உறவுக்குள் திருமணம்: ஊனமாகும் குழந்தைகள்: பெண்களை நெகிழ வைத்த பரப்புரை
அகமண முறைக்கு எதிராக கழகம் நடத்திய பரப்புரை இயக்கத்தின் பதிவுகள். கடந்த இதழின் தொடர்ச்சி.
பிப்.18 காலை 10 மணிக்கு கருந்திணை இல்லத்தில் பயணக் குழுவில் உள்ள தோழர்களுக்கு பணியிடைப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அகமண முறையின் ஆபத்துகளையும், ஜாதி மறுப்புத் திருமணங்களின் அவசியத்தையும் விரிவாக விளக்கி தோழர் பூங்குழலி வகுப்பு நடத்தினார். இரண்டு நாள்களாக பயணக் குழுவிடம் பொது மக்கள் கேட்ட கேள்விகளுக்கு அறிவியல்பூர்வமான பதில்களை அறிந்துகொள்ளும் வகையில் வகுப்பு நடந்தது. கேள்வி-பதில் முறையில் பயிற்சிக் கையேடும் வழங்கப்பட்டது. அந்தக் கையேட்டின் செய்திகளை அடிப்படையாக வைத்து பரப்புரைக் குழுவினர் வீதி நாடகங்களையும், சொற்பொழிவுகளையும் திட்ட மிட்டனர்.
அத்தகைய வீதி நாடகங்களைப் பார்த்து, அதன் உண்மைகளைப் புரிந்த கிராமத்துப் பெண்கள் நமது தோழர்களிடம், ‘எங்கள் ஊரில், எங்கள் வாழ்க்கை யில் நடப்பதை நாடகமாக நடத்துள்ளீர்கள். இனி ஒரு ஜாதிக்குள் திருமணம் செய்யவே மாட்டோம்’ என கண்ணீருடன் உறுதியளித்த நெகிழ்வான நிகழ்வு களோடு பயணம் தொடர்ந்தது.
பிப்.19 நண்பகல் 1 மணியளவில் தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பரப்புரையைத் தொடங்கினர். மாலை 4 மணியளவில் திருவள்ளுவர் சிலை அருகில் பயண விளக்கக் கூட்டம் நடைபெற்றது. 5.30 மணியளவில் வ.உ.சி. சிலை அருகில் நடைபெற்றது. அனைத்து இடங்களிலும் காவை இளவரசனின் மந்திரமா? தந்திரமா? நடைபெற்றது. பொள்ளாச்சி விஜய ராகவன், பயணத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினார். திராவிடர் கலைக் குழுவின் பறை இசையும் வீதி நாடகமும் நடைபெற்றது. உதயசங்கர் நன்றியுரை நிகழ்த்தினார். வ.உ.சி. சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மக்கள் திரளாக சாலையின் இருமருங்கிலும் கூடி நின்றனர். பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேனி மாவட்ட அமைப்பாளர் போடி சரவணன், மாவட்ட செயலாளர் பெரியகுளம் குமரேசன், சரவணன், தமிழ்நாடு மாணவர் கழகம் உதயசங்கர் ஆகியோர் செய்திருந்தனர். பயண நிதியாக ரூ.2000 வழங்கினர்.
பிப்.20 நண்பகல் 12 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகரில் நடைபெற்ற பயண விளக்கக் கூட்டத்தில் விசயராகவன் உரையாற்றினார். நமது துண்டறிக்கையைப் படித்த அப்பகுதி பெண் ஒருவர் அகமணமுறையால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி தெரிந்து கொள்ள நமது தோழர்களிடம் தொலைபேசி எண் வாங்கினார். பயணத்தின் செலவை சரி செய்ய நிதி வசூல் செய்த தோழர்களுக்கு தி.க. மாவட்டத் தலைவர் வீரபாண்டியன் தேனீர் வாங்கிக் கொடுத்து சிறப்பாக செயல்படுங்கள் என வாழ்த்தினார்.
மாலை 6 மணியளவில் ஆத்தூர் ஒன்றியம் வலைய பட்டி கிராமத்தில் கிராம கலையரங்க மேடையில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. காவை இளவர சனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது. கிராம மக்கள் திரளாக வந்து நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர். ஆத்தூர் ஒன்றியச் செயலாளர் நாகராஜ், செம்பட்டி ஆல்பர்ட் அனைத்து ஏற் பாடுகளையும் சிறப் பாகச் செய்திருந்தனர்.
பிப்.21 காலை 10 மணி யளவில் கரூர் மாவட்டம் கடவூர் பேருந்து நிலையம் அருகிலும், 11.30 மணியளவில் பால விடுதி கிராமத்திலும், 12.45 மணியளவில் தரகம் பட்டி பகுதியிலும், மாலை 6.30 மணியளவில் குளித்தலையில் சுங்கச் சாவடியிலும் காவை இளவரசனின் ‘மந்திரமா தந்திரமா?’, விஜயராகவனின் உரை, வீதி நாடகங்கள் நடைபெற்றன. இந்தப் பகுதி கிராமங்கள் அனைத் திலும் பெண்கள் அதிக ஆர்வத்துடன் நிகழ்ச்சியைக் கண்டனர். கடவூரில்தான் சின்னம்மாள் என்ற பெண் கண்கலங்கி நம் தோழர்களின் காலில் விழ வந்தார். தோழர்கள் அதைத் தடுத்து ஆறுதல் படுத்தினர். இந்த ஊரைத் தொடர்ந்து பல கிராமங்களில் நமது பரப்புரைக்கு பெண்களின் ஆர்வமும், ஒத்துழைப்பும் அதிகமாக இருந்தது.
பிப்.22 காலை 11 மணியளவில் கிருஷ்ணராய புரத்திலும் 12.45 மணியளவில் புலியூர் பேருந்து நிறுத்தம் அருகிலும், மாலை 5 மணியளவில் கரூர் உழவர் சந்தை அருகிலும், இரவு 8 மணியளவில் சின்ன தாராபுரம் பேருந்து நிலையத்தின் அருகிலும் பரப்புரை நடை பெற்றது. மக்களிடம் உண்டியல் ஏந்தி நிதி வசூல் செய்த தோழர் களிடம் மகளிர் தைய லகம் நடத்தும் பெண் கள், பெரியார் பெண் விடுதலைக்காகப் போராடியதை நினைவுகூர்ந்து, “நாங்களும் உங்கள் இயக்கத்தோடு இணைந்து பெண் விடுதலைக்காகப் போராடத் தயாராக உள்ளோம்” என்று கூறி தமிழ்ச் செல்வியிடம் தங்கள் முகவரியைப் பதிவு செய்தனர். நண்பகல் உணவிற்குப் பிறகு விஜயராகவன் பரப்புரைக் குழுவுக்கு அன்னை மணியம்மையாரின் பணிகளை விளக்கி வகுப்பு நடத்தினார்.
கரூர் மாவட்டத் தலைவர் பாபு, மாவட்டப் பொறுப்பாளர் சத்தியசீலன், மாவட்ட அமைப்பாளர் பெரியார் தாசன், தமிழ்நாடு மாணவர் கழகம் முத்து, சின்ன தாராபுரம் சண்முகம், ரஞ்சித், செந்தில் குமார், பிரகாஷ் ஆகியோர் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்தனர். கழகப் பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகச் செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி ஆகியோரும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
பிப்.23 காலை 11 மணியளவில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையம் அருகில் பயண விளக்கக் கூட்டம் நடைபெற்றது. பயணத்தின் நோக்கங்களை விளக்கி கோவை மண்டல அமைப்புச் செயலாளர் பல்லடம் விஜயன் மற்றும் விஜயராகவன் உரையாற்றினார். வழக்கறிஞர் கிருஷ்ணக்குமார், இராஜாமணி ஆகியோர் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
மாலை 5 மணியளவில் காங்கேயம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கூட்டத்தில் பயணத்தின் நோக்கங்களை விளக்கி தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் சிவகாமி, முகில்ராசு, சமூகக் கல்வி இயக்க மூர்த்தி ஆகியோர் உரையாற்றினர். பாண்டியன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்
இரவு 7 மணியளவில் பல்லடம் பேருந்து நிலையம் அருகில் பயண விளக்கக் கூட்டம் நடைபெற்றது. செயலவைத் தலைவர் துரைசாமி, விஜயராகவன் ஆகியோர் உரையாற்றினர். பல்லடம் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் மணிகண்டன், சுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். பயண நிதி ரூ.1000 வழங்கினர். அனைத்து இடங்களிலும் திராவிடர் கலைக் குழுவின் பறை இசையும் வீதி நாடகங்களும் நடைபெற்றன. மக்கள் திரளாக நின்று நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர். தனியார் கல்லூரி விரிவுரயாளர் பிரபு அமைப்பில் இணைந்து பணியாற்ற முகவரியைப் பதிவு செய்தார். திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் செயலவைத் தலைவர் சு.துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், கோவை மண்டலச் செயலாளர் சி. விஜயன், தமிழ்நாடு அறிவியல் மன்றம் சிவகாமி, திருப்பூர் மாவட்டச் செயலாளர் அகிலன் மற்றும் மாநகரப் பொறுப்பாளர் ஜீவா நகர் குமார், உடுமலை ஒன்றியப் பொறுப்பாளர்கள் குணசேகரன், மலரினியன், சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழக கோவை மண்டல அமைப்பாளர் அ.ப.சிவா மற்றும் தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
பிப்.24 கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் இராவுத்தூர் கிராமத்தில் காலை 10.45 மணியளவில் கழகக் கொடியினை பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் ஏற்றி வைத்தார். ஊர் பொது மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். காலை 11.30 மணியளவில் சூலூர் பேருந்து நிலையம் அருகில் பயண விளக்கக் கூட்டம் நடைபெற்றது. பால். பிரபாகரன் தனது உரையில் “பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டு உரிமை பறி போகிறது, பன்னாட்டு நிறுவனங்கள் இயற்கை வளங்களை சூறையாடுகிறது, விவசாயிகளுக்கு மானியங்கள் கிடைப்பதில்லை. அதற்கு எதிராகப் போராடாமல் சாதி மறுப்பு திருமணங்கள் செய்யும் தங்கள் பிள்ளைகளை போலி கவுரவங்களுக்காகக் கொலை செய்கிறார்கள். இயற்கையாய் ஏற்படும் காதல் திருமணங்களை ஆதரித்து ஒரு ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க திராவிடர் விடுதலைக் கழகம் வேண்டுகோள் விடுக்கிறது. சாதி மறுப்பு இணையரின் வாரிசுகளுக்கு சாதியற்றோர் இடஒதுக்கீடு வழங்கி சாதி மறுப்புத் திருமணங்களை ஆதரிக்க அரசு வழி வகை செய்ய வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
துரைசாமி, விஜயன், பல்லடம் பிரகாசு, மாவட்டத் துணைத் தலைவர் பன்னீர் செல்வம், சூலூர் ரமேஷ், கார்த்திக், பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர். இடுவாய் ரவி மற்றும் சூலூர் துரைசாமி தலா ரூ.100 நன்கொடை கொடுத்தனர்.
காலை 12.30 மணியளவில் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கூட்டத்தில் மாநகரத் தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் விஜயராகவன் உரையாற்றினர். தமிழ்நாடு மாணவர் கழகம் சிலம்பரசன் நன்றியுரை ஆற்றினார். பயணக் குழுத் தோழர்கள் ஆதித் தமிழர் பேரவை தலைமை அலுவலகத்தில் உணவருந்தி ஓய்வெடுத்தனர். அ. எழில் வரவேற்று உபசரித்தார். மாலை 4.30 மணியளவில் காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பரப்புரையில், தோழர் அறக்கட்டளையின் நிறுவனர் சாந்தக்குமார் வாழ்த்துரை வழங்கினார். பயணத்தின் நோக்கங்களை விளக்கி கோவை பன்னீர்செல்வம், விஜயராகவன், சூலூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் உரையாற்றினர்.
மாலை 6.45 மணியளவில் சரவணம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் பயண விளக்கக் கூட்டம் நடைபெற்றது. மாநகரப் பொருளாளர் கணேசன் வரவேற்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் வெள்ளமடை நாகராஜ், சாதியற்றோர் இடஒதுக்கீட்டின் அவசியத்தை வலியுறுத்தியும், 2001 ஆம் ஆண்டில் நீதிபதி வெங்கடாசலய்யா அறிக்கையில் சாதியற்றோருக்கு 5% இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை நினைவு கூர்ந்து உரையாற்றினார். அனைத்து இடங்களிலும் திராவிடர் கலைக் குழுவின் பறை இசையும் வீதி நாடகங்களும் நடைபெற்றன. மக்கள் திரளாக நின்று நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர். அனைத்து இடங்களிலும் சூலூர் பன்னீர்செல்வம், மாநகரத் துணைத் தலைவர் ஆண்ட்ரூஸ், மாநகரச் செயலாளர் ஜெயந்த், மாவட்டத் துணைச் செயலாளர் கிருட்டிணன், மாநகர அமைப்பாளர் நேருதாஸ், தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் சிலம்பரசன், பிரதாப், ஜெயப்பிரகாஷ், நிர்மல், பத்மநாபன், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிப்.25 காலை 10 மணியளவில் அன்னூர் பேருந்துநிலையம் அருகில் நடைபெற்ற கூட்டத்திற்கு அன்னூர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்டப் பொறுப்பாளர்கள் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், வெள்ளமடை நாகராஜ், கோவை பன்னீர் செல்வம் ஆகியோர் பயணத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினார்கள். முடுக்கந்துரை ரவி நன்றியுரையாற்றினார். பெண்கள் பலர் சாலையின் இருபுறங்களிலும் நின்று நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தது மனநிறைவைத் தந்தது.
காலை 11.30 மணியளவில் புலியம்பட்டியிலும், பிற்பகல் 1.50 மணியளவில் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகிலும், பிற்பகல் 3 மணியளில் சத்தியமங்கலம் வடக்குப் பேட்டையிலும் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றன.
ஈரோடு மண்டல அமைப்புச் செயலாளர் இராம. இளங்கோவன், வர்ணாசிரம அமைப்பைப் பற்றி எடுத்துக் கூறி அதிலிருந்து எவ்வாறு இத்தனை சாதிப் பிரிவுகள் ஏற்பட்டன என்பதையும் விளக்கினார். மேலும் “சாதியை ஒழிக்கவும், ஆரோக்கியமான தலைமுறையை வளர்த்தெடுக்கவும் சாதி மறுப்பு திருமணங்களையே ஆதரிக்க வேண்டும்” என்றும் எடுத்துரைத்தார். விஜயராகவன், கோபி. வேலுச்சாமி ஆகியோர் பயணத்தின் நோக்கத்தைப் பொது மக்களுக்குப் புரியும் வண்ணம் இயல்பான நடையில் விளக்கினர்.
பயண நிதியாகத் திருப்பூர் தண்டபாணி ரூ.1200 வழங்கினார். அனைத்து இடங்களிலும் திராவிடர் கலைக் குழுவின் பறை இசையும், அகமணமுறை செய்து கொண்ட இணையர்களின் குழந்தைகளுக்கு; ஏற்படும் ஊனங்கள் பற்றி விளக்கி வீதி நாடகங்களும் நடைபெற்றன. மக்கள் திரளாக சாலையின் இருமருங்கிலும் கூடி நின்று வீதி நாடகங்களைக் கண்டு களித்தனர்.
மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி, மாவட்டச் செயலாளர் நிவாஸ், மாவட்ட அமைப்பாளர் சதுமுகை பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணித் தலைவர் இராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மூர்த்தி, பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோகுல்ராஜ், கே.என்.பாளையம் அமைப்பாளர் முருகேசன் மற்றும் தோழர்கள் பலர் திரளாகக் கலந்து கொண்டு பரப்புரைக் குழுவுக்கு உரிய முன்னேற்பாடுகளைச் செய்திருந்தனர்.
செய்தித் தொகுப்பு : மதுரை யாழ்மொழி
பெரியார் முழக்கம் 06032014 இதழ்