உள்ளூர் ஆதிக்க ஜாதி காவல்துறை அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்க! மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி விமலா தேவியை கொலை செய்தவர்கள் – உடந்தையாக இருந்த காவல்துறை யினரைக் கைது செய்யக் கோரி, மதுரையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சியில் 26 அக்டோபர் 2014ல் நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், உசிலம்பட்டி விமலாதேவியின் கவுரவக்கொலையை கண்டித்தும், திருமண விவகார தலையீட்டு தடுப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றக் கோரியும், மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 11.11.2014 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திருவள்ளுவர் சிலை எதிரில் திராவிடர் விடுதலைக்கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் துவக்கத்தில், சென்னை அருள்தா°, சென்னை நாத்திகன் ஆகியோர் ஜாதி மறுப்பு பாடல்களை பாடினர். பின்பு கோரிக்கைகளை வலியுறுத்தி, திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினர் கோபி.இராம இளங்கோவன், மே 17 இயக்க பொறுப்பாளர் கார்த்திகேயன், தமிழ் தமிழர் இயக்க பொறுப்பாளர் பரிதி, திராவிடர் விடுதலைக் கழக மதுரை தோழர் மாப்பிள்ளை சாமி, கழக வழக்கறிஞர் துரை அருண், தமிழக மக்கள் புரட்சிக் கழக பொதுச்செயலாளர் அரங்க குணசேகரன், தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் மீ.த.பாண்டியன், பொறியாளர் மதுரை தளபதி, மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பகவத்சிங் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் இறுதியாக உரையாற்றினார். அவர் தனது உரையில்,
உசிலம்பட்டி விமலாதேவியின் கௌரவக் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளையும், அக்கொலைக்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகளையும், தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு உடனடியாக கைது செய்யவேண்டும். மேலும், மத்திய சட்ட ஆணையம் 2012ல் வடிவமைத்து கொடுத்திருக்கின்ற திருமண விவகார தலையீட்டு தடுப்பு சட்டத்தை தமிழக அரசு கால தாமதம் செய்யாமல் உடனடியாக அமல்படுத்தவேண்டும். அதோடு தமிழகம் முழுவதும் காவல்துறையில் பணியாற்றுகின்ற ஆதிக்க ஜாதியை சார்ந்த காவல்துறை அதிகாரிகளை உடனடியாக வெவ்வேறு பகுதிகளுக்கு பணியிட மாற்றம் செய்யவேண்டும். இந்த காரணத்தை கொண்டு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சார்ந்த காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யாமல் அந்த அந்த பகுதிகளில் பணியாற்ற அனுமதிக்க வேண்டுமென கூறி உரையாற்றினார்.
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண் டிருக்கும் போது உசிலம்பட்டி விமலாதேவி கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியும், கொலை வழக்கில் சரியாக விசாரணை செய்யாத உசிலம்பட்டி காவல் ஆய்வாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும் பிறப்பித்த உத்தரவு செய்தி வந்தது. இதனை கழக தலைவர் கொளத்தூர் மணி, தோழர்களின் பலத்த கரவொலிக்கு இடையே அறிவித்தார்.
கண்டன ஆர்பாட்டத்தின் முன்னேற்பாடுகளை ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளர் தலைமைக்குழு உறுப்பினர் தூத்துக்குடி பால்பிரபாகரன் தலைமையில், தலைமைக்குழு உறுப்பினர்கள் ஈரோடு ரத்தினசாமி, திருப்பூர் துரைசாமி, திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, மேலூர் மா.பா.மணிகண்டன், மதுரை மாப்பிள்ளை சாமி இவர்களுடன் பொறியாளர் தளபதி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். ஆர்ப்பாட்ட முடிவில் மதுரை மாவட்ட செயலாளர் பாண்டியன் நன்றி கூறினார். தமிழகம் முழுதுமிருந்தும் தோழர்கள் திரண்டு வந்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்து தோழர் களுக்கும் ஆர்ப்பாட்ட முன்னேற்பாடு குழுவினர் மதிய உணவு சிறந்த முறையில் செய்திருந்தனர். ஆர்பாட்டத்தையொட்டி மதுரை மாநகர் முழுவதும், வண்ண சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. கண்டன ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி இருநாட்கள் மதுரை மாநகர் முழுவதும் கழக தோழர்கள் பொதுமக்களிடம் துண்டறிக்கைகள் விநியோகித்து பிரச்சாரம் செய்தனர்.
செய்தி : மன்னை காளிதாஸ்

பெரியார் முழக்கம் 20112014 இதழ்

You may also like...

Leave a Reply