் மூடநம்பிக்கைகளும் கோயில் விழா என்ற பெயரில் குத்தாட்டங்கள், ஆபாச நடனங் கள் நடத்தும் நிகழ்ச்சிகளும், தடையின்றி நடைபெறுகின்றன. மக்களிடையே பகுத்தறிவு கருத்துகளையும், அறிவியல் சிந்தனைகளையும், ஜாதி-தீண்டாமை ஒழிப்பு, சமூக நீதி பெண்ணுரிமை கருத்துகளையும் விளக்கி, விழிப்புணர்வைத் தூண்டி வரும் திராவிடர் விடுதலைக் கழகம், தடைகளையும் முட்டுக்கட்டைகளையும் தாண்ட வேண்டியிருக்கிறது. இப்போது உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு கருத்துரிமைக்குக் கிடைத்த வெற்றியாகும். இந்த வழக்கைக் கழக வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை. அருண் ஆகியோர் நடத்தி, வெற்றி தேடித் தந்துள்ளனர். திட்டமிட்டபடி மே 16 ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் கழகக் கூட்டம் நடைபெறும். மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் தலைமையில் தோழர்கள் உற்சாகமாக களப்பணியில் இறங்கியுள்ளனர்.

பெரியார் முழக்கம் 14082014 இதழ்

You may also like...

Leave a Reply